Published:Updated:

விகடன் மேடை - கமல்ஹாசன்

விகடன் மேடை - கமல்ஹாசன்

விகடன் மேடை - கமல்ஹாசன்

விகடன் மேடை - கமல்ஹாசன்

Published:Updated:
##~##
எம்.பாரதி, ஆழிவாய்க்கால்.

 '' 'கலவி முடிந்த பின் கிடந்து பேசி னாளாயின் காதலாய் மாறலாம் எச்சரிக்கை!’ - அனுபவம் பேசுகிறதா கமல்?''

 ''சும்மா கிடந்து அலையாதீங்க. அனுபவம் இல்லாமலா ரெண்டு பிள்ளை களும்... காதலிகளும்?''

எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

 ''நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்... இப்போது கலைஞர் குடும்பம் சினிமா வைத்தத்தெடுத்து இருப்பது ஆரோக்கியமான விஷயம்தானா?''

 ''யார் நெஞ்சைத் தொட்டு என்று முதலில் சொல்லுங்கள்!''

அனுசூயா, தூத்துக்குடி.

 ''உங்கள் ரசிகர்கள் உங்கள் தனிப் பட்ட வாழ்க்கையைப் பார்த்து, அவர்களும் பின்பற்ற மாட்டார்களா?''

 ''காந்தி, கோட்ஸே, ஹிட்லர், புத்தர், இயேசு போன்றோரைப் பார்த்துக் கற்காத அவர்களின் ரசிகர்கள் போல்தான் என் ரசிகர்களும். நல்லது கெட்டது தெரிந்தவர்கள்!''

விகடன் மேடை - கமல்ஹாசன்

இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்.

 ''சமீப காலமாக நிறையப் புதிய இயக்குநர்கள், நல்ல கதை அம்சம் உள்ள அதே சமயம், வியாபாரரீதியாக நன்றாக வசூலாகக்கூடிய படங்களைக் கொடுத்து வருகிறார்கள். அவர்களின் படங்களில் நடிக்காமல், சீனியர் இயக்குநர்களின் படங்களிலேயே ஏன் நடிக்கிறீர்கள்?''

 ''நடிக்கவைக்கிறார்கள், வியாபாரம் தெரிந்தவர்கள். இன்னும் சில வருடங்கள் கடந்தால், எனக்கும் சீனியரான இயக்குநர்கள் கிடைப்பது கடினம் என்ற ஒரு காரணமும்கூட!''

பெ.பச்சையப்பன், கம்பம்.

 ''உங்களின் பேச்சு, கவிதை, திறமையை வெளிப்படுத்தும் விதம், எல்லாமே ஒரு முறைக்குப் பல முறை உன்னிப்பாகக் கவனித்தால்தான் புரிகிறது. இது உங்களுக்குத் தெரியுமா? ஏன், எதையுமே 'சட்’டென்று மற்றவர்கள் புரியும்படி செய்யக் கூடாதா சார்?''

 ''பல முறை கவனிக்கப்படுவதே வெற்றி தானே. உங்களுக்குப் புரியாமல் போனதற்கு வருந்துகிறேன். நன்றி, மீண்டு வருக!''

கே.ஜியாவுதின், நாகப்பட்டினம்.

 ''உங்களைக் கவர்ந்த பெண் யார்?''

 ''என் தாயில் துவங்கிப் பலர்!''

சி.ராணி, தஞ்சாவூர்.

 ''கட்டிப்பிடி வைத்தியத்தில் தங்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை உண்டா? அது ரீலா... ரியலா?''

 ''ரீலைப் பொறுத்தவரை ரியல். பொது இடங் களில் ட்ரை பண்ணால்... வேலைக்கு ஆவாது!''

எம்.கே.ராஜ், திருப்பூர்.

 '' 'லேட்-சைல்டு’ என்கிற வருத்தம் இப்பவும் தங்களிடம் இருக்கிறதா?''

 '' 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்கறதுனால... இல்ல!’ பஞ்ச் வசன உபயம்: நண்பர் ரஜினி!''

கே.அன்பு, சென்னை\91.

