Published:Updated:

வறுமையின் நிறம் சிவப்பு

வறுமையின் நிறம் சிவப்பு
பிரீமியம் ஸ்டோரி
வறுமையின் நிறம் சிவப்பு

நினைவோவியம்சந்தோஷ் - விக்னா - ஓவியம் : ஷண்முகவேல்

வறுமையின் நிறம் சிவப்பு

நினைவோவியம்சந்தோஷ் - விக்னா - ஓவியம் : ஷண்முகவேல்

Published:Updated:
வறுமையின் நிறம் சிவப்பு
பிரீமியம் ஸ்டோரி
வறுமையின் நிறம் சிவப்பு

`ரங்க் சலூன் & ஸ்பா’-வின் கிளை மேடவாக்கத்தில் வந்திருக்கிறது. டெல்லியின் பிரபலமான சலூன் அது. `தொடக்க விழா சலுகையாக ஃபேஷியலுக்கு ஐம்பது சதவிகிதம் தள்ளுபடிகூட உண்டு’ என்றெல்லாம் தினசரி யோடு வந்திருந்த விளம்பர நோட்டீஸ் காட்டியது. குறைந்த விலை என்பதற்காக முகத்தில் எக்ஸ்பெரிமென்ட் பண்ண தைரியம் இல்லாததால், நோட்டீஸை அப்படியே கடாசலாம் என நினைத்தபோதுதான் அந்த போட்டோவைக் கண்டேன். `கிளையின் தொடக்க விழாவுக்கு டெல்லியிலிருந்து அதன் முதலாளியம்மாவே வருகிறார்’ என இருந்தது. அந்த முகம் மனக்கண்ணில் ஒரு மின்னல் போல வெட்ட, உடனே சந்தோஷுக்கு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டு `தந்தன தந்தன தய்யன தந்தனா தனன தத்தனா தான தய்யன தந்தானா…’ என்று ஹம் பண்ண ஆரம்பித்தேன்.  

வறுமையின் நிறம் சிவப்பு

`யாரைச் சந்திக்கப்போறோம்?’ என்று சந்தோஷ் வாட்ஸ்அப் அனுப்பினான்.

`சர்ப்ரைஸ்’ என்றேன் நான்.

காலையில் சந்தோஷுடன் ஸ்பாட்டில் ஆஜரானேன்.

``கிழவியா உள்ளே போய் குமரியா வருவீங்க. உங்களுக்காக இங்கே காத்திருந்து காத்திருந்து நாங்க கிழவனாகிடுவோம், அதானே!” என்று சந்தோஷ் வம்பிழுத்தான்.

தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்து கூப்பன்களைக் கைகளில் ஏந்தியபடி க்யூ காத்திருந்தது. மணிப்பூரா, நாகலாந்தா, அசாமா என யூகிக்க முடியாத வடகிழக்குப் பெண்கள் யூனிஃபார்மில் சிரித்து, கூப்பன் வைத்திருந்தவர்களுடன் தடுமாறும் தமிழில் பேசியபடி, சுழல் நாற்காலிகளை நோக்கி அழைத்துச் செல்வார்கள் என நினைத்திருந்தால், உள்ளே பணிபுரியும் அத்தனை பேரும் தமிழர்கள். ஸ்பாவின் ரிசப்ஷனில் இருந்த தாராளமான சோபாவில் நானும் சந்தோஷும் அமர்ந்தோம். வரவேற்பறையில் இருந்த ஒல்லி அழகிய தமிழ் மகள் ``மேடம் இப்போ வந்திடுவாங்க” என்று கிசுகிசுப்பதுபோலச் சொன்னாள்.

``சரி, இப்பவாவது சொல்லு. யாரை மீட் பண்ணப்போறோம்?” என்றான் சந்தோஷ்.

இருபாலருக்குமான சலூன்தான் என்றாலும், கூப்பனை வைத்துக்கொண்டு நிற்பவர்களிலிருந்து வேலைசெய்பவர்கள் முதல் நான் வரை எங்கும் பெண்கள் மயம். `இந்த ஆண்கள் எல்லாம் ஆஃபருக்கு மயங்கு வதில்லையா!’ என யோசித்து முடித்துவிட்டு சந்தோஷுக்குச் சொன்னேன்...

``நாம தரிசிக்கப்போறது சாட்சாத் தேவியை...”

``எந்த தேவி?” என்று அசட்டையாக அவன் கேட்டு முடிப்பதற்குள் உள்ளேயிருந்து எங்களை நோக்கி வந்தார் தேவி.

``ஸாரி… ஸாரி… காக்க வெச்சுட்டேனா!” என்றார். `சின்னஞ்சிறு கிளியே...’ என்று பாடத் தோன்றும் அளவுக்கு கீச்சென்றிருந்தது குரல். `ஹஸ்கி வாய்ஸ்’ என ஆங்கிலத்தில் சொல்லி கொச்சைப்படுத்தக்கூடாத தமிழ்க் குரல்.

