Published:Updated:

எட்டெட்டு!

எட்டெட்டு!

எட்டெட்டு!

எட்டெட்டு!

Published:Updated:

பாதித்த சம்பவம்
பி.ஹெச்.அப்துல்ஹமீது
நிகழ்ச்சி அறிவிப்பாளர்.

எட்டெட்டு!

''அமெரிக்காவில் இயங்கும் 'தமிழ்நாடு அறக்கட்டளை’யின் அழைப்பில் ஃபிலடெல்பியாவில் மூன்று தினங்கள் நடந்த மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு 'வள்ளல் மனம்’ கொண்டோருக்கான விருதுகள் பெற்றவர்களின் அதிகபட்ச வயது 16. ஒரு சிறுமி தனது மூன்றாவது வயதில் இருந்தே தனக்குப் பிறந்த நாளில் பரிசாகக் கிடைக்கும் பொருள், பணம் அனைத்தையும் சேகரித்து, தமிழகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அனுப்பி வருகிறார். மற்றொரு மாணவி, தனி ஆளாக 40 ஆயிரம் டாலர்கள் சேகரித்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியிருக்கிறார். எங்கோ பல்லாயிரம் மைல் கடந்து வாழ்ந்தாலும், சிறு வயதிலேயே மனிதநேயப் பண்புகளை விதைத்து வளர்க்கும் பெற்றோர்களை வாழ்த்தி வணங்கத் தோன்றியது!''

 சென்ற இடம்
சங்கீதா, பின்னணிப் பாடகி.

எட்டெட்டு!

''திருவண்ணாமலைக்கு அடிக்கடி போவேன். அங்கு 'ஸ்பர்ஷா’னு ஓர் இடம் இருக்கு. இயற்கையைப் பாதிக்காத முறையில் தயாரிக்கப்பட்ட உணவு மட்டும்தான் கிடைக்கும். சிகரெட், ஆல்கஹாலுக்கு அங்கே அனுமதி கிடையாது. அங்கே முழுக்க மாட்டு வண்டியிலேயே சுத்திப் பார்க்கலாம். மாட்டில் பால் கறக்க சொல்லித் தருவாங்க. பறவைகளுக்குத் தீனி வைக்கலாம். ரொம்ப அமைதியான சூழல். ஆசிரமம்னு நினைச்சுராதீங்க. ரிசார்ட்தான். ஐ லவ் ஸ்பர்ஷா!''

 கேட்ட இசை
ஷில்பா மேனன்
சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

எட்டெட்டு!

''சிம்பு எழுதிப் பாடின 'எவன்டி உன்னைப் பெத்தான்... பெத்தான்... பெத்தான்... என் கையில கெடைச்சா செத்தான்’கிற 'வானம்’ படப் பாட்டுதான் இப்போ என் ஹிட் ஹாட் ஃபேவரைட். செம ஜாலி கேலி ஸாங். வழக்கமான சினிமா பாட்டு மாதிரி இல்லாம ரொம்ப இயல்பா, ஃப்ரெண்ட்கூடப் பேசுறது மாதிரி எழுதி இருக்காங்க. பாட்டு கேட்டா, எவ்வளவு சீரியஸ் மூடில் இருந்தாலும் ஜாலி மூடுக்கு வந்துடலாம்!''

 சந்தித்த நபர்
தியோடர் பாஸ்கரன், சமூக ஆர்வலர்.

எட்டெட்டு!

''வட கர்நாடகத்தில் கொப்பால் என்ற இடத்தில் 'மானஸா’ என்கிற 11 வயதுச்சிறுமி யைச் சந்தித்தேன். அங்கு தேவதாசிகளுக்குப் பிறந்த பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதற்காக 'விஷ்டார்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். அந்த மையத்தில் நிறையப் பெண் குழந்தைகளுக்குக் கல்வியும் கைத்தொழில் பயிற்சிகளும் அளிக்கிறோம். அவர்கள் அனைவருமே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களில் ஒருத்திதான் இந்த மானஸா. அவளுக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்று தெரிந்தபோதும், ஒவ்வொரு நாளையும் அவ்வளவு அழகாக ரசித்து வாழ் கிறாள். அங்கு புதிதாகக் கட்டப்பட்ட விடுதியின் திறப்பு விழாவுக்கு, தலைமை தாங் கியது மானஸாதான். 'விஷ்டார்’ என்றால் 'வெளி’ என்று அர்த்தம். அந்த வெளி யைத் தன் அழகான வாழ்க்கையால் நிரப்பிக்கொண்டு இருக்கிறாள் மானஸா!''

 வாங்கிய பொருள்
ஸ்ருதி, சின்னத்திரை நடிகை.

