வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (05/10/2018)

கடைசி தொடர்பு:12:55 (05/10/2018)

" ‘சர்கார்’ பற்றி மூச்..!" - படக்குழுவுக்கு ஏ. ஆர் முருகதாஸின் வார்னிங்

‘நெறிமுறையின்றி `சர்கார்' படத்தைப் பற்றி யாரும் பேசக்கூடாது’ எனப் படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். 

சர்கார்

நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் `சர்கார்'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அரசியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகி பாபு போன்ற பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கடந்த 2-ம் தேதி இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களால் தங்களின் போன்களிலேயே வெளியிடப்பட்டு பெரும் ஹிட் அடித்தது. முன்னதாக இப்படத்தில் நடிகர் விஜய் முதல்வராக நடிக்கிறார் என்ற தகவல் பரவி வந்த நிலையில், இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தான் அவ்வாறு நடிக்கவில்லை என மறுத்துள்ளார் விஜய். சர்கார், அரசியல் தொடர்பான படம் என்பதால், இது தொடர்பான விஷயங்கள் வெளியில் கசியாமல் பாதுகாத்து வருகின்றனர் படக்குழுவினர். 

இந்த நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ``அன்பான `சர்கார்' படக்குழுவினரே, இந்தப் படத்தை உருவாக்குவதற்காகப் பலர் கடுமையாக உழைத்துள்ளனர். இருப்பினும், நேர்காணல் என்ற பெயரில் பல ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் படம் தொடர்பான தகவல்களை வெளியில் தெரிவித்து வருகின்றனர். இது பிற்காலத்தில் தொடர்ந்தால் அவர்கள் மீது எந்தப் பாரபட்சமுமின்றி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.