Published:Updated:

14 நாள்கள்

14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

14 நாள்கள்

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

Published:Updated:
14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

சோனம் கபூரின் திருமணம் முதல் இளம் உலகத் தலைவர் பிரியங்கா சோப்ரா வரை... கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவை என்ன?

அறிவோம்... ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்!

நெட்டிசன்களை நெகிழவைத்த ஜோடி!

பாலிவுட் நடிகையும் நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூரின் திருமணம்  அண்மையில் மும்பையில் நடைபெற்றது. தன் நீண்ட நாள் நண்பரும் காதலருமான ஃபேஷன் டிசைனர் ஆனந்த் அஹுஜாவைத் திருமணம் செய்துகொண்டார் சோனம். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த பாலிவுட்டும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தியது. நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஆடம்பரமான வரவேற்பு நிகழ்ச்சியைவிட, நெருங்கிய குடும்பத்தினர் சிலர் மட்டுமே கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

14 நாள்கள்

சீக்கிய முறைப்படி நடைபெற்ற திருமண நிகழ்வில், கணவருக்கு மாலை அணிவிக்கவும் தாலியை மாட்டவும் சோனம் விளக்கம் கொடுக்கும் அழகும் அவரின் தாய், “செய்முறை எல்லாம் சொல்ல வேண்டாம்... மாப்பிள்ளையை ‘நீங்கள்’ என்று கூப்பிடு” என்று செல்லமாகக் கடிந்துகொள்வதும் காணொளியில் பதிவாகியுள்ளது. தாயிடம் செல்லத் திட்டு வாங்கும் மனைவிக்கு ஆதரவாக, “நான்தான் என்ன செய்ய வேண்டும் என்று அவளைக் கேட்டேன்” என்று ஆனந்த் விளக்கம் கொடுப்பது… அடடா க்யூட்! அதைவிட க்யூட், திருமணம் முடிந்ததும் மணமகனைக் கன்னத்தில் முத்தமிட்டார் சோனம். கோடிகளை வாரி இறைத்துத் திருமணம் செய்வதைவிட இதுபோல மிகச் சில நெருங்கிய சொந்தங்களுடன் திருமணம் செய்வது மனதுக்கு இதமாக  இருப்பதாகப் பகிர்ந்துவருகிறார்கள் நெட்டிசன்கள்.

விஷ் யூ எ ஹேப்பி மேரிட் லைஃப்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீதித்துறையில் சாதிக்கும் இந்து மல்ஹோத்ரா!

வழக்கறிஞராக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடி பதவி உயர்வு பெற்ற முதல் பெண் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் இந்து மல்ஹோத்ரா. வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றங்களில் சில ஆண்டுகள் நீதிபதிகளாகப் பணிபுரிந்த பின்பே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். இந்த வழக்கத்தை மாற்றியமைத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, 61 வயதான இந்துவுக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். ஜஸ்டிஸ் ஆர்.பானுமதியுடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றப் போகிறார் இந்து. ஒரே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இரு பெண் நீதிபதிகள் இணைந்து பணியாற்றுவது இது மூன்றாம் முறை. நாட்டின் விடுதலைக்குப் பின் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியமர்ந்திருக்கும் ஏழாவது பெண் நீதிபதி இந்து. மற்ற பெண் நீதிபதிகள் அனைவரும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாகப் பணிபுரிந்தவர்கள்.

14 நாள்கள்

பெங்களூரைச் சேர்ந்த இந்து, 1983-ம் ஆண்டு சட்டத் துறையில் வழக்கறிஞராக நுழைந்தவர். மருத்துவம் மற்றும் பொறியியல் துறை எனக் கல்வி சம்பந்தப்பட்ட வழக்குகளில் தோன்றினார். பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்த விஷாகா கமிட்டியின் உறுப்பினர்களில் ஒருவர். கர்நாடக உயர் நீதிமன்றம் அமைத்த நீதிமன்றப் பணியிடப் பாதுகாப்பு கமிட்டியின் பத்து உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார் இந்து. 

வாழ்த்துகள் நீதிபதியம்மா!

மணியான மருத்துவக் கண்டுபிடிப்பு!

இந்தியாவில், கடந்த பத்தாண்டுகளாக மருத்துவர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது சிக்கன்குனியா. 2005-ம் ஆண்டு இந்த நோய் தலைதூக்கியதும் ரூர்க்கி நகரில் உள்ள ஐ.ஐ.டி ஆய்வுக் கூடத்தில் இதற்குத் தகுந்த மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தொடங்கின. சமீபத்தில் ஒரு `ப்ரேக்-த்ரூ’ நிகழ்வாக, ஆய்வுக்குழுவின் தலைவி ஷைலி தோமர் புதிய மூலக்கூறு ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்துள்ளார். ஹெபடைட்டிஸ் மற்றும் ஹெச்ஐவி ஆய்வுகள் போல இதிலும் ஆன்ட்டி-வைரலாகச் செயல்படக்கூடிய பத்து மூலக்கூறுகளைத் தெரிவு செய்து, அதில்  சிறந்தவை இரண்டை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர்.

