வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (06/10/2018)

கடைசி தொடர்பு:15:22 (06/10/2018)

உலகத் திரைப்பட விழாவில் `சர்வம் தாளமயம்' ! - உற்சாகத்தில் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ், உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். அவர் நடித்த `சர்வம் தாளமயம்' தமிழில் ரிலீஸாகும் முன்பே உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளத் தேர்வாகியிருக்கிறது.

நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இரட்டைக்குதிரை சவாரி செய்துவரும் ஜி.வி.பிரகாஷ், உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். அவர் நடித்த `சர்வம் தாளமயம்', தமிழில் ரிலீஸாகும் முன்பே உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளத் தேர்வாகியிருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ்

இந்தப் படத்தை 'மின்சாரக் கனவு', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் எடுத்திருக்கிறார். `இசை சம்பந்தப்பட்ட கதை என்பதாலும், ஒரு இளைஞனைப் பற்றிய கதை என்பதாலும், ஜி.வி.பிரகாஷ் என் படத்தின் ஹீரோவாக ஆனார்' என்று  படம் ஆரம்பித்தபோது ராஜீவ் மேனன் சொல்லியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் இயக்கும் இந்தப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்,  ஏ.ஆர்.ரஹ்மான்.

ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில், இம்மாதம் நடைபெற்று வரும் 31-வது  திரைப்பட விழாவில், 'உலகக் கவன ஈர்ப்பு' என்ற பிரிவின் கீழ், `இசை, நாடகம்' என்ற வகைப்பாட்டில் இப்படம் திரையிடப்படுகிறது. திரையிடப்படும் இடங்களில் இந்தப் படத்தின் பெயர் 'மெட்ராஸ் பீட்ஸ்'! நிறையப் படங்களில் நடித்துவந்த ஜி.வி.பிரகாஷ், மிகப்பெரிய ஹிட் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கிறார். தற்போது இந்தச் செய்தி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ்

`சேரியிலிருந்து கிளம்பிப் போய் பல போராட்டங்களைக் கடந்து, தன் இசை ஆளுமையால் உலகக் கவனம் பெறும் ஒரு சாமான்ய இளைஞனின் கதை!' என்கிறார் படத்தின் இயக்குநர் ராஜீவ் மேனன். அவருடைய நண்பரும் படத்தின் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான், உயிரை உருக்கி நிறையப் பரிசோதனைகள் செய்து இந்தப் படத்துக்காக இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். 'படத்தில் பணியாற்றிய மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், இசை எல்லைகளைக் கடந்து உலகில் உள்ள எல்லோருக்குமானதாக இருக்கும். அவ்வளவுதான் சொல்ல முடியும்!' என்று சிரிக்கிறார் இசைப்புயல். 

'இந்தப் படமும் வசந்தபாலனின் `ஜெயில்' படமும் எனக்கு வேறொரு முகத்தைக் கொடுக்கும். கமர்ஷியலாக கவனிக்கப்பட்ட நான், இதுபோன்ற நடிப்புக்கு ஸ்கோப் உள்ள படங்களிலும் இனி கவனம் செலுத்துவேன்!' என்று சொல்கிறார் ஹீரோ-கம்-இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். 

சர்வம் இசை மயம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க