வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (10/10/2018)

கடைசி தொடர்பு:12:49 (10/10/2018)

``அந்த அளவுக்கு எனக்குப் பெருந்தன்மை இல்லை”- சிம்புவுடன் நடிக்க வந்த அழைப்பு குறித்து தனுஷ் #VadaChennai

சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்தக் கவனமும் தற்போது `வடசென்னை' படத்தின் மீதுதான் உள்ளது. வெற்றி மாறன் - தனுஷ் வெற்றிக் கூட்டணியின் 3 வது திரைப்படம்தான் `வடசென்னை’. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கருணாஸ், கிஷோர், ராதாரவி, சீனு மோகன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே `வடசென்னை’யில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

தனுஷ்

இத்திரைப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் 17-ம் தேதி உலகம் முழுவதும் `வடசென்னை’ ரிலீஸாகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் வடசென்னை படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. தனுஷ், வெற்றி மாறன், அமீர், சந்தோஷ் நாராயணன், ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய நடிகர் தனுஷ்,  ``வடசென்னை கதையை வெற்றி மாறன் பண்ண ஆரம்பித்துப் பல வருடங்கள் ஆகிறது. அப்போது நானும் சரி, குறிப்பாக வெற்றி மாறனும், தெளிவாக இருந்தோம். இதைச் செய்வதுக்கு அப்போது சரியான மார்க்கெட் இல்லை. அதேபோல இது ரொம்பப் பெரிய கதை. அதுனால ஆடுகளம் பண்ணினோம். அப்புறம் ஒரு பிரேக் எடுத்து வேலை செய்யலாம்னு முடிவு பண்ணினோம். அப்புறம் வெற்றி மாறன் ஒருநாள் `வடசென்னை' படத்தை சிம்புவை வைத்துப் பண்ணலாம் என்று இருக்கேன்னு சொன்னார். நான் இப்போ படத்துல பண்ணிருக்க அன்பு கேரக்டரை சிம்பு பண்றதாகவும், படத்துல குமார்னு ஒரு பவர்ஃபுல் கேரக்டர் வருது, அத என்னைப் பண்ணச் சொல்லி கேட்டாங்க. நான் சொன்னேன், சார் எனக்குக் கொஞ்சம் பெருந்தன்மை இருக்கு. ஆனா அவ்ளோ பெருந்தன்மை எல்லாம் இல்ல. தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு இதுல உடன்பாடு இல்லைனு சொல்லிட்டேன். 

அப்புறம் எல்லாம் மறந்துட்டேன். நான் வேற வேற படங்களில் பிஸி ஆயிட்டேன். அதற்கப்புறம் ஒருநாள் மறுபடியும் கூப்பிட்டாரு. அப்போ, சில காரணங்களால `வடசென்னை' பண்ண முடியலனு சொன்னாங்க. சிம்புக்குச் சொன்ன கதையில் நான் உடனே நடிச்சா தேவையில்லாத சர்ச்சை வரும். நாம வேற கதை பண்ணலாம்னு நிறைய கதைகள் டிஸ்கஸ் பண்ணினோம். எல்லாக் கதையும் நல்லா இருந்திச்சு. அப்புறம் `விசாரணை' பண்ணிட்டு வரேன்னு பண்ணினார். பல வருஷம் கழிச்சு மறுமடியும் என்கிட்டே `வடசென்னை' வந்திச்சு. இதுல வெட்கப்பட ஒண்ணுமே இல்ல. காரணம், ஒரு நடிகருக்கு இந்தப் படம் மிக முக்கியமான படமா இருக்கும்” என்றார். 

இந்த விழாவில் பேசிய இயக்குநர் அமீர், 4 வது முறையாகவும் தனுஷ், வெற்றி மாறன் இணைந்து படம் பண்ணப்போறதா தெரிவித்தார். இந்தப் படம் வடசென்னை இரண்டாம் பாகத்துக்கு முன்னதாக தொடங்கவிருக்கிறார்கள். வடசென்னை படத்தில் விஜய் சேதிபதி பண்ண வேண்டிய கேரக்டரைதான் அமீர் பண்ணிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.