வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (05/11/2018)

கடைசி தொடர்பு:17:57 (05/11/2018)

இணையதளத்தில் `சர்கார்' ... தமிழ் ராக்கர்ஸ் சவால்!

`சர்கார்' திரைப்படம் HD தரத்தில் வெளியிடப்படும் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில் இயங்கும் ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகத்தில் எங்கு படம் ரிலீஸ் ஆனாலும் அந்தப் படத்தை உடனடியாகத் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுகிறது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். அதில், முக்கியமாக இந்த இணையதளமானது தமிழ்ப்படங்களுக்கு சாவாலாக அமைகிறது. 

விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா மற்றும் பலர் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் `சர்கார்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். தீபாவளியன்று வெளியாக இருக்கும் இந்தப் படத்தை, இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில் இயங்கும் ட்விட்டர் கணக்கு ஒன்றில் பதிவிடப்பட்டுள்ளது.  

சர்கார்

சமீபத்தில், சர்கார் படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் புகார் அளித்தார். மேலும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் இயக்குநர் முருகதாஸுக்கும் வருணுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு இந்தப் பிரச்னை முடிந்த நிலையில், `சர்கார்' படத்தை தமிழ் ராக்கர்ஸ் போன்ற 3,715 இணையதளங்கள்  திருட்டுத்தனமாக வெளியிடும். எனவே, இந்த இணையதங்களை தடை செய்ய வேண்டும் என்று `சர்கார்' படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உயர்நீதிமன்றத்தை நாடியது. 

`சர்கார்' திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றமும் தடைவிதித்தது. மேலும், அனைத்துத் திரையரங்கு உரிமையாளர்களும் ஆலோசனை நடத்தி பல்வேறு சோதனைக்குப் பின், பாதுகாப்பாகத் திரைப்படத்தை வெளியிடுகின்றனர். இந்த நிலையில் `சர்கார்' திரைப்படத்தை HD தரத்தில் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று சவால் விடும் வகையில் தமிழ் ராக்கர்ஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது, அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

`கபாலி', `மெர்சல்' உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியான முதல் நாளிலேயே தமிழ் ராக்கர்ஸ் தங்களுடைய இணையதளத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.  தற்போது, `சர்கார்' படத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் 'சவால்' முறியடிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க