வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (02/11/2018)

கடைசி தொடர்பு:22:54 (02/11/2018)

`சமூகத்தின் அமைதி பாதிக்கப்படும்!’ - கோவை கலவரம் குறித்த படத்துக்கு தணிக்கைக் குழு தடை

கோவை 1997 கலவரம் குறித்து எடுக்கப்பட்ட, 'தெளிவுப்பாதையின் நீச தூரம்' படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது.

தெளிவுப்பாதையின் நீச தூரம்

கூடங்குளம், நீட் தேர்வு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்காகப் பாடல்களை இயக்கியவர் அரவிந்த். இந்நிலையில், கோவையில் 1998-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புக்குக் காரணமான, 1997 கலவரம் குறித்து, பொது மக்களிடம் நிதி வாங்கி 'தெளிவுப்பாதையின் நீச தூரம்' என்ற படத்தை இயக்கினார். மதுபானக்கடை படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவின், ரிவைசிங் கமிட்டி அதிகாரிகளால் இந்தப் படம் தடை செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் அரவிந்திடம் பேசியபோது, ``கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் எதற்காக நடந்தது என்பதை யாருமே பேசுவதில்லை. 1997-ம் ஆண்டு, நடந்த கலவரம்தான், 1998-ல் குண்டு வெடிப்பாக வெடித்தது. 18 பேர் அதில் உயிரிழந்துள்ளனர். எனவே, அதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக, அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், வழக்கறிஞர்களைச் சந்தித்து, இரண்டு ஆண்டுகள் ஆய்வில் ஈடுபட்டோம்.

 

 

பின்னர், பொதுமக்களின் நிதியுதவியுடன் படத்தை எடுத்தோம். இந்தப் படத்துக்காக 4 ஆண்டுகள் உழைத்திருக்கிறோம். ஏற்கெனவே, மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் ஈ.சி பிரிவினர் இந்தப் படத்துக்குத் தடைவிதித்தனர். இதையடுத்து, ஆர்.சி பிரிவினர் இந்தப் படத்தை நேற்று பார்த்தனர். அவர்களும், இந்தப் படம் ஒரு சாரரை மட்டும் ஆதரிப்பதாக உள்ளது. எனவே, இந்தப் படம் வெளியானால் சமூகத்தின் அமைதி பாதிக்கப்படும் என்று கூறி ஒருமனதாக முடிவு செய்து படத்துக்குத் தடை விதித்துவிட்டனர்.

இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. திரைப்படங்கள் அரசியல் பேச வேண்டும். மக்களிடம் நல்ல அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் திரைப்படங்கள்தான் முக்கிய கருவி. திரைப்படத்தை வெளிக்கொண்டுவர, சட்டப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்றவற்றின் மூலமாகவும் மக்களுக்குத் திரைப்படத்தைக் கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறோம்" என்றார்.