Published:Updated:

அம்மா... நான் உன் ஷோபா!

இர. ப்ரீத்தி

அம்மா... நான் உன் ஷோபா!

இர. ப்ரீத்தி

Published:Updated:
##~##

"வாங்க... வாங்க'' - அபிநயம் மிளிரும் ஷோபனா வின் கண்கள் அவருடைய மூக்குத்திக்குப் போட்டியாக ஒளிர்ந்தது. எளிமை, இனிமை, தன்மை... அன்றும் இன்றும் அதே அழகு கொஞ்சும் ஷோபனாவுடன் கொஞ்ச நேரம்...  

 ''டிசம்பர் சீஸனுக்குத் தயார் ஆகிட்டீங்களா?''

''ஓ... சூப்பரா! எனக்கு எப்பவுமே டிசம்பர் மாதம் ரொம்பப் பிடிக்கும். மழையும் இசையும் குளிரும் பரதமுமாக எனக்கு ரொம்பவே நெருக்கமான மாதம். 'இந்த வருஷம் இதுதான்’னு எப்பவும் கான்செப்ட் வெச்சுப் பண்ற பழக்கம் இல்லை எனக்கு. அப்போதைக்கு மனசுல என்ன தோணுதோ... அதை எனக்குப் பிடிச்ச மாதிரி கொடுப்பேன். கூட்டம் சேர்ப்பதற்காக என் ஸ்டைலை எப்பவும் மாத்திக்க மாட்டேன். இந்த வருஷம் என்னன்னு எனக்கே சஸ்பென்ஸா இருக்கு. பார்க்கலாம்!''

''உங்களோட 'கிருஷ்ணா’ நாட்டிய நாடகம் அபாரமான க்ரியேஷன். அவ்வளவு தூரம் நடனத்தில் ரசனை சேர்க்கும் நீங்கள், 'ராவணன்’ படத்துக்குப் பிறகு ஏன் சினிமாவில் வேலை செய்யலை?''

''மணிரத்னம்கிட்ட வேலை பார்க்கணும்கிறது என் ரொம்ப நாள் கனவு. அது சரியான நேரத்தில் 'ராவணன்’ மூலம் நிறைவேறிச்சு. நடன வகுப்புகள், பயிற்சி, நிகழ்ச்சினு தினமும் சுத்திட்டு இருக்கேன். ஆனா, சினிமாவில் ஒரு பாட்டுக்கே 10 நாளைக்கு மேல் நேரம் எடுத்துப்பாங்க. அவ்வளவு செலவழிக்கிற அளவுக்கு என்கிட்ட நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை!

அம்மா... நான் உன் ஷோபா!

பரத நாட்டியத்தைப் பொறுத்தவரை அது ஒரு அட்சய பாத்திரம். அதில் ஒவ்வொரு நாளும் கத்துக்க நிறைய விஷயம் இருக்கும். முன்னலாம் நிகழ்ச்சிக்கு ரிகர்சல் இல்லாமப் போய் ஆடிட்டு வருவேன். துளிப் பயமும் இருக்காது. ஆனா, 'எனக்காக வர்றவங்களை ஏமாத்தக் கூடாது’னு இப்போ ரொம்பவே பயந்து பார்த்துப் பார்த்து மெனக்கெடுறேன். ச்சும்மாவா... வயசும் ஆகுதுல!''

''நடனப் பள்ளி ஆசிரியர் அனுபவம் எப்படி இருக்கு?''

''ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் வாழ்நாளையே நடனத்துக்காக மட்டுமே ஒதுக்கியவள் நான். ஆனா, ஒரு டீச்சருக்குத் தேவையான பொறுமை என்கிட்ட இல்லவே இல்லை. அந்தக் குறை தெரியாம இருக்கத்தான் என் மாணவர்களுக்குக் கஷ்டமான நடனத்தைக்கூட ஹ்யூமரா சொல்லிக் கொடுப்பேன். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொருவிதமா இருப்பாங்க. அவங்களுக்கு ஏத்த மாதிரி சொல்லிக்கொடுப்பேன். ஒரு டீச்சராக இல்லாமல் ஃப்ரெண்ட் மாதிரிதான் நடந்துப்பேன். இப்பவும் எப்பவும் நான் அவங்களுக்கு 'ஷோபனா அக்கா’தான். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாகத்தான் எங்களின் ஒவ்வொரு நடன வகுப்பும் கழியும்!''

''நடிகை ஷோபனாவை இப்போ சினிமாவில் பார்க்கவே முடியலையே?''

''225 படம் நடிச்சிட்டேன். இதுக்கு மேல நான் நடிச்சு என்ன பண்ணப்போறேன்? சினிமா பார்க்கக்கூட இப்போ நேரம் இல்லை. சூர்யாவுக்காக 'ஏழாம் அறிவு’ படம் பார்க்க ரொம்ப ஆர்வமா இருந்தேன். ஆனா, இப்போ வரை நேரம் கிடைக்கலை. மத்தபடிஇப்போ தான் நான் என்னையே நல்லாப் பார்த்துக்க

அம்மா... நான் உன் ஷோபா!

ஆரம்பிச்சிருக்கேன். முன்னாடி தூக்கம் தொலைச்சு ஆடின நாட்கள் எல்லாம் உண்டு. ஆனா, இப்போ ரெண்டு நாள் சரியா தூங்கலைன்னாலும் சிஸ்டம் தகராறு பண்ணுது. என்னைப் பாத்துக்கத்தான் இப்போ அதிக நேரம் ஒதுக்குறேன். அதனால், இப்போதைக்கு சினிமாவுக்கு 'நோ... நோ’தான்!''

''சில்க்கின் வாழ்க்கையை மையமாவெச்சு வெளியான 'தி டர்ட்டி பிக்சர்’ படம்பத்தின விமர்சனங்களைக் கவனிச்சீங்களா?''

''சில்க்கை எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். அந்தப் பொண்ணு ரொம்ப அப்பாவி. யாருக்கும் சட்டுனு உதவும் இளகின மனசு. அதெல்லாம் அந்தப் படத்தில் வெளிப்பட்டதா நான் கேள்விப்படலை. ஆனா, வித்யா பாலனுக்காக அந்தப் படம் பார்க் கணும். நான் நடிச்ச 'மணிச்சித்ரதாழ்’ படத் தின் பாலிவுட் வெர்ஷனில் வித்யா பாலன் நடிச்சப்போ எனக்குப் பழக்கம். இப்போகூட கூப்பிட்டுப் படம்பத்திப் பேசினாங்க... பார்க்கணும்!''

''நடிகைகளுக்கு அப்போது கிடைத்த முக்கியத் துவம் இப்பவும் கிடைக்குதா?''  

''முன்னே இருந்த சினிமா வேற. இப்போ இருக்கிற சினிமா வேற! பத்மினி அம்மா, வைஜெயந்தி மாலாம்மா எல்லாம் ஒரு டான்ஸுக்கு எவ்வளவு மெனக்கெட்டு இருப்பாங்க? எல்லாமே கஷ்டமான நடன அசைவுகளா இருக் கும். அத்தனை நகைகளைப் போட்டுக் கிட்டு எப்படித்தான் ஆடினாங்க ளோனு நினைச்சா... ஆச்சர்யமா இருக்கும். இப்போ மாதிரி ஏ.சி, கேரவன் னுலாம் அப்போ ஷூட்டிங் ஸ்பாட்டில்  கிடையாது. என் அத்தைமார்கள் அடைஞ்ச உயரத்தை நான் இன்னும் தொடலை. அது தான் உண்மை!''

''பத்மினியம்மா உங்க அத்தைதானே... நிறைய டிப்ஸ் கொடுத்திருப்பாங்களே..?''

