வெளியிடப்பட்ட நேரம்: 14:14 (02/11/2018)

கடைசி தொடர்பு:15:05 (02/11/2018)

``இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்...ஏன்னா?" - `அருவி' அஞ்சலி வரதன்

அஞ்சலி வரதன்

`அருவி' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர், திருநங்கை அஞ்சலி வரதன். தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தார். `அருவி' படத்துக்குப் பிறகு அஞ்சலி வரதன் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், அது குறித்து எந்த அறிவிப்பும் வெளிவராதது ஆச்சர்யமாக இருந்தது. எனவே, தற்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகத் தொடர்புகொண்டு பேசினோம்.

``அருவி படத்துக்கு அப்புறம் நிறைய பட வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, மறுபடி அருவி மாதிரியான படம் அமையவில்லை. சின்னச் சின்ன கதாபாத்திரத்தில் நின்னுட்டுப் போகுறதுல எனக்கும் உடன்பாடு இல்லை. அதுமட்டுமல்லாமல், என்னுடைய மாணவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுப்பதற்கே எனக்கு நேரம் சரியா இருக்கு. அதுல முழு திருப்தியும் கிடைக்குது. அதனால்தான் இனிமே படங்களில் நடிக்க வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கேன். 

'அருவி' அஞ்சலி வரதன்

அம்பத்தூரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு என்னுடைய குரு பொன்னி கூடச் சேர்ந்து நடனம் கத்துக்கொடுத்துட்டு இருக்கேன். அதைத் தவிர்த்து, பெரம்பூரில் ஒரு பள்ளியில் பரதம், வெஸ்டர்ன், ஃபோக் நடனங்கள் கற்றுக் கொடுத்துட்டு இருக்கோம். வியாசர்பாடியிலுள்ள சேரிக் குழந்தைங்களுக்கு இலவசமா பரதம் கத்துக் கொடுக்கிறோம். முன்னாடி திருநங்கைன்னு சொன்னா பலரும் ஒதுக்குவாங்க; முகம் சுளிப்பாங்க. இப்போ என்கிட்ட டான்ஸ் கத்துக்கிட்ட பசங்க எல்லோரும் என்னை அன்பா ஆன்ட்டின்னுதான் கூப்பிடுறாங்க. அவங்க என்னைப் பார்க்கும்போது புதுசா யாரையோ பார்க்கிற மாதிரியான பார்வை இல்லை. இயல்பா புன்சிரிப்போடு, என்கிட்ட பழகுறாங்க. நடனம் கத்துக்கிறதையும் தாண்டி செல்லமா விளையாடுவாங்க. அந்தக் குழந்தைங்களுடைய உலகில் மகிழ்ச்சியாய் வாழறேன். காசு, பணம் ரொம்பத் தேவையில்லை. எளிமையான வாழ்க்கை வாழவே ஆசைப்படுறேன்" எனப் புன்னகைக்கிறார், அஞ்சலி வரதன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க