`உங்களுக்காகவே வந்தேன்'! - லட்சுமி ராமகிருஷ்ணனை அதிரவைத்த இயக்குநர் #MeToo | Lakshmy Ramakrishnan shares about her me too experience

வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (31/10/2018)

கடைசி தொடர்பு:19:44 (31/10/2018)

`உங்களுக்காகவே வந்தேன்'! - லட்சுமி ராமகிருஷ்ணனை அதிரவைத்த இயக்குநர் #MeToo

''மலையாளத் திரையுலகத்தின் மோஸ்ட் வான்டட் டைரக்டர் அவர். தேசிய விருது பெற்றவர். அவரோட பல படங்கள் இன்னைக்குப் பேசப்பட்டிருக்கு. அப்படிப்பட்டவர் என்னை படத்துக்கு கமிட் செய்துட்டு, தன்னோட ஆசை நிறைவேறலைன்னதும் அந்த வாய்ப்பை பறிச்சிட்டார். அந்தப் படத்துல மம்முட்டிக்கு மனைவி கேரக்டர்ல நான் நடிச்சிருக்க வேண்டியது''

மல்லுவுட்டின் மரியாதைக்குரிய இயக்குநர் 'பழசிராஜா' ஹரிஹரன் மீதுதான் 'மீ டூ' புகார் தெரிவிக்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

என்ன நடந்தது... பேசினோம்.

'' 'பழசிராஜா' வாய்ப்பு கிடைச்சதும் அத்தனை சந்தோஷப்பட்டேன். சின்ன கேரக்டர்தான்னாலும் மம்முட்டிக்கு மனைவி ரோல். பூஜையிலயும் கலந்துகிட்டேன். பூஜை நடந்த அந்த நாள்ல இருந்து நாலு நாள் கழிச்சு, திருவனந்தபுரத்துல ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். காலையில போய் இறங்கினதும் டைரக்டர்கிட்ட இருந்து மெசேஜ். சாயங்காலம் சந்திக்கலாம்னு. நான் அன்னைக்கு சாயங்காலமே ரிட்டர்ன் டிக்கெட் புக் பண்ணிட்டுப் போயிருந்தேன். அதனால, 'நிகழ்ச்சி முடிச்சிட்டு சென்னை கிளம்பற வழியில் நானே வந்து பாத்துட்டுப் போறேன்'னு சொன்னேன். இல்ல, இன்னைக்கு நைட் தங்குங்க. நான் இங்க வந்ததே உங்களைப் பார்க்கத்தான்'னு சொல்றார். நான் என்ன ஹீரோயினா, ஒரு ராத்திரி முழுக்க உட்கார்ந்து டிஸ்கஷ் பண்றதுக்கு?

என்னென்ன கெட்ட வார்த்தைகள் என் வாயில இருந்து வந்ததோ அத்தனையையும் மெசேஜ் பண்ணிட்டு கிளம்பி வந்துட்டேன்.

இப்ப சிலர், 'அவர் பெரிய ஆளு; அவரைப் பத்தில்லாம் 'மீ டூ'வுல பேசாதீங்க'ன்னு சொன்னாங்க. 'ஏன் பேசாம இருக்கணும்? பெரிய ஆளுங்கன்னா அப்படி இப்படிதான் நடந்துப்பாங்கன்னு சொல்லிட்டிருந்ததெல்லாம் மலையேறிடுச்சு. அன்னைக்கு எனக்கான ஒரு வாய்ப்பு பறிபோச்சு இல்லையா. அதனால நான் பேசியே ஆகணும்னுதான் இதைச் சொல்றேன்' என்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.