 '' 'சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்பவர்’ என்ற அவர் மீதான விமர்சனம்பற்றி உங்கள் கருத்து?''

 ''ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நடித்ததால்தான் அவர் நடிகர் திலகமானார். ஒருவேளை, அந்தக் காலத்து ரசனை கொஞ்சம் ஓவரோ என்னவோ!''

மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

 '' 'விருமாண்டி’ திரைப்படத்தில் தூக்குத் தண்டனை வேண்டாம் என்ற கருத்தைச் சொன் னீர்கள். உயிர்களைக் கொல்பவனுக்கு வேறு என்ன தண்டனைதான் உச்சபட்சமாகத் தர முடியும்?''

 ''இது நான் தானம் பெற்ற கருத்து. இதை எனதாகவும் ஏற்கிறேன். பிழையாப் பெருமை சட்டத்துக்கு இல்லாதபோது, திருத்த முடியாத தீர்ப்பை வழங்கும் அருகதை அதற்கு இல்லை. காந்தியார் வாக்கில் சொன்னால், 'கண்ணுக்குக் கண்’ என்று வெகுளும் சட்டங்கள், ஒரு நாள் உலகையே குருடாக்கும்!''

என்.ரத்னகுமார், தஞ்சாவூர்.

 ''நீங்கள் ஒரு சிறந்த நடிகர், நல்ல சமூக அக்கறையாளர், உண்மையான பகுத்தறிவுவாதி, இதில் எதிர்கால சமுதாயம் உங்களை எப்படி நினைவுகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?''

 ''சமூக அக்கறைதான் என்னைப் பகுத்தறிவுவாதி ஆக்குகிறது. எதிர்காலத்துக்கு என்னைப்பற்றி நினைவுகொள்ள நேரம் இருந்தால், சமூக அக்கறைகொண்ட பலரில் ஒருவனாக, தனிப் பெயர் இல்லாத கூட்டமாக நினைத்தால்கூடப் போதுமானது!''

வி.புபேஷ், கானாடுகாத்தான்.

 ''நீங்கள் ஏன் இன்னும் ரகசியக் கவிஞராகவே இருக்கிறீர்கள்? உங்கள் கவிதைத் தொகுப்பு எப்போது வரும்?''

''இந்துக்களின் அனுமதியுடன் விரைவில்!''

ஹரிநாராயணன், செம்மஞ்சேரி.

 ''ஸ்டாண்ட் அப் காமெடி ஷோக்களில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுகள் உங்களை இமிடேட் செய்வதை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?''

 ''நானே ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுதானே. ஒரு கதை நினைவு வருகிறது. ஆர்வத்துடன் திரு.ராஜாஜியைப் படம் வரைந்த ஒரு சிறுவன், தான் அவரைத் தத்ரூபமாக வரைந்ததாய் நினைத்துக்கொண்டு, அதில் அவர் கையெழுத்து வாங்க முண்டியடித்து அவரிடம் நீட்ட. அதில் ராதாகிருஷ்ணன் என்று கையெழுத்திட்டாராம் ராஜாஜி. 'இது உங்க கையெழுத்து இல்லையே’ என்ற சிறுவனிடம், 'படமும் என்னுதில்லயே’ என்றாராம் ராஜாஜி. சில சமயம் மிமிக்ரிக்களும் அப்படி ஆவது உண்டு.''

பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்.

 '' 'மருதநாயகம்’ என்கிற மாமனிதரைச் சந்திக்கவே முடியாதா?''

 ''சினிமாவில் முடியும்!''

பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்.

 ''ஓட்டு போட விருப்பமா... வாங்க விருப்பமா?''

 ''எதுவுமே வாங்காமல் ஓட்டுப் போடவே எப்போதும் விருப்பம்!''

'அலொபஸ்’ கணேசன், மந்தைவெளி.

 ''நீங்கள் கண்ட கனவு நிஜமானது உண்டா... அந்தக் கனவு என்ன?''

 ''நான் நடிகனானது, இயக்குநரானது, சினிமாவுக்குப் பாட்டு எழுதியது, திரைக்கதை எழுதியது, உங்கள் பாராட்டுக்கள் கிடைத்தது எல்லாமே நான் கண்ட கனவுகளே!''