''அப்படித்தான் பலரும் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனா, எனக்கு ஒரு வயசா இருக்கும்போதே, அத்தை கல்யாணம் பண்ணிக்கிட்டு அமெரிக்கா போயிட்டாங்க. அப்புறம் நான் வளர்ந்த பிறகுதான் அவங்களைப் பார்த்தேன். டி.வி-யில் ஏதாவது படம் பார்த்துட்டு இருக்கும்போது வேகமா ஓடி வந்து, 'பாருடி... இவன்லாம் இன்னுமா நடிக்கிறான்? இன்னுமா இவனை வீட்டுக்கு அனுப்பாம இருக்காங்க?’னு ஆச்சர்யமா கேட்டுட்டுப் போவாங்க. மத்தபடி சினிமா பத்தி எதுவும் நாங்க பேசிக்க மாட்டோம்!''

''உங்க நெருக்கமான நண்பர்கள் எல்லாம் சினிமா சம்பந்தப்பட்டவங்கதானா?''

''ஹ்ம்ம்... யோசிச்சுப் பார்த்தா அப்படித்தான் தோணுது! மனசுவிட்டு யார்கிட்டயும் என் பிரச்னையைப் பேசிக்க மாட்டேன். கோபமோ, வருத்தமோ எதுவா இருந்தாலும் வெறி வந்த மாதிரி டான்ஸ் ஆடுவேன். இப்போ கொஞ்ச காலமாகத்தான் ரேவதி, ராதிகா, சுஹாசினினு மனசுவிட்டுப் பேச ஆரம்பிச்சிருக்கேன். எல்லாருமே நீண்ட நாள் பழக்கம்னாலும், இப்போதான் மனசுக்கு நெருக்கமாகி இருக்காங்க. எனக்கு நெருக்கமான ஒரே விஷயம், மியூஸிக்தான். மத்தபடி வீட்டுக்கு நான் ஒரு பொண்ணு. அதனால எப்பவும் தனியா இருக்க வேண்டிய சூழ்நிலை. கூடப் பிறந்தவங்க யாராவது

அம்மா... நான் உன் ஷோபா!

இருந்தா நல்லா இருக்குமேனு அப்பப்போ ரொம்ப வருத்தப்படுவேன். 'அவா இல்லேன்னா என்ன... அதுக்கும் சேர்த்துதான் நான் இருக்கேனே’னு சொல்ற மாதிரி, என் அம்மா எப்பவும் என்கூட சண்டை போட்டுட்டே இருப்பா. ரிட்டயர்டு டாக்டர். பாவம்... அவங்களும் என்னதான் பண்ணுவாங்க. இப்பவும் என் நடனப் பள்ளியில் யாருக்கும் உடம்பு சரியில்லைன்னா, அவங்கதான் ஓடோடி வந்து பார்ப்பாங்க. பயங்கர ஷார்ப். ஒரு டெலிபோன் நம்பரைக்கூட மறக்க மாட்டாங்க. அம்மாவை சமையலில் அடிச்சுக்க ஆளே இல்லை. அவங்க சமையல் ருசிக்காகவே அவங்க என்ன திட்டினாலும் அமைதியா வாங்கிப்பேன். அதனாலதான், இப்போ வரை நான் சமைக்கவே கத்துக்கலைனு நினைக்கிறேன். பாவம், பொண்ணு அவங்க சொல்படி வளர்வானு ஆசைப்பட்டு ஒவ்வொண்ணா சொல்லிட்டே இருந்தாங்க. ஆனா, நான் எனக்குத் தோண்றதை மட்டுமே செஞ்சுட்டு இருந்தேன். அதனாலயோ என்னவோ, அவங்க என்னை செல்லமா 'ஷோபா’னு கூப்பிட்டு 15 வருஷத்துக்கு மேல ஆச்சு!''