வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (04/11/2018)

கடைசி தொடர்பு:16:30 (04/11/2018)

`இதைவிட அவரை எப்படி அழைக்க முடியும்?!’ - சல்மான் கான் குறித்து ஷாருக் கான் நெகிழ்ச்சி

ட்விட்டரில் #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஷாருக் கான் பதிலளித்தார். அதில் சல்மான் கான் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி சல்மான்கான் ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஷாருக்கான்

ஷாருக்கான் - சல்மான்கான் பாலிவுட்டின் இருபெரும் ஜாம்பவான்கள். ஹிந்தி சினிமா பார்க்காதவர்களும், ஏதோ ஒருவகையில் இவர்கள் இருவரின் பெயர்களையும் அறிந்து வைத்திருப்பர். குறிப்பாக 90-களில் பாலிவுட் சினிமாவை இவர்கள் இருவரும் தான் ஆக்கிரமித்திருந்தனர். 1995-ம் ஆண்டு வெளியான  'தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே' திரைப்படம் மும்பையில் உள்ள ’மராத்தா மந்திர்’ தியேட்டரில்  1009 வாரங்கள் (அதாவது சுமார் 20 ஆண்டுகள்) ஓடி சாதனை படைத்தது. 1994-ம் ஆண்டு வெளியான சல்மான் கானின் `ஹம் ஹாப் ஹைன் கோன்’ படம் பாலிவுட்டின் எவர் கிரீன் சினிமாவாக ரசிகர்கள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கிறது. இரண்டு நட்சத்திர நாயகர்களிடையே தொழில் போட்டி இருந்த போதும், பரஸ்பர நட்புடன் பழகி வருகின்றனர். 

சல்மான் கான்

சல்மான் கானின் `டியூப் லைட்’ படத்தில் ஷாருக்கானின் கெஸ்ட் அப்பியரன்ஸ் இருதரப்பு ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. நீண்டநாட்களுக்கு பிறகு ஒரு ஃப்ரேமில் இரண்டு பெரிய ஹீரோக்களை பார்ப்பது அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. இந்நிலையில், ட்விட்டரில் #AskSRK ஹேஷ்டேக் மூலம் ஷாருக்கானிடம் உலகம்முழுவதுமுள்ள அவரது ரசிகர்கள் கேள்வி கேட்டனர். அதில் சல்மான் கான் ரசிகர் ஒருவர் `சல்மான்கான் அண்ணன் குறித்து ஒருவர் வார்த்தையில் கூறவேண்டுமென்றால் என்ன சொல்வீர்கள்? என கேட்டுள்ளார். அதற்கு ஷாருக்கான், ``அண்ணனை விட பெரியதாக என்ன இருக்க முடியும்? அதுவும் சிறுவயதிலே தாய் தந்தையை இழந்த என் போன்றோர்க்கு, சல்மான்கானை அண்ணன் என அழைப்பதே சரியாக இருக்கும்” என்று பதிலளித்துள்ளார். ஷாருக் கானின் இந்த பதில் அவர்கள் இருவரின் ரசிகர்களையும் நெகிழச் செய்துள்ளது. இதனிடையே, ஷாருக் நடிப்பில் நேற்று ஹீரோ படத்தின் டிரெய்லர் வெளியானது இரட்டிப்பு மகிழ்ச்சியாய் அமைந்தது.