Published:Updated:

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

Published:Updated:
மந்திரி தந்திரி கேபினெட் கேமரா
##~##

தி.மு.க. இம்முறை ஆட்சியைப் பிடித்ததும் கூடிய முதல் சட்டசபைக் கூட்டத் தொடர்...

அ.தி.மு.க. உறுப்பினர் கலைராஜன், முதல்வர் கருணாநிதியின் கோபத்தைத் தூண்டும் வகையில் வார்த்தைகளைவிட, பொங்கி எழுந்தார்கள் உடன்பிறப்பு உறுப்பினர்கள். பலரும் தங்களது இருக்கைகளைத் தாண்டி எதிர்க் கட்சி வரிசை நோக்கி ஓடி வந்தார்கள். ஏதோ ரசாபாசம் நடக்கப் போகிறது என்பதை கருணாநிதியே உணர்ந்து... இருந்த இடத்தில் இருந்து தலையைப் பின்னே திருப்பி... 'பின்னால போயி உங்க ஸீட்டுல உட்காருங்கய்யா’ என்று கரகர குரலில் சத்தம் போட்டார். ஒருவர் மட்டும் அடங்கவே இல்லை. விட்டால், கலைராஜனை ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவோடு இருந்தார். கண்ணைச் சுழித்துக் கவனித்த கருணாநிதி, 'ஒரு மந்திரியே இப்படிப் பண்றதா?’ என்று அருகில் இருந்த ஆற்காட்டாரிடம் சொல்ல... அவர் அந்த மனிதரைப் பார்த்துக் கண்களால் மிரட்ட... அப்போதுதான் அடங்கினார். அப்படி ஒரு சாமியாட்டத்துக்குச் சொந்தக்காரர் கே.பி.பி.சாமி. மந்திரி ஆனாலும் பழசை மறக்காத மனிதர். இந்த ஆக்ரோஷம்தான் அவருக்கு மந்திரி பதவியையே வாங்கிக் கொடுத்தது!

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

வட சென்னைப் பகுதியின் முக்கிய இடமான திருவொற்றியூரில் தி.மு.க-வை வளர்த்த புள்ளிகளில் ஒருவர் பரசுராமன். தஞ்சை மாவட்டம் பழையாறு பகுதியைச் சேர்ந்த மீனவரான அவர், பிழைப்பு தேடி வந்து, இங்கேயே தங்கிவிட்டார். அந்தப் பரசுராமனின் மகன்தான் பக்கிரிசாமி. அரசியலில் 'பக்கிரி’ என்று அடுத்தவர் அழைத்தால் அழகாக இருக்காது என்பதால், சுருக்கமாக 'சாமி’ ஆனார். இவருக்கு இளங்கோ, சங்கர், சொக்கலிங்கம் என்று மூன்று சகோதரர்கள். 'அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பிகூட உதவ மாட்டாங்க’ என்பார்கள். அடிதடியும் இந்தத் தம்பிகளும்தான் சாமி அண்ணனை இந்த அளவுக்கு உச்சத்துக்குக் கொண்டுவந்தது.

தென் சென்னையில் வளரும் தி.மு.க. பிரமுகருக்கு, பண பலம் மட்டும் இருந்தால் போதும். ஆனால், வட சென்னையில் ஆள் பலம் இருந்தால்தான் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள முடியும். எனவே, தான் வளர்ந்த காசி விஸ்வநாதர் கோயில் குப்பத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் சாமி. பொதுவாகவே, மீனவர்கள் 'படகோட்டி’ படம் பார்த்து, எம்.ஜி.ஆர். ரசிகராக இருப்பார்கள். ஆனால், அப்பா வழியில் தி.மு.க-காரர் ஆக வளர்ந்தார் சாமி. அவருக்கு இடைஞ்சலாக அ.தி.மு.க-வினர் இல்லை. சொந்தக் கட்சியினரே எதிர்த்தார்கள். 'இத்தனை வருஷம் கட்சியில இருக்கேன். ஒரு பகுதிப் பிரதிநிதிகூடக் கொடுக்க மாட்டேன்றாங் களே’ என்று நொந்துபோன சாமியின் கண்ணை ஒரு தொண்டன் திறந்தான். 'யாரு செல்வாக்குடன் இருக்காங்களோ... அவங்களை எதிர்த்து நில்லுங்க. அப்பதான் தலைமைக்கு உங்களைத் தெரியும்’ என்று சொல்ல... களம் இறங்கினார்.

