`இது தான் என்னுடைய கருப்பி' - வரவேற்பைப் பெறும் பரியேறும் பெருமாள் பெட் சேலஞ்ச்!

ஆனந்த விகடனில் பிரபலமான தொடராக வெளிவந்த "மறக்கவே நினைக்கிறேன்" எழுதிய எழுத்தாளரும் இயக்குநர் ராமின் பட்டறையிலிருந்து வந்தவருமான மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் பரியேறும் பெருமாள்.

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரடெக்ஷன்ஸ்  தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் திருநெல்வேலி சுற்று வட்டாரங்களில் படமாக்கப்பட்டது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும், செல்லப் பிராணியான நாயை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடத்தில் வரவேற்பைப் பெற்றன. இதில் கறுப்பி என்ற பாடலை ராப் முறையில் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.

தன் தொலைந்து போன நாயைப் பற்றிய வலியுடன் கூடிய வரிகளை உடையப் பாடலான இது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இதன் நீட்சியாக நேற்று படக்குழுவினரின் முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் #pariyerumperumalPET என்ற ஹேஷ்டேக்குடன் தங்கள் செல்லப் பிராணியான நாயுடன் எடுத்த புகைப்படுத்தையும், அதனோடு  தங்களின் அனுபவத்தை பத்து வரிகளுக்குள் எழுதிப் பதிவிடுமாறு கூறியிருந்தனர்.

இதற்குப் பிரபலங்கள் மற்றும் பொது மக்களிடத்திலிருந்து வெகுவான வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குநர் நவீன் "தன் வீட்டில் ஒருவனாக இருக்கும் தன் தம்பி சிப்பி, அவனிடம் ஆதிக்கம் செலுத்த நினைத்தால் கடி நிச்சயம்" என தன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதேபோல் நடிகர் சித்தார்த், நடிகர் கலையரசன் , நடிகர் தினேஷ்  உள்ளிட்ட பிரபலங்களும், பொது மக்கள் பலரும் #pariyerumperumalPET சேலஞ்ச் விளையாட்டில் பங்கேற்று தங்கள் செல்ல நாயுடன் எடுத்த புகைப்படங்களையும், தங்கள் அனுபவங்களையும் பதிவிட்டுள்ளனர். நேற்றிலிருந்து ட்விட்டரிலும், முகநூலிலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது இந்த PET சேலஞ்ச்.

நாயைக்கூட தன் வீட்டில் ஒருவனாகப் பாவிக்கும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளிவரவிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!