வெளியிடப்பட்ட நேரம்: 00:25 (09/11/2018)

கடைசி தொடர்பு:00:26 (09/11/2018)

`சட்டத்திற்குப் புறம்பான செயல்' - சர்கார் படத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவு!

சர்கார் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சட்டத்திற்குப் புறம்பான செயல் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த்

விஜய் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் 'சர்கார்'. இத்திரைப்படத்தில், அ.இ.ம.மு.க என்ற கட்சியின் தலைவராகவும் மாநிலத்தின் முதல்வராகவும் மாசிலாமணி என்ற பெயரில் பழ.கருப்பையா நடித்துள்ளார். இதில், மாசிலாமணியின் மகளாக கோமளவள்ளி என்ற பெயரில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். `இதில், அரசால் வழங்கப்பட்ட இலவச மிக்ஸி, கிரைண்டர்களை மக்கள் தீயில் போடுவதுபோல காட்சி வைக்கப்பட்டுள்ளது. கோமளவள்ளி என்பது மறைந்த முதல்வரின் இயற்பெயராகும். அரசு வழங்கிய இலவசப் பொருள்களை தீயில் போடுவது என்பது அரசை அவமதிக்கும் காட்சிகள்' என அ.தி.மு.க-வினர் பரவலாகக் குற்றம் சாட்டிவருகின்றனர். 

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பட காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். பல இடங்களில் அதிமுக சார்பில் சர்கார் திரைப்படத்திற்கு எதிராகப் போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் இன்று இரவு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்வதற்காக காவல்துறை அவரது இல்லத்துக்கு விரைந்துள்ளது. ஆனால் அவர் வீட்டில் இல்லாததால் காவல்துறை திரும்பிவிட்டது" எனத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டது. இதைத் தொடர்ந்து திடீர் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் அவரைக் கைது செய்யச் செல்லவில்லை. ரோந்து பணிக்காகவே சென்றோம் எனக் காவல்துறை விளக்கம் அளித்தது. இருப்பினும் முருகதாஸ் வீட்டின் முன்பு கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதற்கிடையே, கைது தகவல் வெளியான நிலையில் பலரும் காவல்துறையின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் சங்கத் பொதுச்செயலாளர் விஷால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். `சர்கார் அனுமதியளித்து மக்கள் பார்த்த பின் சர்ச்சை எதற்காக எனத் தெரியவில்லை. எதுவும் தவறான விஷயங்கள் நடக்காதது என நம்புவோம்" எனக் கூறியுள்ளார். 

இதேபோல் நடிகர் ரஜினிகாந்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க