வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (08/10/2018)

கடைசி தொடர்பு:15:00 (08/10/2018)

வீடியோ கால் செய்த சுட்டிக் குழந்தை - குஷியான ஏ.ஆர் ரஹ்மான்!

இந்திப் பாடகர் ஒருவரின் ஒரு வயது பெண் குழந்தை ஏ.ஆர் ரஹ்மானுக்கு தவறுதலாக வீடியோ கால் செய்துள்ளார். இதைப் பார்த்த அவர் மிகவும் குஷியானதாக தெரிவித்துள்ளார். 

ரஹ்மான்

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தற்போது லண்டனில் 2.0 படத்தின் பின்னணி இசை வேலைகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், இந்தி திரையுலகைச் சேர்ந்த பின்னணிப் பாடகர் அட்னன் சமியின் ஒரு வயது பெண் குழந்தை இரு தினங்களுக்கு முன்பு தன் தந்தை போனில் இருந்து தவறுதலாக ஏ.ஆர் ரஹ்மானுக்கு வீடியோ கால் செய்துள்ளார். உடனே போனை எடுத்த ரஹ்மான் குழந்தையுடன் சிரித்துப் பேசி விளையாடியுள்ளார். இதுகுறித்து கடந்த 6-ம் தேதி சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்த அட்னன், `` போனுக்கு பாஸ்வேர்டு போடும் நேரம் வந்துவிட்டது. என் குழந்தை மெடினா என் போனை எடுத்து ஏ.ஆர் ரஹ்மானுக்கு வீடியோ கால் செய்துவிட்டார். பிறகு இருவரும் பேசினர். தொடர்ந்து லண்டனில் 2.0 படத்துக்கு இசையமைக்கும் ரெக்கார்டிங் ஸ்டுடியோவை அவளுக்குச் சுற்றிக்காட்டினார்” எனப் பதிவிட்டிருந்தார். 

இதையடுத்து, தற்போது இதற்குப் பதிலளித்துள்ள ரஹ்மான், ``அன்புள்ள அட்னன். அவளின் வீடியோ கால் என் எரிச்சலான மனநிலையை, பணிச் சுமைகளை மாற்றிவிட்டது. நன்றி மெடினா. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்” எனப் பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு சமூகவலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கு, ``நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன். நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க நான் கடவுளைப் பிரார்த்தனை செய்கிறேன்.  உங்களின் விலையுயர்ந்த ஆசீர்வாதங்கள் மடினாவுக்கு கிடைத்துள்ளது” என அட்னன் மீண்டும் பதிலளித்துள்ளார்.