Published:Updated:

இது நவீன இன சுத்திகரிப்பு!

இது நவீன இன சுத்திகரிப்பு!

இது நவீன இன சுத்திகரிப்பு!

இது நவீன இன சுத்திகரிப்பு!

Published:Updated:
##~##
சா
று உறிஞ்சப்பட்ட சக்கையை இயந்திரம் வெளியே துப்புவதுபோல, 'சிங்காரச் சென்னை’யைத் தங்கள் உழைப் பால் உருவாக்கிய குடிசை மக்கள் நகரத்துக்கு வெளியே துரத்தி அடிக்கப்படுகின்றனர். பறக்கும் ரயில், பறக்கும் சாலை என்ற பிரமாண்டத் திட்டங்க ளுக்கு இரையான இந்தக் கூலித் தொழிலாளர்கள் இப்போது 40, 50 கி.மீ. தாண்டி நவீன 'கார்ப்ப ரேட் சேரி’களில் கிடக்கின்றனர். பழைய மகாபலிபுரம் சாலை, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் ஒரே இடத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் கண்ணகி நகர், அப்படிப்பட்ட குடியிருப்புகளில் ஒன்று!
இது நவீன இன சுத்திகரிப்பு!

'குப்ப மாதிரி வாரியாந்து கொட்டிட்டானுங்கோ. இங்க ஒரு வசதியும் கெடியாது. நாங்க தெனமும் செத்துக்கினு கிடக்கோம்’ என்று புலம்பும் இவர்களின் தினசரி வாழ்க்கை மிகத் துயரமானது. கூவம், பக்கிங்காம் கால்வாய், மாம்பலம் கால்வாய் போன்ற இடங்களில் குடிசை அமைத்து வாழ்ந்த இவர்கள், சிறு சிறு கூலி வேலைகளைச் செய்து பிழைக்கும் உதிரித் தொழிலாளர்கள். பறக்கும் ரயில், பறக்கும் சாலை, ஐ.டி. காரிடார் சாலை விரிவாக்கம், கூவத்தைச் சுத்தப் படுத்தும் திட்டம் போன்றவற்றால் கடந்த 10 ஆண்டுகளில் வெளியேற்றப்பட்டவர்கள். இவ்வளவு தூரத்தில் விடப் பட்டதால், முதலில் பறிபோனது இவர்களின் வேலை. அடுத்தது, குழந்தைகளின் படிப்பு.

''மயிலாப்பூர் சிலேட்டர்புரம் காவாங்கரையாண்டதான் வீடு. மழை பெய்ஞ்சா பின்னாடி சாக்கடைத் தண்ணீர் ஓடும். அப்பத்தான் எட்டு வருஷத்துக்கு முந்தி இங்கே இட்டாந்து விட்டாங்கோ. 150 சதுர அடியில இத்துனூண்டு வீடுதான். 'சரி, மாடி வீடு’ன்னு நினைச்சோம். ஆனா, இங்க எந்த வசதியும் கிடையாது. தண்ணி, ஆஸ்பத்திரி, பஸ், கரன்ட், பள்ளிக்கூடம், ரோடு... எதுவும் கிடையாது. அங்கே காவாங்கரையாண்ட இருந்தாலும் நிம்மதியா இருந்தோம். ஒரு நோய் கிடையாது. இங்கே எல்லா நோவும் வருது. அங்கே 900 ரூபாய் சம்பளத்துக்கு வீட்டு வேலைக்குப் போய்க்கினு இருந்தேன். இங்கே வந்து அதுவும் போச்சு!' என்ற சரிதாவின் வருத்தம், இங்கு சகலருக்கும் பொருந்தும்.

சுமார் ஒரு லட்சம் மக்கள் குடியிருக்கும் கண்ணகி நகரில் இருப்பதோ, ஒரே ஒரு உயர்நிலைப் பள்ளி, ஒரே ஒரு நடுநிலைப் பள்ளி, ஒரே ஒரு தொடக்கப் பள்ளி. இதனால், பள்ளிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பல குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 100 கி.மீ. பயணம் செய்து, நகரத்துக்குள் முன்பு படித்த அதே பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இன்னும் பலர் பள்ளி செல்வதையே விட்டுவிட்டனர். கண்ணகி நகரில் ஓர் அரசு மருத்துவ மனைகூட இல்லை. காவல் நிலையமும் இல்லை. இப்படி நகரத்தின் வெளியே விரட்டப்பட்ட குடிசை மக்களின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 லட்சம்!

இது நவீன இன சுத்திகரிப்பு!

''இது இத்துடன் முடியாது. 2013-க்குள் குடிசைகளே இல்லாத சென்னையை உருவாக்குவோம் என அரசு அறிவித்து இருக்கிறது. இனிமேல்தான் இந்தக் குடிசைகள் அப்புறப்படுத்தும் அராஜகம் அதிவேகமாக நடைபெறும்!' என்கிறார் இசையரசு. 'குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம்’ அமைப்பின் ஒருங்கிணைப் பாளரான இவர், 'எங்கள் நிலம், எங்கள் உழைப்பு: யாருக்காக சிங்காரச் சென்னை?’ என்ற ஆவணப் படம் எடுத்தவர்.

இது நவீன இன சுத்திகரிப்பு!

''வெகு விரைவில் சிங்காரச் சென்னையின் அழகுக்கு உறுத் தலாகத் தெரியும் கூவத்தின் குடிசை கள் அனைத்தும் அகற்றப்பட்டு, அங்கு பூங்காக்கள் வரும். ஆனால், அங்கு குடியிருந்த மக்களின் கதி? 'அவர்கள் ஆக்கிரமிப்பில்தானே இருக்கிறார்கள்? அகற்றுவதில் என்ன தவறு?’ என இதை மிடில் கிளாஸ் மனநிலை எளிமையாகக் கடந்து செல்கிறது. பணக்காரர்களின் கேளிக்கையாக இருக்கும் சென்னை போட் கிளப் என்ன பட்டா நிலமா? கூவத்தின் கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு இருக்கும் எந்தவொரு வணிக நிறுவனத்தின் காம்பவுண்ட் சுவரையாவது இவர்கள் இடித்தது உண்டா? ஊருக்குள் இருந்து மக்கள் வெளியேற மறுத்தால், அங்கு திடீர் தீ விபத்துகள் (?) நடக்கின்றன. கடந்த ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களில் மட்டும் சென்னைக்குள் 20 குடிசைப் பகுதிகள் எரிந்து சாம்பலாயின. எரிந்த உடனேயே 'இனிமேல் இங்கு யாரும் வீடு கட்டக் கூடாது’ என்று டோக்கனைக் கொடுத்து வெளியே அனுப்பிவிடுகின்றனர்.

நாங்கள் அடிப்படையான சில கோரிக்கைகளை வைக்கிறோம். அதை நிறைவேற்றாமல், எங்களை அடித்துத் துரத்துவதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தினால், ஜெர்மனியில் ஹிட்லரும், இலங்கையில் ராஜபக்ஷேவும் செய்த இனச் சுத்திகரிப்புபோல, சேரி மக்களை அகற்றுவதையும் நவீன இனச் சுத்திகரிப்பு என்றுதான் கருத முடியும்!' என்கிறார் இசையரசு கோபமாக!

படங்கள் : கே.கார்த்திகேயன்