டி.கே.பழனிச்சாமி, டி.சி.விஜயன், விஸ்வநாதன் ஆகிய மூன்று வலுவான கரங்கள் இருந்தன. சொந்தச் செல்வாக்குடன் இப்படி ஓர் ஆள் வருகிறான் என்றதுமே உஷாராகத் தடுக்க வேண்டிய காரியங்களைப் பார்த்தார்கள். முதலில் தான் குடியிருக்கும் வார்டுக்கு கவுன்சிலராக நினைத்தார் சாமி. உடனேயே அந்த வார்டைப் பெண்கள் வார்டாக மாற்றினார்கள். தனது மனைவி உமாவை வேட்பாளராக ஆக்கினார் சாமி. உமா ஜெயித்தார். முதல் வெற்றி சாமிக்கு.

அடுத்து, நகரச் செயலாளர் தேர்தல் வந்தது. சாமி நின்றார். அவரிடம்தான் 17 வாக்குகள் இருந்தன. அவரைத் தோற்கடிக்க என்னென்ன காரியங்கள் எல்லாமோ பார்த்தார்கள். அதைக் கையும் களவுமாகப் பிடித்து, தேர்தலையே நிறுத்தினார் சாமி. மூன்றே நாள் அவகாசம் கொடுத்து, மறுபடியும் தேர்தல் நடக்க இருப்பதாகத் தலைமை அறிவித்தது. மறுபடி தேர்தல் நடந்தபோது தன்னுடைய படை பரிவாரங்களுடன் சாமி வந்து குதித்தார். பயம் என்பதையே அறியாத டி.கே.பழனிச்சாமியே பயந்துபோய் அறிவா லயத்தில் அடைக்கலம் ஆனார். அப்போதுதான் 'யாருய்யா இந்த சாமி? டி.கே.பி-யே பயப்படுறான்!’ என்று கருணாநிதி கேட்டார். தன்னிடம் அடைக்கலம் தேடி வருபவர்களைவிட, விரட்டியவனைச் சந்திக்க வேண்டும் என்று விரும்புவார் 'பழைய’ கருணாநிதி. சாமியை வரவழைத்தார். நகரச் செயலாளர் பதவியை சாமிக்கு விட்டுத் தரச் சொன்னார். 'அதை மட்டும் நீங்கள் செய்தால், நாளைக்கு எனக்கு மாலை வைக்க திருவொற்றியூர் வர வேண்டியிருக்கும்’ என்று டி.சி.விஜயன் பீதியைக் கிளப்பியதால், துணைச் செயலாளர் பதவியைக் கொடுத்தார் கருணாநிதி. சாமியின் இரண்டாவது வெற்றி இது. இந்த தைரியத்தில்தான் திருவொற்றியூர் மீனவர் பகுதியில் தி.மு.க-வை சாமி வளர்த்தார்.

அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தபோது, வெள்ள நிவாரண உதவிகளைச் செய்வதற்காக, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கண்ணப்பனை அழைத்து வந்தார் குப்பன் எம்.எல்.ஏ. சாமி குடியிருக்கும் பகுதி யில் அதிகமாக தி.மு.க. கொடிகள்தான் பறக்கும். 'அண்ணே, மந்திரி வரப் போறாரு. அதுனால இந்தக் கொடியை இறக்கிட்டோம்னா, நம்ம ஏரியாவுக்கு நிறைய உதவிகள் கிடைக்கும்’ என்று சொன்னபோது, 'தி.மு.க. கொடியை இறக்கித்தான் நல்லது நடக்கணும்னா, அது தேவையே இல்லை. நேஷனல் ஆஸ்பிட்டல்ல எங்க அப்பா உடம்பு சரி இல்லாமப் படுத்து இருக்கும்போது, 'டேய் சாமி, எந்தக் காலத்துலயும் கட்சிக் கொடியை மட்டும் இறக்காமப் பார்த்துக்கோ’ன்னு சொன்னாரு. அதுனால இதுக்குச் சம்மதிக்க மாட்டேன்’ என்று சொன்னாராம் சாமி. அந்த அளவுக்கு விசுவாசம்.

திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் சிவாஜி, ஸ்டாலினைச் சுற்றி வந்ததாலேயே பதவிகளை அடைந்தவர் என்பதை அனைவரும் அறிவார்கள். அவருக்கும் சாமியின் வளர்ச்சி பிடிக்கவில்லை. எனவே, திருவொற் றியூர் தொகுதிக்கு வசதியான மாதவரம் சுதர்சனம் என்பவரை எம்.எல்.ஏ-வுக்கு நிறுத்தப் பரிந்துரைத்தார். 'அதுக்கு நான் ஒரு ஆளை வெச்சிருக்கேன்’ என்று கருணாநிதி சொல்லிவிட்டார். வேட்பாளராக அறிவிக்கப் பட்ட சாமியே வென்றார். தமிழ்நாடு முழுவதும் தேர்ந்தெடுத்து வந்த 100 பேரில் சாமி மட்டும் தான் மீனவர். அதிர்ஷ்ட அலை சாமி பக்கம் வீசியது. மந்திரி ஆனார்!

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

தீவிரமான கட்சி விசுவாசி என்று பார்த்து அமைச்சர் பதவியைக் கொடுத்த கருணாநிதி முன்னால், இரண்டொரு மாதங்களிலேயே சாமி தலை குனிய வேண்டியது ஆயிற்று. அவரது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாழும் மக்களே உயிர் வாழப் பயந்து, காசிமேடு பகுதிக்கு அகதிகளாக இடம் மாறிய கொடுமை நடந்தது.

சுமார் 135 குடும்பங்கள் கண்ணீருடன் பத்திரிகைகளில் பேட்டிகள் கொடுத்துக் கதறினார்கள். சாமியின் சகோதரர்கள் சங்கர், சொக்கலிங்கம் ஆகியோர் மீதுதான் புகாரைக் கிளப்பினார்கள். இளங்கோ என்ற சகோதரர் மட்டும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்க, மற்ற இருவரும் அண்ணன் சாமிக்குத் துணையாக அரசியலில் இருந்தார்கள். தன்னுடைய பலமாக சங்கரைத்தான் சாமி நினைத்தார். ஆனால், அதுவே பலவீனமான காட்சி அமைச்சரானதும் தொடங்கியது. 'ரௌடி மந்திரி’ என்று ஜெயலலிதா சர்ட்டிஃபிகேட் தர... கருணாநிதி தனிமையில் அழைத்து சாமியைக் கண்டித்தார். பத்திரிகை, நீதிமன்றம், அறிக்கை... என்றெல்லாம் இருக்கிறது என்று சாமி உணர ஆரம்பித்தது அப்போதுதான். 'அமைதியாப் போ’ என்று தனது சகோதரர்களிடம் முதல் தடவையாக அட்வைஸ் செய்தார். ஆனாலும், அவர்கள் அடங்கியது மாதிரி தெரியவில்லை. 'அமைச்சர் என்னை போனில் மிரட்டினார்’, 'அமைச்சரின் தம்பி சங்கர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்’... என்று ஏதாவது ஒரு புகார் அடுத்தடுத்துக் கிளம்புவது வாடிக்கை.

இந்தப் பராக்கிரமங்களைக் கடல் எல்லையில் காட்டினால், சிங்களக் கடற்படையால் தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவதை ஓரளவாவது தடுத்து இருக்க முடியும். மீன்வளத் துறை அமைச்சராக சாமி இருக்கும் இந்த ஐந்து ஆண்டு காலகட்டம், மீனவர் வாழ்க்கையில் மிக மோசமானது. சிங்களக் கடற்படையிடம் ராமேஸ்வரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மீனவர்கள் தொடர்ந்து அடி வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியக் கடற் படைக்குத்தான் இதில் சொரணை வரவில்லை என்றால், தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கும் அக்கறை இல்லை. கடலில் கருமாதி நடக்கும்போது பிரதமருக்கு ஒரு கடிதம் போகும். அவ்வளவுதான்.

