வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (09/11/2018)

கடைசி தொடர்பு:09:30 (09/11/2018)

ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வியல்! - சர்வதேச விழாக்களில் விருதுகளைக் குவித்துவரும் `தொரட்டி'

ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வியலையும், அதன்கூடவே காதல், வன்மம் சொல்லுகின்ற  படம்தான் ‘தொரட்டி'. ஆடுகளுக்குத் தேவையான இலை, தழைகளைப் பறிப்பதற்காக வைத்திருக்கும் சிறிய ஆயுதம் தொரட்டி. தென்மாவட்ட கதைக் களத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த `தொரட்டி' படத்தை இயக்குநர் கே.பாக்யராஜிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்த பி.மாரிமுத்து இயக்கியுள்ளார். ‌கேமரா மேன் ஷமன்மித்ரூ இப்படத்தைத் தயாரித்து, நடித்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. படம்குறித்து இயக்குநரிடம் பேசினோம்.

தொரட்டி 

படத்தைப் பற்றி?

1980 காலகட்டத்தில் ராமநாதபுரம் வட்டாரத்திலுள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் உண்மைக் கதைதான் இது. ஆட்டு கிடைபோட்டு பிழைப்பு நடத்திவரும் மக்களின் வாழ்வியலைப் பின்புலமாகக்கொண்டு, வெந்த சோறு, சுட்ட கறி, பட்ட சாராயத்துக்காக வாழுற கூட்டத்தால் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் பாதிப்புதான் தொரட்டி படம். ரொம்ப எதார்த்த தொனியில் படத்தை எடுத்திருக்கிறோம்.

படத்தில் பாதி பேர் புதுமுகம். எப்படி இது சாத்தியமானது?

ஆமாம், படத்தில் வேலைபார்த்த முக்கால்வாசி பேர் புதுமுகம்தான். நான், ஹீரோ, ஹீரோயின், சவுண்ட் டிசைனர் என கிட்டத்தட்ட அனைவரும் புதுமுகம்தான். அதனால், நேரடியாக நாங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போகவில்லை. ஷூட்டிங்க்கு முன், படத்தில் நடிக்கவுள்ள எல்லா நடிகர்களுக்கும் இரண்டு மாதம் ட்ரெயினிங் கொடுத்தோம். சில கேரக்டருக்கு ஆறு மாசம் வரை ட்ரெயினிங் கொடுத்தோம். இதனால், ஒட்டுமொத்த படத்தையும் எடுத்து முடிப்பதற்கு இரண்டு வருடம் ஆகிவிட்டது. 

தயாரிப்பாளரே ஹீரோவா களமிறங்கியிருக்கிறாரே?

இது வேற ஒரு ஹீரோவை வைத்து எடுக்கவேண்டிய படம். கிராமத்துப் பின்னணி, 80-களில் நடக்கிற மாதிரி கதை என்பதால், படத்தில் ஹீரோ கேரக்டருக்கு நிறைய வேல்யூ இருக்கும். கிட்டத்தட்ட ஆறேழு மாசம் வெயிலில் நின்று நடிக்கவேண்டி இருந்தது. இந்த கேரக்டருக்கு ஷமன் பொருத்தமாக இருப்பார் என்று தோணியது. இதை அவரிடமும் சொன்னேன். கேரக்டரின் வேல்யூவைப் புரிந்துகொண்ட ஹீரோவாக நடிக்கச் சம்மதித்தார். ஷமன் அடிப்படையில் ஒரு கேமரா மேன். கே.வி. ஆனந்த், ரவி கே சந்திரன் போன்றவர்களிடம் உதவியாளராக இருந்து, நான்கு படத்துக்கும் மேல் வேலைபார்த்திருக்கிறார். திறமையான நடிகராக கண்டிப்பாக வருவார். இதேபோல, படத்தோட இசை சங்கர் சுகவனமும், பின்னணி இசை ஜித்தின் ரோஷனும் அமைத்துள்ளனர்.  பாடல், பின்னணி இசை இண்டுமே கிராமத்துடைய வாழ்வியலுக்கு ஏற்ற மாதிரி வந்திருக்கிறது. 

சிவி குமார் எப்போதும் படத்தை தயாரித்துத்தான் வெளியிடுவார். முதல் முறையாக உங்கள் படத்தை வாங்கியிருக்கிறாரே?

சிவி குமார் சார் இதுவரை 18 படம் வரைக்கும் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். இயக்குநராகவும் பணியாற்றிவருகிறார். அவரை அணுகுவதில் கொஞ்சம் கஷ்டம் இருந்தது. இருந்தாலும் படத்தைப் பார்த்த பிறகு, ``ரொம்ப நல்ல படம் இது. இந்த மாதிரி  படத்தை எடுக்க எல்லாராலும் முடியாது. கண்டிப்பா இந்தப் படத்தை நான் வெளியிடுறேன்" எனச் சொல்லி உதவிபுரிந்தார். 

ஹீரோயின் பற்றி?

கதாநாயகியை மையமாக வைத்துதான் படத்தின் கதை அமைந்துள்ளது. இதனால், ஹீரோயின் கேரக்டருக்கு நிறைய மெனக்கட வேண்டியிருந்தது. சத்யகலாவை கதாநாயகியாகத் தேர்ந்தெடுப்பதற்கு முன் கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் ஆடிசன் நடத்தினோம். சத்யகலாவின் சொந்த ஊர் கர்நாடகா. பொள்ளாச்சியில் செட்டில் ஆனதால் நன்றாகத் தமிழ் பேசினார். இதுவரை படத்தைப் பார்த்தவர்கள் ஹீரோயின் கேரக்டரைப் பாராட்டியுள்ளார்கள். அந்த அளவுக்கு சத்யகலா நடிப்பு பேசப்பட்டுள்ளது. புதுமுகங்கள் அதிகமாக இருந்தாலும் எல்லோரும் ரசிக்கும்படி படத்தை நேர்த்தியாக எடுத்துள்ளோம். சர்வதேச விழாக்களுக்கு படத்தை அனுப்பிவைத்ததில், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிப்பு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன. இன்னும் நிறைய விழாக்களில் படத்தை திரையிட உள்ளோம்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க