எட்டெட்டு!

''புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக மூணு செட் சுடிதார் வாங்கினேன். அனார்கலி பிராண்ட். சிந்தெடிக் துணியில் விதவிதமான டிசைன்கள் போட்டு எம்ப்ராய்டரி வொர்க். கோல்டன் கலரில் அவ்ளோ அழகா இருக்கு. மொத்தமா ஒரு மணி நேரத்தில், 4,000 காலி. எப்பவும் ஜீன்ஸ், டி-ஷர்ட்னு சுத்திக்கிட்டு இருப்பேன். சும்மா ஒரு சேஞ்சுக்கு சுடிதார் வாங்கினேன். எல்லாமே அம்மா செலெக்ஷன்தான். பதிலுக்கு நானே அம்மாவுக்கு ஒரு சேலை செலெக்ட் பண்ணேன். அம்மா முகத்துல அவ்வளவு சந்தோஷம்!''

 பார்த்த படம் ராம், இயக்குநர்.

எட்டெட்டு!

''சென்னையில் நடந்த சர்வதேசத் திரைப் பட விழாவில் 'ப்யூட்டிஃபுல்’ என்கிற ஸ்பானிஷ் மொழித் திரைப்படம் பார்த்தேன். படத்தில் என்னை மிகக் கவர்ந்தது வசனங்கள்தான். 'உலகத்தில் யாரையும் நம்பலாம். ஆனால், அப்பாவை மட்டும் நம்பக் கூடாது. அதிலும் பசியுடன் காத்திருக்கும் குழந்தைகளின் அப்பாவை நம்பக் கூடாது!’ - இந்த வரி திரையில் வருவது ஒருமுறைதான். ஆனால், படம் முடிந்தவுடன் அந்த வசனம் ஏற்படுத்திய தாக்கம் சில நாட்களுக்கு நீடித்தது. கடந்த ஒரு வருடத்தில் நான் பார்த்த படங்களிலேயே என்னை மிகவும் பாதித்த படம் இதுதான்!''

 படித்த புத்தகம்
வைகைச் செல்வன்
அ.தி.மு.க. இலக்கிய அணிச்    செயலாளர்.

எட்டெட்டு!

''பேச்சு என்பது கேட்பவர்களைக் கட்டிப்போட வேண்டும். பேசி முடித்தவுடன் பேச்சாளரைக் கட்டிப்போட்டுவிடக் கூடாது. பேசுகின்ற விஷயத்தில் ஞானம், பேசும் மொழியில் சரளம், ஒழுங்கான உச்சரிப்பு, சபை உணர்ந்து பேசும் லாகவம்கொண்ட எவரும் சிறந்த பேச்சாளராக முடியும். இதைச் சிறப்பான உதாரணங்களுடன் விவரிக்கிறது டேல் கார்னகி எழுதிய 'மேடைப்பேச்சுக் கலை’ (The Art of Public Speaking) புத்தகம். மேடைப் பேச்சு  என்னும் அற்புதக் கலையின் நுணுக்கங்களை அழகாக விவரிக்கும் நூல்!''

 கலந்துகொண்ட நிகழ்ச்சி
கோ.நம்மாழ்வார், இயற்கை வேளாண் விஞ்ஞானி.

எட்டெட்டு!

'' 'உழவர்களை விடுதலை செய்வோம்’ என்ற பயணத்தின் நிறைவு விழா புதுடெல்லி காந்தி சமாதியில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் இருந்து 3,000-க்கும் அதிகமான விவசாயிகள் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் இயற்கை விவசாயத் துக்கு உழைக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 'கட்டிமேடு’ ஜெயராமன் என்பவருக்கு விருது வழங்கினார்கள். 47 பாரம்பரிய நெல் ரகங்கள் ஜெயராமனிடம் உள்ளன. இதை மற்றவர்களுக்கும் கொடுத்து வருகிறார். சமீபத்திய மழை வெள்ளத்தால் டெல்டா பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கிக்கிடக்கிறது. பசுமைப் புரட்சியின் விளைவாக குட்டை ரக நெல்லைப் பயிரிட்டதால்தான், மழை வெள்ளத்தில் நெற்பயிர்கள் மூழ்கிப்போயின. இதே நமது பாரம்பரிய நெட்டை ரகங்களான மாப்பிள்ளைச் சம்பா, குழியடிச்சான், காட்டுயானம் போன்றவற்றை நடவு செய்திருந்தால் வெள்ளத்தை வென்று நின்றிருக்கும். சரியான நேரத்தில், சரியான நபருக்கு விருது கொடுத்துள்ளார்கள்!''