வெளியிடப்பட்ட நேரம்: 03:04 (24/09/2018)

கடைசி தொடர்பு:08:45 (24/09/2018)

சிட்னி விமான நிலையத்தில் நிறப் பாகுபாடு - கொதித்த இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி!

'ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில், பெண் அதிகாரி ஒருவர் தன்னிடம் நிறப் பாகுபாட்டின் காரணமாக காழ்ப்பு உணர்ச்சியுடன் நடந்துகொண்டார்' என்று பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார். 

ஷில்பா ஷெட்டி

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, நேற்று ஆஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து மெல்போர்ன் செல்வதற்காக விமானநிலையம் சென்றுள்ளார். அப்போது, உடைமைகள் சோதனை செய்யும் இடத்திலுள்ள பெண் அதிகாரி ஒருவர், தன்னிடம் நிறப் பாகுபாட்டின் காரணமாக காழ்ப்பு உணர்ச்சியுடன் நடந்துகொண்டார்' என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்த அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், 'சிட்னி விமானநிலையத்தின் சோதனை செய்யும் வரிசையில், நற்பண்பற்ற மெல் என்ற உடைமைகளைச் சோதனைச் செய்யும் பெண்ணைச் சந்தித்தேன்.

பழுப்பு நிறம் கொண்ட நம்மிடம் கடுப்புடன் நடந்துகொள்வது சரியானதுதான் என்று அவர் முடிவு எடுத்துக்கொண்டார். என்னிடம் இரண்டு பைகள் இருந்தன. என்னிடமிருந்த பெரிய அளவிலான ஒரு பையை வேறு ஒரு வரிசையில் சென்று சோதனை செய்யக் கட்டாயப்படுத்தினார். அந்த வரிசையில் இருந்த பெண் மரியாதையாகப் பேசினார். இந்தப் பையை நீங்கள் அடுத்த வரிசையில் சோதனை செய்யலாம் என்றார். அவர் குறிப்பிட்ட அந்த வரிசை 5 நிமிடத்தில் மூடுவதற்கு தயாராக இருந்தது. என்னுடைய பையை நேரடியாகச் சோதனை (Manual check) செய்யும்போது, 5 நிமிடத்தில் சோதனை செய்யமுடியாது. அதனால், நான் மீண்டும் மெல் என்ற பெண்ணிடம் சென்று பையைச் சோதனைசெய்ய கோரிக்கைவைத்தேன்.

அந்தப் பெண்ணின் நண்பரும் என்னுடைய பையை அவரையே சோதனைசெய்ய வலியுறுத்தினார். ஆனால், என்னுடைய பையைச் சோதனைசெய்ய மெல் மறுத்துவிட்டார். மறுபடி, என்னுடைய பையைச் சோதனை செய்ய வேறு ஒரு வரிசைக்கு வேகமாக ஓடிச் சென்றேன். இதை குவான்டஸ் ஏர்லைன் நிறுவனம் தெரிந்துகொள்ள வேண்டும். பயணிகளுக்கு உதவும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் மற்றும் நிறத்தின் அடிப்படையில் ஒருவரிடம் கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது என்றும் அவர்களுடைய பணியாளர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மரியாதையற்ற தன்மையை பொறுத்துக்கொள்ள முடியாது' என்று பதிவிட்டுள்ளார்.