பட்டுச்சேலையின் முனையை வலது தோள் வழியாகக் கொண்டுவந்து முன்பக்கம் போர்த்தியிருந்தார். நெற்றியிலிருந்து இரண்டு இன்ச் இடப்பக்கம் தள்ளி ஆரம்பிக்கும் வகிடு. நரை இல்லாத முடி. படபடக்கும் பெரிய கண்கள். புன்னகையா, வெட்கமா எனப் பிரித்தறிய முடியாத உதடுகள். அழகான அதே ஐக்கானிக் மூக்கு. ஐம்பது வயதுக்குமேல் என்று நம்ப முடியவில்லை. பெரிய ஸ்பா முதலாளி என்கிற பந்தா எதுவும் தெரியாத அழகான எளிமை. நாங்கள் உட்கார்ந்திருந்த சோபாவின் குட்டிபோல இருந்த ஒற்றை சோபாவில் உட்கார்ந்து எங்களைப் பார்த்தார். நான் சந்தோஷைப் பார்த்தேன். சந்தோஷ், விழிகள் விரிய ஆச்சர்யமாக அவரை விழுங்கிக்கொண்டிருந்தான்.

``மேடம், ரங்கன் சார் எப்படி இருக்கார்?” என்று ஆரம்பித்தான். அவனுக்கு ஆள் யாரென்று தெரிந்துவிட்டது என்பதை எனக்குக் காட்டத்தான் இந்த முதல் கேள்வி.

``அவர் நல்லா இருக்கார். டெல்லியிலதான் இருக்கார். அங்கே எங்க `ரங்க் சலூன் அண்டு ஸ்பா’ பிசினஸ் நல்லா போகுது. தமிழ்நாட்டிலயும் ஆரம்பிக்கணும்கிறது அவரோட ஆசை. இப்போ, வேற சில வேலைகள்ல பிஸியா இருக்கார். அதான் நான் மட்டும் வந்தேன்.”

``இப்பவும் பாரதியார் பாடல்களெல்லாம் பாடுறாரா?” என்றேன் நான்.

``பாரதியார்னா அவருக்கு உசிராச்சே. எங்க சலூனைக்கூட முதல்ல திருவல்லிக்கேணியிலதான் ஆரம்பிக்கணும்னு  நினைச்சார். ஆனா, இடம் கிடைக்கலை” என்று சிரித்தார்.

``விட்டா கடயம், எட்டயபுரம்னு இடம் பார்த்திருப்பார்போல” என்றான் சந்தோஷ். நான் `என்னடா?’ என்பதுபோல அவனைப் பார்த்தேன். தேவி அதற்கும் சிரிக்கவே, சந்தோஷ் மேலும் உற்சாகமாகத் தொடர்ந்தான்.

``மேடம், வடஇந்தியா பக்கமே நீங்க செட்டிலானாலும் எங்களால... ஐ மீன் தமிழர்களால உங்களை இன்னும் மறக்க முடியலை. மறக்கவும் முடியாது.”

``என்ன இருந்தாலும் பொறந்த வீடாச்சே” என்று முடித்தேன் நான். தென்னிந்தியர்களுக்குத்தான் களையான முகம் என்பது என் அசைக்க முடியாத அபிப்பிராயம்.

``ரொம்ப தேங்க்ஸ்” என்று சொன்னாரா, சிணுங்கினாரா எனப் பிரித்தறிய முடியாத தேவதைக்குரல்.

``மேடம், அப்பெல்லாம் படிச்சவங்களுக்கு வேலை கிடையாது. ரங்கனெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டாங்க என்கிறது எங்களுக்குத் தெரியும். இப்போ இருக்கிற நிலைமையை எப்படிப் பார்க்கிறீங்க?” என்றேன் நான்.

சந்தோஷ் இடைமறித்து ``அப்போ ரங்கன் சலூன் வெச்சார். இந்தக் காலம்னா பக்கோடா போட்டிருப்பார்” என்றான்.

நான் `ஷ்யூ!’ என சந்தோஷைப் பார்த்துக் கண்களை உருட்டினேன். தேவி சிரித்துவிட்டுச் சொன்னார்.

``வறுமை இல்லாத உலகம்தான் ரங்கனுடைய கனவு. வெறும் பாத்திரங்களை வைத்து ரங்கனும் அவர் நண்பர்களும் சாப்பிடுறதைப்போல நடிச்சதை என்னால மறக்கவே முடியாது. நாங்க சேர்ந்து முடிவுபண்ணி, இந்த சலூனிலிருந்து வரும் லாபத்தில் ஒரு பங்கைக்கொண்டு உணவு விடுதி நடத்துகிறோம். அங்கே இருக்கும் உண்டியலில் விருப்பமான காசைப் போட்டால் போதும், உணவு உண்ண பணம் கட்டாயமில்லை. வேலை என்று தேடிவரும் ஒருவரையும் நாங்கள் திருப்பி அனுப்புவ தில்லை. செய்யும் தொழிலை ஆத்மார்த்தமாகச் செய்ய வேண்டும் என்பது மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கும் ஒரே தகுதி.

நிறைய பேர் தங்கள் படிப்புக்குப் பொருத்த மான வேலை கிடைத்ததும் இங்கிருந்து சென்று விடுவார்கள். அது எங்களுக்கும் மகிழ்ச்சிதான். என்ன நல்ல விஷயமென்றால், எந்த வேலையும் இழிவானதல்ல என்ற மனமாற்றத்தைக் காலம்  மக்களிடையே கொண்டுவந்திருக்கிறது. தவிர, இந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டால் எப்பேர்ப்பட்டவரும் ‘ஹேர்ஸ்டைலிஸ்ட்’ முன் தலைகுனியத்தான் வேண்டும்!” - நகைச்சுவை யோடு முடித்தார்.

வாசலில் வழி அனுப்ப வந்தவரிடம் ``மேடம், இப்ப நாடகமெல்லாம் நடிக்கிறதில்லையா நீங்க?'' என்றேன் நான்.

``நடிப்பைவிட முடியுமா? இந்த தேவியோட ரத்தத்துலேயே நடிப்பு கலந்திருக்கே?! இன்னமும் டெல்லியில் தமிழ் நாடகங்கள் போடுறோம். நீங்க இருவரும் ஒருமுறையாவது அவசியம் வரணும்!”

``பாரதியாரோட `நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி...’ பாடலை எப்ப கேட்டாலும் உங்களைத்தான் நினைச்சுப் பேன் மேடம்” என்றான் சந்தோஷ்.

நான் மனதுக்குள் `அடேய்’ என்று நினைத்துக்கொண்டேன். ஆனால், வெட்கத்துடன் கண்கள் கசிய சிரித்தார் தேவி.

``ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்படி ஒரு சந்திப்பை நான் எதிர்பார்க்கலை. தேங்க்ஸ்” என்றார்.

``மேடம், இதை நாங்கதான் சொல்லணும்” என்றேன்.

``இன்னிக்கு இரவு நான் கிளம்புறேன். அடுத்து எப்போ உங்களையெல்லாம் பார்ப்பேன்னு தெரியலை” என்றார். உதட்டில் சின்னக் கோடுபோல சோகம் கசிந்தது.

``போயிட்டு வாங்க மேடம். நீங்க எங்க இருந்தா என்ன, நாங்க எப்பவும் உங்களை மறக்க மாட்டோம். எங்க இதயத்துல நீங்க இருப்பீங்க” என்று விடைகொடுத்தோம். ஒரு தேவதையைப்போல படிகளில் ஏறி, கண்ணாடிக் கதவுக்குள் மங்கலாக மறைந்தார்.

நாங்களும் கிளம்பினோம். தேவியின் புன்னகையையும் படபடக்கும் அவர் கண்களின் பார்வையையும் மனதுக்குள் நிறைத்துக்கொண்டு.

``நாம திரும்ப அவங்களைப் பார்ப் போமா சந்தோஷ்?”

`இல்லை’ என்பதுபோலத் தலையசைத்து, ``சிப்பி இருக்குது, முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி” என்று சன்னமாகப் பாடினான் சந்தோஷ்.

வறுமையின் நிறம் சிவப்பு
வெளியான ஆண்டு: 1980
நடிப்பு: கமல்ஹாசன், ஸ்ரீதேவி,
பிரதாப் போத்தன்,
பூர்ணம் விஸ்வநாதன், எஸ்.வி.சேகர்

இயக்கம்: கே.பாலசந்தர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிப்ஸ்... டிப்ஸ்...

ரு பிடி அவலை ஊறவைத்துச் சிறிதளவு தேங்காய்த் துருவல், மிளகு சேர்த்து பால்விட்டு அரைத்து, புளித்த தோசை மாவில் சேர்த்து ஊத்தப்பம் செய்தால் புளிப்பு இருக்காது.

- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்.

ல்வலி ஏற்பட்டால், கொய்யா இலைகளை வாயில் போட்டு மென்று துப்பிவிட்டு, வாய் கொப்பளித்தால் பல்வலி குறையும்.

- எஸ்.ஆண்டாள், மதுரை-2

ணி அடிப்பதற்கு முன்பாக, செல்லோ டேப்பைப் பெருக்கல் குறி மாதிரி ஒட்டி, நடுப்புள்ளியில் ஆணி அடித்தால், சுலபமாகவும் சுவரில் விரிசல் விழாமலும் இருக்கும்.

- அம்பிகா சஞ்சீவ், சென்னை-4