வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (04/11/2018)

கடைசி தொடர்பு:12:40 (04/11/2018)

பொங்கலுக்கு போட்ருக்கலாமே பாஸ்! - 96 படம் குறித்து த்ரிஷா வருத்தம்

சமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த 96 படத்தைப் பொங்கலுக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பலாமே என த்ரிஷா வருத்தம் தெரிவித்துள்ளார். 

த்ரிஷா

photo Credits : Twitter/ @trishtrashers

விஜய் சேதுபதி, த்ரிஷா முதல்முறையாக இணைந்து நடித்த படம் 96. இந்தப் படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்க, `நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்துள்ளது. நிறைய நாளுக்கு அப்பறம் சூப்பரான லவ் சப்ஜெக்ட் படம்' என்று பலரையும் ஃபீல் பண்ண வைத்த காவியம் '96'. இந்தப் படத்தை பார்த்த பலர் 'இப்படி ஒரு ஜானு- ராம் நமக்கில்லையே!' என்று புராணங்கள் பாடிக்கொண்டிருக்கின்றனர். பல அழகான தருணங்களை இந்தப் படம் நினைவுபடுத்தி, வெளியானது முதல் இன்றுவரை பலரையும் தங்களின் பழைய நினைவுகளில் கட்டிப்போட்டு வைத்துள்ளது. இந்தப் படத்தில் உள்ள ‘காதலே காதலே’ பாடல் பலரது ரிங்டோனாக தற்போதும் ஒலித்துவருகிறது. 

இந்நிலையில் இந்தப் படம் வரும் தீபாவளிக்கு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளதாக விளம்பரம் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே விளம்பரம் த்ரிஷாவையும் பெருமளவில் பாதித்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள த்ரிஷா, “ 96 படம் வெளியாகி ஐந்து வாரங்கள் மட்டுமே ஆகிறது. இதுவரையில் இந்தப் படம் ஒளிபரப்பாகும் தியேட்டர்கள் 80 சதவிகிதம் நிறைந்துள்ளது. இந்தப் படம் மிகவும் முன்னதாகவே தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படுவது எங்கள் குழுவினருக்கு வருத்தமளிக்கிறது. இதைப் பொங்கல் சிறப்பு படமாக வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.