வெளியிடப்பட்ட நேரம்: 00:10 (30/10/2018)

கடைசி தொடர்பு:00:10 (30/10/2018)

``ஒரு பெரும் குழு அமைக்கப்படும்” -#Metoo தொடர்பாக நடிகர் சங்கம் தீர்மானம்

``நீதிமன்றத்தின் வழிகாட்டலின்படி விசாகா கமிட்டி அடிப்படையில் ஒரு பெரும் குழு ஒன்று உருவாக்கப்படும்” என #Metoo விவகாரம் தொடர்பாகத் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் தெரிவித்தார். 

நடிகர் சங்கம் நாசர் #Metoo

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய #Metoo சர்ச்சை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. தமிழ் திரையுலகப் பிரபலங்கள் சிலர் மீதும் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று சிறப்பு செயற்குழுக் கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்கத்தில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தச் சிறப்பு செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர், கூட்டத்தில் எடுக்கப்பட்ட  முக்கிய இரண்டு தீர்மானங்கள் குறித்து தலைவர் நாசர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

``நடிகர் சங்கத்தினருடைய சுயமரியாதை, உரிமைகளைக் காப்பாற்றும் வகையில் ஏற்கெனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சட்டங்கள் இருந்தாலும், நீதிமன்றத்தின் வழிகாட்டலின்படி விசாகா கமிட்டி அடிப்படையில் ஒரு பெரும் குழு ஒன்று உருவாக்கப்படும். அக்குழுவில்  பெரும்பான்மை மகளிர் உட்பட, மனவியல் ரீதியான பிரச்னைகளை அலசி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மனநல மருத்துவர் ஒருவரும்  இடம் பெறுவார். ஆண் பெண் வேறுபாடின்றி பிரச்னைகளை பொதுவாக அக்குழு அணுகும். 

படப்பிடிப்பு தளங்களில் ஏற்படும் சகல பிரச்னைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்ட உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கவும் பரிந்துரை செய்கிறது” ஆகிய இரண்டு தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டது.