வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (08/10/2018)

கடைசி தொடர்பு:18:09 (09/10/2018)

`அது தியாகராஜன் குமாரராஜாவோட ஐடியாதான்!’ - `சூப்பர் டீலக்ஸ்’ வடிவேலு வெர்ஷன் குறித்து டிசைனர் கோபி

சூப்பர் டீலக்ஸ்

தமிழ் சினிமாவில் `ஆரண்ய காண்டம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் (பக்ஸ்), காயத்ரி, விஜய் ராம் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் தயாராகியுள்ள `சூப்பர் டீலக்ஸ்' படத்தை, தயாரித்து இயக்குகிறார் தியாகராஜன் குமாரராஜா. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது.  

சூப்பர் டீலக்ஸ்

ஃபர்ஸ்ட் லுக் வெளியான சிறிது நேரத்திலே இந்திய அளவில் டிரெண்ட் ஆனது இப்படத்தின் போஸ்டர். இந்தப் போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் இன்னொரு போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. ஏற்கெனவே வெளியான போஸ்டரின் வடிவேலு வெர்ஷன்தான் அந்தப் புதுப் போஸ்டர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் உள்ள அனைத்துக் கேரக்டருக்கும் இணையான வடிவேலு படங்களை வைத்து உருவாக்கப்பட்டிருந்த இந்தப் போஸ்டரும் செம்ம வைரல். படக்குழுவினரே இந்தப் போஸ்டரை வெளியிட்டிருந்தனர். படத்தின் கிராபிக்ஸ் டிசைனர் கோபி பிரசன்னாதான், இந்தப் போஸ்டரையும் டிசைன் செய்திருக்கிறார். இவர், மணிரத்னம் படங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்துள்ளார். `ஆரண்ய காண்டம்’ படத்துக்கும் இவர்தான் போஸ்டர் டிசைன் செய்துள்ளார். ஆரண்ய காண்டம் படம் அவருக்குப் பெரிய அளவில் பிரேக் கொடுத்ததாக அவரே தெரிவித்துள்ளார்.   

இந்த வடிவேலு வெர்ஷன் போஸ்டர் குறித்து அவரிடம் பேசினோம். “அந்தப் போஸ்டரை நான்தான் பண்ணினேன். அது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா ஐடியாதான். விஜய் சேதிபதி உள்ளிட்ட மத்த நடிகர்கள் யாருக்கும் இந்தப் போஸ்டர் பத்தி தெரியாது. போஸ்டர் வைரல் ஆன பின்னர்தான் தெரியும். அவங்களும் போஸ்டரைப் பாத்துட்டு செம்ம ஹேப்பி. எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. எல்லோரும் இதை ரொம்ப ஜாலியா எடுத்துக்கிட்டாங்க. எங்க டீமே அப்படித்தான். ஜாலியாக இருக்கும். இது பண்றதுக்கு முக்கிய காரணமே, எங்க போஸ்டர மத்தவங்க கலாய்ப்பதற்கு முன்னாடி, நாங்களே கலாய்ச்சிடலாம்ன்னு தான்” என்றார் குஷியாக. தன்னோட இரண்டு போஸ்டருகும் ஹிட் அடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார் கோபி. வாழ்த்துகள்.