வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (03/11/2018)

கடைசி தொடர்பு:22:30 (03/11/2018)

`பொறுப்பு வேண்டாம்’ - பாக்யராஜ் மீண்டும் ராஜினாமா!

பாக்யராஜின் ராஜினாமா கடிதத்தை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஏற்க மறுத்த நிலையில், அவர் மீண்டும் ராஜினாமா செய்துள்ளார்.

பாக்யராஜ்

சர்கார்' படத்தின் கதைக் கரு தன்னுடையது எனவும், 'செங்கோல்' படத்துக்காகத் தான் பதிவுசெய்திருந்த கதையைத்தான் சர்காராக இயக்குநர் முருகதாஸ் படமாக்கியுள்ளதாகவும், இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்திருந்தார். முன்னதாக, கதை தொடர்பாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் புகார் தொடுத்திருந்தார். இந்தப் புகாரை ஆய்வுசெய்த எழுத்தாளர் சங்கத் தலைவர் இயக்குநர் கே.பாக்யராஜ், 'சர்கார்' - 'செங்கோல்' கதைகளை ஆய்வுசெய்து, இரு கதைகளின் மையக் கருவும் ஒன்றுதான் எனக் கூறினார்.  வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் கருத்தும் தெரிவித்தார். இதற்கிடையில், உயர் நீதிமன்றத்தில் கதை விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டது. `சர்கார்' படத்தின் டைட்டில் கார்டில் வருண் ராஜேந்திரன் பெயரும் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

`எனக்கு  தேவையில்லாத அசௌகரியங்கள் ஏற்பட்டதால்’ தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, தனது கடிதத்தை சங்கத்துக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. இது தொடர்பாக  தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தினர் ``ராஜினாமா கடிதத்தை அனைத்து உறுப்பினர்களிடம் தெரிவித்தோம். அனைவரும் ஒருமனதாக ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர். நிர்வாகிகள் முதல் செயற்குழு உறுப்பினர்கள் வரை நீங்களே தலைவராகத் தொடர வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களது முடிவையே தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம்” என கூறி பாக்யராஜ் ராஜினாமாவை ஏற்க மறுத்தனர். இந்நிலையில் மீண்டும் தான் ராஜினாமா செய்வதாக கூறி, மற்றொரு கடிதத்தை அவர் சங்கத்துக்கு அனுப்பியுள்ளார். அவருக்கு ஆதரவாக பலர் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், பாக்யராஜின் மற்றொரு ராஜினாமா கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.