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

கடல் மேலாண்மைச் சட்டம்... மீனவர்களின் வாழ்வாதாரங்களை மொத்தமாகப் பறித்துவிட்டது. கரையில் இருந்து மீனவர்களை அப்புறப்படுத்தி வேறு எங்கேயோ வாழ நிர்ப்பந்திக்கப்படுவதால் புழுவாய் துடிக்கிறார்கள். சுனாமியில் இருந்து உங்களைக் காப்பாற்றுகிறோம் என்று சொல்லி, அவர்களுக்குத் தெரிந்த மீன்பிடித் தொழிலைக்கூட செய்ய முடியாத அளவுக்கு மழுங்கடித்துவிட்டார்கள். பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இந்த மீன்பிடித் தொழில் தாரை வார்க்கப்பட்டு.... அநேகமாக இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தத் தொழிலை மீனவர் யாரும் செய்ய முடியாத நிலை உருவாகிக்கொண்டு இருக்கிறது. சுனாமி வந்து கொன்று ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் களைப் பணயம்வைத்து பல்லாயிரம் கோடியை அரசாங்கமும் தனியாரும் திரட்டினார்கள். இன்று வரை முழுமையாக அவர்களுக்கு நல்ல வீடுகூட கட்டித் தரப்படவில்லை. செத்தால் நிதி உதவி கொடுப்பதும், மானியம் கொடுப்பதும் மட்டும்தான் இந்தத் துறையின் வேலை என்று சாமி நினைக்கிறார். 'கடலாளியின் நிலைமை கடலாளிக்குத்தான் தெரியும். அதனால்தான் என்னை இந்த துறைக்கு அமைச்சர் ஆக்கினார் தலைவர்'' என்று சாமி சொல்வதைக் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் அப்படித் தெரியவே இல்லை. நோக்கம் வேறு மாதிரி ஆகிவிட்டதே இதற்குக் காரணம்!

''பெரும் தொழில் செய்பவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்கிறார்கள். அவர்களிடம் தான் மந்திரியின் ஆட்கள் பணம் வாங்குகிறார்களே தவிர, இல்லாதவர்களிடம் அடித்துப் பிடுங்கவில்லை. கட்சிக்காரர் களுக்கு ஆபத்து என்றாலோ, பணத் தேவை ஏற்பட்டாலோ உடனே யோசிக்காமல்இவர் கள் தூக்கிக் கொடுப்பார்கள். பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும், ஆஸ்பத்திரியில அப்பா கிடக்கிறார், பணம் கட்டியாகணும் என்று யார் வந்தாலும் யோசிக்காமல் தருவார்கள்'' என்று திருவொற்றியூர் ராபின் ஹூட்களாக இவர்கள் தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், உண்மை அதையும் தாண்டியது. 'தங்கள் தயவு இல்லாமல், யாரும் எந்தத் தொழிலும் பண்ண முடியாது’ என்ற கணக்கு கனகச்சிதமாகவே இந்தப் பகுதியில் பின்பற்றப்படுகிறது.

இன்னொரு ஷாக் இந்த ஏரியாவில் இருக்கிறது. அதாவது புதிதாக ஆரம்பிக்கும் நிறுவனங்களுக்கு 25 பெயர்கள் தரப்படும். அவர்கள் வேலை பார்த்ததாக லெட்ஜர் தயாரித்துவைத்துக்கொள்ள வேண்டும். மாதந் தோறும் 5-ம் தேதி அவர்கள் வந்து சம்பளம் வாங்கிக்கொள்வார்கள். பணம் வசூலிப்பதில் புது மாதிரியான டெக்னிக் இது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்குத் திறக்க வேண்டும் என்பது அரசாங்க விதி. ஆனால், திருவொற்றியூர் பார்கள் அதிகாலை 6 மணிக் குத் திறக்கப்படுகின்றன. 10 வரை பொறுக்க முடியாதவர்கள் அந்தப் பகுதியில் ஐக்கியமாகி விடுகிறார்கள். மொத்த பார்களும் இவர்களது

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

கட்டுப்பாட்டில் இருப்பதாலேயே அதிகாரி களால் எதுவும் செய்ய முடியவில்லையாம்.

கே.பி.பி.சாமியின் அப்பா பரசுராமனின் 18-வது ஆண்டு நினைவு தினம் சமீபத்தில் நடந்தது. ''பரசுராமன் அண்ணாவால் பாராட்டுவதற்குத் தகுதியானவர். அவரைப்போலவே அவரது மகன் சாமியும் கழகப் பணியாற்றி வருகிறார். தந்தையைப்போலவே பணியாற்றி மக்களிடம் நல்ல பெயர் எடுத்துள்ளார். அவரும் அவரது சகோதரர்களும் கழகப் பணி ஆற்றுவதில் அதிகமான தீவிரத்துடன் இருப் பதைப் பார்த்து மகிழ்கிறேன்'' என்று பேராசிரியர் அன்பழகன் பேசியிருக்கிறார்.

ஓஹோ... பேராசிரியரும் பொய் சொல்வார் போலிருக்கிறது!

ஓவியம் : அரஸ்