`சர்ச்சைக் காட்சிகளை நீக்க ஒப்புதல்!’ - சர்கார் விவகாரத்தில் புதிய திருப்பம் | The production team has decided to remove few scenes from the movie sarkar

வெளியிடப்பட்ட நேரம்: 19:32 (08/11/2018)

கடைசி தொடர்பு:19:39 (08/11/2018)

`சர்ச்சைக் காட்சிகளை நீக்க ஒப்புதல்!’ - சர்கார் விவகாரத்தில் புதிய திருப்பம்

சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க படக்குழு சம்மதம் தெரிவித்துள்ளது.

சர்கார்

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் `சர்கார்' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக அ.தி.மு.க-வினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அரசு வழங்கும் விலையில்லாப் பொருள்களை எரிப்பது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் திரையரங்குகள் முன்னிலையில் போராட்டம் நடத்தி வரும் அ.தி.மு.க-வினர், தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களைக் கிழித்து எறிந்தனர். இதனால், பல இடங்களில் படத்தின் காட்சிகள் ஒத்தி வைக்கப்பட்டது. 

திருப்பூர் சுப்பிரமணியன்படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிகள் குறித்து தமிழக அமைச்சர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காமல் படத்தை ஓட விடமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு சம்மதம் தெரிவித்ததாக திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவரிடம் பேசியபோது,``சர்கார் படத்துக்குத் தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருகிறது. இதனால், சில இடங்களில் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலையும் ஏற்பட்டது. இது தொடர்பாக படத்தை விநியோகம் செய்த தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளியிடமும், படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸிடமும் தெரிவித்தோம். அவர்களும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சம்மதம் தெரிவித்தனர். சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு. உரிய சென்சார் அனுமதி பெற்று நாளை பிற்பகல் முதல் படம் திரையிடப்படும்” என்றார். இதையடுத்து சர்கார் சர்ச்சை சற்று ஓயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.