விகடன் மேடை - கமல்ஹாசன்

எம்.வினோதினி, கோயம்புத்தூர்.

 ''உங்களை எப்போதாவது ஸ்ருதியிடம் கண்டிருக்கிறீர்களா?''

 ''பலமுறை. என் மழலையை, என் கோபத்தை, என் அன்பை அவள் உருவில் பிம்பமாய்!''

இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்.

 ''நீங்கள் நடிக்காத படங்களில் பிடித்த படம்... சந்திக்காத நபர்களில் பிடித்த நபர்... உங்களை இயக்காத இயக்குநர்களில் பிடிக்காதவர்..?''

 ''நான் நடிக்க வாய்ப்பு இல்லாமல் போன பல நூறு படங்களின் பட்டியல் கைவசம்.

சந்திக்காத நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் திரு ரங்கா ராவும் அடக்கம்.

என்னை இயக்க மறந்த பல நல்ல இயக்குநர்கள் உள்ளனர். அந்தக் காரணத்துக்காகவே அவர்கள் அனைவரையும் பிடிக்காது!''

விகடன் மேடை - கமல்ஹாசன்

ச.வினோத், சென்னை\84

 ''நண்பர்கள்போல நட்புடன் ஓர் இயக்குநரிடம் சினிமாவைக் கற்றுக்கொள்ள முடியாதா? உதவி இயக்குநர்கள் அடிமைகளைப்போல நடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறதே?''

 ''அடிமைகளாக யாரும் இருக்கக் கூடாது. சினிமா கற்றுக்கொள்ள பள்ளிகள் இருக்கின்றன. டாக்டரிடம் கம்பவுண்டராக இருந்து, நட்புடன் மருத்துவம் கற்பது அபாயம். உங்களுக்கும் நோயாளிக்கும்!''

சா.கணேஷ், வேலூர்.

 ''பெரியார், காந்தி... உங்களுக்கு நெருக்க மானவர் யார்?''

 ''குஜராத்... கொஞ்சம் தூரம். ஈரோடு... பக்கம். தவிர, என் மொழியில் பேசுபவர் பெரியார். நான் பெரியாருடன் காந்திக்கு மிக நெருங்கியவன்!''

கே.வெங்கடேசன், தோட்டப்பாளையம்.

 ''சந்தர்ப்பம் கிடைக்காதவரைதான் எல்லோரும் நல்லவர்கள் என்கிற வாதத்தில் நீங்கள் நியாயம் காண் கிறீர்களா?''

 ''அது எல்லோருக்கும் பொருந்தாது. சந்தர்ப்பத்தை மறுத்தவர்கள் பலர் உண்டு... நான் உள்பட!''

ந.வந்தியக்குமாரன், சென்னை\41

விகடன் மேடை - கமல்ஹாசன்

 ''இப்போதுதான் 200 கோடி செலவழித்து, தமிழ்ப் படம் எடுக்கிறார்களே? 'மருதநாயகம்’ எடுக்க முடியாததற்குக் காரணம் பணமா, அல்லது வேறு எதுவும் சொல்ல முடியாத காரணமா? 12 வருட தமிழ்நாட்டின் கேள்வி இது?''

 '' 'மருதநாயகம்’ - ஒரு தமிழ்ப் படம் மட்டும் அல்ல; அது ஒரு ஃபிரெஞ்ச்  - ஆங்கிலப் படமும்கூட. உலக அரங்கில் அதை ஒளிரவிட இயலும் பங்காளி தேவை. அது எல்லைகள் தாண்டும் படம். வேலிக்கு உள்ளே சஞ்சரிப்பவர்களுக்கு, அதன் வியாபார மகிமை தெரியாமல் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை!''

-அடுத்த வாரம்...

 ''ரஜினியிடம் நீங்கள் கண்டு வியக்கும் குணம் என்ன?''

 ''தற்போது தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்?''

-கலக்கல் பதில்கள் தொடர்கின்றன...

விகடன் மேடை - கமல்ஹாசன்
விகடன் மேடை - கமல்ஹாசன்