வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (11/10/2018)

கடைசி தொடர்பு:16:22 (11/10/2018)

`மனைவி இருக்கும்போதே இளம்பெண்களுடன் டேட்டிங்!’ - ஹிர்திக் ரோஷன் மீது கங்கனா புதுத் தாக்குதல்

மனைவி இருக்கும்போதே இளம்பெண்களுடன் டேட்டிங் செல்லும் ஹிர்திக் ரோஷனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என இந்தி நடிகை கங்கனா ரனாவத் புதுத் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.  

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான கங்கனா ரனாவத் - ஹிர்திக் ரோஷன் இடையே மீண்டும் மோதல் உருவாகியுள்ளது. கங்கனா ரனாவத் - ஹிர்திக் ரோஷன் இருவரும் பாலிவுட்டின் பிஸி நட்சத்திரங்கள். இருவரும் காதலித்து வந்ததாகவும், இதனால்தான் ஹிர்திக் மனைவி விவாகரத்து பெற்றுச் சென்றார் எனப் பாலிவுட் மீடியாக்கள் கூறி வந்தன. அதற்கு ஏற்றாற்போல் `நானும் ஹிர்திக்கும் காதலித்து வந்தது உண்மை. ஆனால், ஹிர்திக் காதலை ரகசியமாகவே நீட்டிக்க விரும்பியதால் அவரைவிட்டு விலகினேன்' எனக் கங்கனா புகார் கொடுத்தார். சுமார் 8 மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டில் இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவானது. தற்போது இந்தப் பிரச்னை ஓரளவுக்கு வெளிவராமல் இருந்த நிலையில் சமீபத்தில் குயின் பட இயக்குநர் விகாஸ் பாஹ்ல் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம்சாட்டினார் கங்கனா. `குயின் படப்பிடிப்பின்போது, என்னிடமும் விகாஸ் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்தார். படப்பிடிப்பில் பலமுறை என்னைக் கட்டிப்பிடித்தார். 

உங்கள் வாசனை எனக்குப் பிடித்திருக்கிறது என்பார்’ இவ்வாறு விகாஸ் பாஹ்ல் மீது கங்கனா குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஹிர்திக் ரோஷன் மீது கங்கனா புகார் ஒன்றைக் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடங்கங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``சிலர் தங்கள் மனைவிகளை வைத்துக்கொண்டு இளம்பெண்களுடன் சுற்றிவருகின்றனர். இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். உதாரணத்துக்கு ஹிர்திக் ரோஷனைக் கூறுகிறேன். ஹிர்திக் அவரின் மனைவி பின்னால் இருக்கும்போதே என்னுடன் டேட்டிங் செய்துள்ளார். மனைவி இருக்கும்போது இளம்பெண்களுடன் டேட்டிங் செல்லும் ஹிர்திக் ரோஷனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். அவருடன் இணைந்து யாரும் வேலை செய்யக் கூடாது' எனக் கூறியுள்ளார். 

இதற்கிடையே கங்கனா பாலியல் குற்றம்சாட்டிய இயக்குநர் விகாஸ் பாஹ்லின் `சூப்பர் 30' படத்தில் ஹிர்திக் நடிப்பதாக இருந்தது. ஆனால், பாலியல் குற்றச்சாட்டை அடுத்து `தவறான நடத்தை உள்ளவர்களுடன் வேலை செய்ய முடியாது' எனக் கூறி ஹிர்திக் அந்தப் படத்திலிருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க