14 நாள்கள்

ஆய்வுக்குழு சேகரித்த சாம்பிள்களில் சிறந்த மூலக்கூறு என அடையாளம் காணப்பட்ட பெப்-1 கலவை அதிக செறிவுடன் இருந்ததால், வைரஸ் பரவுவது 100% நிறுத்தப்பட்டது. மருத்துவ உலகில் பெரிய கண்டுபிடிப்பாக இருந்தாலும், இந்த மூலக்கூறு தகுந்த சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, மருந்து வடிவில் கிடைக்க சில ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்துள்ள ஷைலி, இதுபோன்ற ஆய்வுகள் செய்ய ஃபார்மா கம்பெனிகளில்கூட போதுமான மேம்படுத்தப்பட்ட வசதிகள் இல்லை என்று வருத்தம் தெரிவித்தார். இந்தியாவில் 2016-ம் ஆண்டு மட்டுமே இந்தக் காய்ச்சலால் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

சபாஷ் ஷைலி!

 `அமெரிக்க ஹீரோ’ கல்பனா சாவ்லா!

மே மாதத்தை ஆசிய - அமெரிக்க பாரம்பர்ய மாதமாகக் கொண்டாடிவருகிறது அமெரிக்கா. இதையொட்டி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா அமெரிக்க விண்வெளி திட்டத்தில் பங்குகொண்டு சிறந்த பங்காற்றிய அமெரிக்க ஹீரோ. நாசாவின் விண்வெளிக் கலங்களில் சரக்கு மற்றும் விண்வெளி வீரர்கள் பயணத்தை லகுவாக்கிய பெருமை அவரையே சாரும். அவரது சாதனைக்காக, மரணத்துக்குப் பின் ‘காங்ரெஷனல் ஸ்பேஸ் மெடல்’, நாசாவின் ‘ஸ்பேஸ் ஃப்ளைட் மெடல்’ போன்றவை வழங்கப்பட்டன. சாவ்லாவின் துணிவும் கடமை உணர்வும் விண்வெளி வீரர் ஆகும் கனவுகொண்ட கோடிக்கணக்கான அமெரிக்கச் சிறுமிகளுக்கு பெரும் ஊக்கமாக உள்ளது. தங்கள் உழைப்பு மற்றும் நாட்டுப்பற்றால், அமெரிக்க சமூக முன்னேற்றம் அடையவும் புதுமைகள் பல காணவும் இவர் போன்ற ஆசிய, பசிஃபிக் தீவு மக்கள் பெரிதும் உதவி இருக்கிறார்கள்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

14 நாள்கள்

``அமெரிக்காவில் ஏறத்தாழ இரண்டு கோடி ஆசிய - அமெரிக்கர்களும் பசிஃபிக் தீவு மக்களும் வசிக்கிறார்கள். கடும் உழைப்பு, நேர்மையான வாழ்க்கை, விடுதலை உணர்வு இவை அனைத்தும் கொண்ட இம்மக்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது. அமெரிக்க சமூகம், தொழிற்சாலைகள், ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறை, மேலாண்மைத் துறை என அனைத்திலும் ஆசிய அமெரிக்கர்கள்
ஆற்றிவரும் பங்கு அளவிட முடியாதது'’ என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த 2003-ம் ஆண்டு, `கொலம்பியா’ என்ற விண்கலம் விண்ணில் இருந்து பூமி திரும்பும்போது வெடித்துச் சிதறியதில் மரணம் அடைந்த ஏழு விண்வெளி வீரர்களுள் ஒருவர் இந்திய வம்சாவளியினரான இளம் கல்பனா சாவ்லா.

இறந்தும் வாழும் சாதனைப் பெண் சாவ்லா!

இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும்  `இளம் உலகத் தலைவர்கள்’!

ஜெனீவாவில் உள்ள உலகப் பொருளாதார மன்றம் ஒவ்வோர் ஆண்டும் நூறு இளம் உலகத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துவருகிறது. இவர்களின் துணையோடு ஏழ்மை, கல்வியறிவின்மை, சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முயற்சி செய்கிறது. மிகுந்த மதிப்புடைய இந்த ‘யங் குளோபல் லீடர்ஸ்’ பதவிக்கு இந்த ஆண்டு ஐந்து இந்தியப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா யுனிசெஃப்ஃபின் தூதுவராக இருந்து, பெண்சிசுக் கொலை தடுப்பு, போதை மருந்து ஒழிப்பு ஆகிய விழிப்பு உணர்வுப் பணிகளில் செயல்படுவதால் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எஸ்சிஏ கம்பெனிகளின் நிர்வாக இயக்குநர் பைரவி ஜனி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வரும் ஆலோசனைகளுக்காகவும் புதிய தொழில் வல்லுநர்களைப் பயிற்சி கொடுத்து உருவாக்கி வருவதற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

14 நாள்கள்

2017-ம் ஆண்டு 8 மில்லியன் யு.எஸ் டாலர் வளர்ச்சி கண்ட பிரைவேட் ஏர்லைன் கம்பெனியான ‘ஜெட்செட்கோ’வின் தலைமை நிர்வாக அதிகாரி கனிகா தெக்ரிவால், பிளாஸ்டிக் பேக்கேஜிங்குக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கிய ரியா மஜும்தார் சிங்கல் மற்றும் மருத்துவ அறிவியல் துறையில் ஆய்வு மேற்கொண்டு இருக்கும் சுச்சி சரியா ஆகியோரும் இளம் உலகத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதுமையும் படைப்பாற்றலும் நிறைந்தவர்களான 40 வயதுக்குட்பட்ட இந்த இளம்பெண்கள் அரசு, தனியார் மற்றும் தன்னார்வ நிறுவனங்களுக்கு இடையே பாலமாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

கலக்கட்டும் இந்திய இளம் உலகத் தலைவிகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism