`எதைப் போட்டுக் கழுவினாலும் சாதி போகாது!’ - `பரியேறும் பெருமாளை'க் கொண்டாடிய விஜய் சேதுபதி | Vijay sethupathi praises pariyerum perumal

வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (06/10/2018)

கடைசி தொடர்பு:18:11 (06/10/2018)

`எதைப் போட்டுக் கழுவினாலும் சாதி போகாது!’ - `பரியேறும் பெருமாளை'க் கொண்டாடிய விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில், ஒளிப்பதிவாளர் பிரேம் குமாரின் இயக்கத்தில் வெளியான படம் `96. படம் வெளியானதைத் தொடர்ந்து மக்களிடையே பாசிட்டிவாகப் பேசப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து `96 படக்குழு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் பிரஸ்மீட் நடந்தது.

96

இதில் தயாரிப்பாளர் நந்தகோபால், லலித், விஜய் சேதுபதி, பாடகி சின்மயி, தேவதர்ஷினி, ஒளிப்பதிவாளர்கள் சண்முகம், மகேஷ், எடிட்டர் கோவிந்த் ராஜ், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, `ஆடுகளம்' அருள்தாஸ், ஆதித்யா பாஸ்கர், தேவதர்ஷியின் மகள் நியாத்தி கடம்பி ஆகிய பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பல்வேறு விஷயங்களை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்த விஜய் சேதுபதி, `96 படத்துடன் வெளியான `பரியேறும் பெருமாள்' மற்றும் `ராட்சசன்' படத்தைப் பாராட்டிப் பேசினார். எல்லோரும் பேசி முடித்தபின் இறுதியாகப் பேசிய விஜய் சேதுபதி, ``தமிழ் சினிமா இப்போ ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. `பரியேறும் பெருமாள்' படம் ரொம்ப சிறப்பா இருக்கு. நிறைய பேர் கொண்டாடினாங்க. அதுக்கு உங்களுக்கு ஒரு நன்றி. சர்ஃப் எக்ஸல், ஏரியல், எது போட்டுக் கழுவினாலும் மாறாத ஒண்ணு சாதி. அதனுடைய தீவிரத்தையும் தீவிரவாதத்தையும் ரொம்ப அழகா சொன்ன படம். அதை நீங்க ரொம்ப அழகா கொண்டாடினீங்க. அடுத்ததா வெளியான `ராட்சசன்' படமும் ரொம்ப நல்லா இருக்கு. இந்த ரெண்டு படத்துக்கும் என்னுடைய வாழ்த்துகள்" எனக் கூறிவிட்டு `96 படத்தைப் பற்றிப் பேசினார்.