Published:Updated:

`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்

கலிலுல்லா.ச
`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்
`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்

நடிகர் அர்ஜூன் `விஸ்மயா' திரைப்படத்தில் நடிக்கும்போது தன்னிடம் அத்துமீறியதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அந்தப் படத்தின் இயக்குநர் அருண் வைத்தியநாதன் விளக்கமளித்துள்ளார்.


`மீ டூ' இயக்கத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து புகார் தெரிவித்துவருகின்றனர். திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு பிரபலங்கள் விளக்கமளித்தும் வருகின்றனர். சிலர் நீதிமன்றத்தை நாடுகின்றனர். அந்த வகையில் நடிகர் அர்ஜூன் மீது, ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர்,``விஸ்மயா என்ற படத்தில் அர்ஜூடன் நடிக்கும்போது, பாலியல் அத்துமீறல் நடத்தது’’ எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அந்தப் படத்தின் இயக்குநர் அருண் வைத்தியநாதன் ஷூட்டிங்கின்போது நடந்தவை குறித்து விளக்கமளித்துள்ளார். அர்ஜூன், பிரசன்னா, வரலக்‌ஷ்மி, ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்டோர் நடிப்பில், கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் 'நிபுணன்'. அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் வெளியான அந்தப் படம் கன்னடத்தில் `விஸ்மயா’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

அவரது விளக்கத்தில், ``அர்ஜூன் மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் இருவரும் என்னுடைய நல்ல நண்பர்கள். அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் நான் அறிவேன். நடிகர் அர்ஜூன் படபிடிப்பு தளத்துக்கு வந்தால், ஜென்டில் மேனாக நடந்துகொள்வார். ஸ்ருதியும் அப்படியே. விஸ்மயா படத்தின் குறிபிட்ட காட்சி குறித்து நடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதி எழுப்பிய பாலியல் குற்றச்சாட்டு எனக்குப் பெரும் அதிர்ச்சி அளித்தது. அது ஒரு நெருக்கமான காதல் காட்சி. நாங்கள் படபிடிப்புக்கு முன்பு, அந்தக் காட்சிக்கான ரிகர்சல் பார்த்தோம். அந்தக் காட்சியை மேம்படுத்தும் பொருட்டு ரிகர்சல் நடைபெற்றது. பிறகு, காட்சி குறித்து விவாதித்தோம். இது நடந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. அது குறித்தான தகவல்கள் எனக்கு முழுமையாக நினைவில்லை.

நெருக்கமான காதல் காட்சி படமாக்கும்போது இருப்பதைவிட ஸ்கிரிப்ட்டில் மிகவும் அன்னியோன்யமாக இருக்கும். இதை அர்ஜூன் ஸ்கிரிப்ட்டிலே குறைக்கச் சொன்னார். `எனக்கு டீன்ஏஜில் மகள் இருக்கிறாள். இனிமேலும் இதுபோன்ற காட்சிகளில் என்னால் நடிக்க முடியாது' என்றார். நான் அதைப் புரிந்துகொண்டு திருத்தினேன். மேலே நான் கூறியது முழுவதும் உண்மையான நிகழ்வுகள்தான். எனது படப்பிடிப்பு தளத்துக்கு வெளியில் நடக்கும் சாட், போன்கால்கள் குறித்து என்னால் கருத்து எதுவும் கூற முடியாது. அதற்கு எனக்கு உரிமையும் இல்லை. அர்ஜூன் மற்றும் ஸ்ருதி இருவரும் நல்ல நண்பர்கள். அவர்கள் குறித்து இந்த அறிக்கையைப் பதிவுசெய்வது எனக்கு வருத்தமாக உள்ளது. நல்ல படம் எடுக்க வேண்டும் எனக் குழுவாக இணைந்து மகிழ்ச்சியுடன்தான் படத்தை எடுத்தோம். மீ டூ இயக்கம் மூலமாக அனைத்துப் பெண்களும் பாதுகாப்பான சூழலை எதிர்கொள்ள வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம்'' என்றார்.