`சிட்டி பாபு உயிரோடு இருந்திருந்தால் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்திருப்பார்!’ - மதன்பாப் உருக்கம் | Actor madhan bob speaks about Chitti Babu

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (08/11/2018)

கடைசி தொடர்பு:19:05 (08/11/2018)

`சிட்டி பாபு உயிரோடு இருந்திருந்தால் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்திருப்பார்!’ - மதன்பாப் உருக்கம்

இறந்த நடிகர் சிட்டிபாபு பற்றி நடிகர் மதன்பாப் சில நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

``சிட்டிபாபுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரிடம் நிறைய சமயோஜித புத்தி இருக்கும். எதிராளியை டக்குனு மடக்கிப் பேசுவார். ஜெயா டிவியின் `அரி கிரி அசெம்பிளி' நிகழ்ச்சி ஹிட் ஆனதுக்கு சிட்டிபாபுதான் காரணம்.’ உருக்கமாகப் பேசுகிறார் நடிகர் மதன்பாப். 

சிட்டிபாபு

காமெடி நிகழ்ச்சிகள் மூலமாகப் பலரின் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் சிட்டிபாபு. பார்வையாளர்கள் பலரையும் சிரிக்க வைத்தவர், அவரின் குடும்பத்தை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி இறந்துவிட்டார். காலங்கள் ஓடினாலும், அவரது நினைவுகள் இன்னும் இருக்கிறது. இன்று அவரின் நினைவுநாள். அவரின் நினைவுகள் குறித்து மதன்பாப்-பிடம் பேசினேன். 

மதன் பாப்

`அதீத திறமைசாலி சிட்டிபாபு. இவரை பலவருடங்களாக எனக்குத் தெரியும். 'பட்டிமன்றம் சந்தானம்'ங்கிற நிகழ்ச்சியை என்னோட நண்பர் ஒருவர் நடத்திட்டு இருந்தார். அதில் நான் கலந்துகொண்டபோதான் சிட்டிபாபு அறிமுகம் ஆனார். நிறைய கனவுகளுடன் இருந்தார். அதைப் பற்றியெல்லாம் என்னிடம் பேசுவார். அவரும் நானும் சன் டிவியில் நடத்திய 'அசத்தப்போவது யார்' நிகழ்ச்சி ஹிட் அடித்தது. இந்த நிகழ்ச்சிக்குத் தயாரிப்பாளரும் நான்தான். சிட்டிபாபுவை இந்த நிகழ்ச்சிகாக நான்தான் அழைத்தும் வந்தேன். பலரையும் வம்பிழுத்துப் பேசுவார். அவரது பேச்சில் ஹ்யூமர் இருக்கும். ஆனால், அவர் வாழ்க்கையில் கஷ்டங்கள் மட்டுமே இருந்தது. அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதயபிரச்னை அவருக்கு இருந்தது. அதுதவிர சொந்த வீடு கட்டியது காரணமாகக் கடன் பிரச்னையும் இருந்தது. எல்லாத்தையும் ஓர் ஆளாகச் சமாளித்துக்கொண்டிருந்தார். அதுவே அவருக்கு ஓவர் மனஅழுத்தத்தைக் கொடுத்து அவரை படுக்கையில் முடக்கிவிட்டது. என் வீட்டு விசேஷங்களுக்கெல்லாம் வந்து வாழ்த்தியிருக்கிறார். 

அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டதும், அதை மனசு ஏத்துக்கவே இல்லை. அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலிகூட செலுத்த முடியவில்லை. ஏன்னா, அதுக்குள்ளே அவருடைய உடலை அடக்கம் பண்ணிட்டாங்க. சினிமாவில் பெரிய காமெடி நடிகராக வலம் வரவேண்டியவரை காலம் வாரிக்கொண்டுவிட்டது. உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பா சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்திருப்பார்'' என்று மனவருத்தத்துடன் சொல்லி முடித்தார் மதன் பாப். 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க