வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (10/10/2018)

கடைசி தொடர்பு:12:05 (10/10/2018)

4 வது முறையாக இணையும் தனுஷ்- வெற்றி மாறன் கூட்டணி!- ரகசியத்தை உடைத்த அமீர்

`வடசென்னை' படத்தின் பிரஸ் மீட்டில் சுவாரஸ்யத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் அமீர். 

தனுஷ்
 

வெற்றி மாறன் - தனுஷ் வெற்றிக் கூட்டணியின் 3 வது திரைப்படம்தான் `வடசென்னை’. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கருணாஸ், கிஷோர், ராதாரவி, சீனு மோகன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே `வடசென்னை’ யில் முக்கியக் கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்கள். 

இத்திரைப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் 17-ம் தேதி உலகம் முழுவதும் `வடசென்னை’ ரிலீஸாகிறது. இந்நிலையில் இன்று சென்னை வளசரவாக்கத்தில் வடசென்னை படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. தனுஷ், வெற்றி மாறன், அமீர்,சந்தோஷ் நாராயணன், ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தனுஷ்
 

இந்நிகழ்வில் பேசிய அமீர் பல்வேறு முக்கியத் தகவல்களை போட்டுடைத்தார். அவர் பேசியதிலிருந்து...  `இந்தத் திரைப்படம் இயக்குநரின் படம். இத்திரைப்படத்தின் புகழ், வெற்றி அனைத்துமே அவரையே சேர வேண்டும். ஒரு நல்ல இயக்குநரால் மட்டும்தான் இத்தனை நடிகர்களை வைத்து இப்படியொரு படம் கொடுக்க முடியும். வெற்றி மாறன் -தனுஷ் கூட்டணியின் 3 வது படம் இது. ஒரு இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் 3 படத்துக்கான நட்பு சினிமாவில் பார்க்க முடியாத அரிதான ஒன்று. சில இயக்குநர்கள் ஒரு திரைப்படம் முடிந்ததுமே ஹீரோவுடன் ஈகோ பிரச்னை வந்துவிடுகிறது. ஆனால், வெற்றி மாறனால் மட்டும்தான் ஒரு நடிகருடன் எந்தப் பிரச்னையுமின்றி 3  படங்களை கொடுக்க முடியும். மேலும் அவரால் மட்டும்தான் தனுஷை வெவ்வேறு டைமன்ஷனில் காட்ட முடியும். தனுஷை வைத்து இயக்கப்போகும் அடுத்த படத்தின் கதையையும் வெற்றி மாறன் என்னிடம் சொல்லிவிட்டார். மிகவும் சிறப்பாக இருக்கிறது’ என்று முடித்தார் பிரமிப்புடன்.