வெளியிடப்பட்ட நேரம்: 20:38 (07/10/2018)

கடைசி தொடர்பு:09:06 (08/10/2018)

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிகை? - தயாரிப்பாளரின் விளக்கம்

உலகப் புகழ்பெற்ற உளவாளிக் கதாபாத்திரமான ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தில் நடிகை ஒருவர் நடிப்பாரா என்ற கேள்விக்கு அந்தப் படங்களில் தயாரிப்பாளர் பார்பரா ப்ராக்கோலி பதிலளித்திருக்கிறார். 

ஜேம்ஸ் பாண்ட்

Photo Credit: 007.com

இயான் ஃபிளமிங் எழுதிய நாவலை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் - 007 கதாபாத்திரம், உலக ரசிகர்களிடையே வெகு பிரபலம். அவரது நாவலை அடிப்படையாகக்கொண்டு, கடந்த 1959-ம் ஆண்டு 'டாக்டர்.நோ' படம் வெளியானது. அந்தப் படத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் சீன் கானெரி நடித்திருந்தார். அவருக்குப் பின்னர், ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் காலத்துக்கு ஏற்றவாறு நடிகர்கள் நடித்துவருகிறார்கள். அந்த வரிசையில், கடைசியாக வெளியான 4 ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும் டேனியல் கிரேக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் வெளியாக இருக்கும் 25-வது படத்துடன் டேனியல் கிரேக் விடைபெறுகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்தை `ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தை இயக்கிய டேனி போயல் இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. சில காரணங்களுக்காக அவர் மாற்றப்பட்டு கேரி ஃபுகுநாகா இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. படம் 2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி வெளியாகிறது. 

டேனியல் கிரேக்-க்குப் பிறகு ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என்ற மில்லியன் டாலர் கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்துக்கான ரேஸில், ஹாலிவுட் நடிகர்கள் பலரின் பெயர்கள் இருந்தாலும், அந்த ரேஸில் இட்ரிஸ் எல்பா முந்தி நிற்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோல், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிகை ஒருவர் ஏன் நடிக்கக் கூடாது என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது. கடந்த 2002ம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் பாண்ட் படமான ரோஸ்மண்ட் பைக், `ஜேம்ஸ் பாண்ட் போன்ற சவலான கேரக்டரில் பெண் ஒருவர் ஏன் நடிக்கக் கூடாது?’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார். 
இந்தக் கேள்விக்கு ஜேம்ஸ் பாண்ட் பிரான்சைஸின் தயாரிப்பாளர் பார்பரா ப்ராக்கோலி பதிலளித்திருக்கிறார். அவர் கூறுகையில், `ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் ஒரு ஆணை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது. பாண்ட் என்றால் அவர் ஆண்தான். ஆண் கதாபாத்திரத்தில் பெண்ணை நடிக்க வைக்க வேண்டாம் என நான் நினைக்கிறேன். அந்தக் கதாபாத்திரம் ஆணாக நீடிக்கட்டும். பெண்களை மையப்படுத்தி, அவர்களுக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். `தி கார்டியன்’ இதழுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்.