வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (27/10/2018)

கடைசி தொடர்பு:09:49 (27/10/2018)

வீ மிஸ் யூ கேப்டன் ஜாக் ஸ்பாரோ!

'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' ஜாக் ஸ்பாரோ என்றாலே நம் நினைவுக்கு வரும் ஒரு ஆள், ஜானி டெப். இந்தப் படத்தின் கதாசிரியர் ஸ்வார்ட் பீட்டி, இதன் கதையை மீண்டும் புதுப்பித்து எழுத இருக்கிறார். ஆனால், அதில் ஜானி டெப் இருக்க மாட்டார் என்பது தெரிய வந்திருக்கிறது. 

ஜாக் ஸ்பாரோ

கடந்த 15 வருடங்களாக 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' பட சீக்குவெலில் நடித்து வந்தார், ஜானி டெப். இந்தப் படத்தின் சீக்குவெல், வெற்றியடைய கேப்டன் ஜாக் ஸ்பாரோ ஓர் முக்கியக் காரணம். பொதுவாக ஜானி டெப்பின் கதாபாத்திர தேர்வு ஒவ்வொரு படத்துக்கும் மாறுபடும். இதில் ஜாக் ஸ்பாரோ மட்டும் விதிவிலக்கல்ல. தள்ளாடும் உடல் மொழி, எதுக்கெடுத்தாலும் நக்கல் பேச்சு, எதிர்பாராத நேரத்தில் இவர் செய்யும் சேட்டைகள்... என 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தின் அனைத்து பாகங்களில் தனது பிரத்யேக நடிப்பின் மூலம் மிரட்டியிருப்பார் மனிதர். டிஸ்னி ஸ்டுடியோஸின் அறிவிப்பின்படி 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தை மீண்டும் முதலில் இருந்து தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து படத்தின் கதாசிரியர் ஸ்வார்ட் பீட்டி ஒரு நிகழ்ச்சியில், 'கேப்டன் ஜாக் ஸ்பாரோ என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஜானி டெப்தான். இந்தக் கதாபாரத்துக்காக அவரால் முடிந்தளவு உழைப்பைக் கொடுத்துவிட்டார். இன்னும் சொல்லப்போனால் இவரால்தான் இந்தக் கதாபாத்திரமே இவ்வளவு ஃபேமஸ் ஆனது. உலகில் உள்ள பல்வேறு குழந்தைகளுக்கு இவரை 'ஜாக் ஸ்பாரோ' என்றுதான் அடையாளம் தெரியும். பல மருத்துவமனைக்குச் சென்று அங்கிருக்கும் குழந்தைகளை மகிழ்வித்தும் இருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தால் அவருக்கும் பெருமை எங்களுக்கும் பெருமை' என்று தனது பாராட்டுகளை ஜானி டெப்புக்குத் தெரிவித்தார். 

ஆனால் புதிதாக அவதரிக்கப் போகும் 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தின் ரூபூட்டில் ஜானி டெப் இருக்க மாட்டார். சமூக வலைத்தளங்களில் இவர் நீக்கப்பட்டது தொடர்பாக ஒரு விவாதமே நடைபெற்று கொண்டு இருக்கிறது. ஒரு படத்தின் ரீ பூட்டில் அதன் ஒரிஜினில் ஆர்ட்டிஸ்டுகள் இருக்க மாட்டார்கள்தான். என்றாலும் ஜானி டெப்பை மிஸ் செய்வதாக ஜாக் ஸ்பாரோ ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.