வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (12/10/2018)

கடைசி தொடர்பு:15:41 (12/10/2018)

#MeToo எதிரொலி - 28 வருடங்களில் முதல்முறையாக ஷூட்டிங்கை நிறுத்திய அக்‌ஷய் குமார்!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது 28 வருட சினிமா வாழ்க்கையில் முதல்முறையாக #MeToo- வுக்காக தன் படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தியுள்ளார். 

அக்‌ஷய்

சில நாள்களாகவே சமூகவலைதளங்களில் எங்கு திரும்பினாலும் முதலில் அனைவரது கண்களிலும் படக்கூடியது #MeToo தான். பெண்கள் தங்களுக்கு நடந்த வன்கொடுமைகளை இந்த ஹாஸ்டேக் மூலம் வெளியில் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். இது ட்ரெண்டான பின்னர் சினிமா துறையில் உள்ள பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் கூறி வருகின்றனர். இதனால் சிறிய நடிகர், இயக்குநர் முதல் பிரபலமானவர்கள் வரை பலர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுத் தொடர் சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. 

இந்த நிலையில், #MeToo காரணத்தினால் தன் 28 வருட சினிமா வாழ்வில் முதல்முறையாக ஷூட்டிங்கை பாதியில் நிறுத்தியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். அவர் தற்போது சஜித் கான் (Sajid Khan) இயக்கத்தில் ஹவுஸ்ஃபுல் 4 (Housefull 4) என்ற படத்தில் நடித்துவருகிறார். #MeToo-வின் மூலம் சில பெண்கள் சஜித் கான் மீது தொடர் புகார்களைத் தெரிவித்து வந்தனர். இதில் கடுப்பான அக்‌ஷய் குமார் இத்தாலியில் நடைபெற்று வந்த படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு இந்தியா திரும்பியுள்ளார். மேலும் இதே படத்தில் பிரபல நடிகர் நானா படேகரும் நடிக்கிறார். அவர் மீதும் நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்து தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அக்‌ஷய் குமார், `` நான் நேற்று இரவுதான் இந்தியா வந்தடைந்தேன். வந்ததும் இங்கு நடக்கும் அனைத்து செய்திகளையும் படித்து பெரும் கவலையடைந்தேன். இந்த அனைத்து பிரச்னைகளும் முடியும் வரை ஹவுஸ்ஃபுல் 4 படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திவைக்கும்படி நான் தயாரிப்பாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். குற்றம் சுமத்தப்பட்டவர்களுடன் இணைந்து பணிபுரிய எனக்கு விருப்பம் இல்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தப் படத்தில் இருந்து இயக்குநர் சஜித் கான் நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.