வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (09/11/2018)

கடைசி தொடர்பு:15:32 (09/11/2018)

`மூன்று மாற்றங்கள்!’ - சர்காருக்கு இரண்டாவது சென்சார் #Sarkar

`சர்கார்’ படத்தில் நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சர்கார் 

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் `சர்கார்' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக அ.தி.மு.க-வினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசு வழங்கும் விலையில்லாப் பொருள்களை எரிப்பது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிகள் குறித்து தமிழக அமைச்சர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காமல் படத்தை ஓட விடமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்து வந்தனர். 

இந்த நிலையில், படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கப் படக்குழு சம்மதம் தெரிவித்ததாக திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனால் சர்கார் சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், நீக்கப்பட்ட காட்சிகளுடன் சென்சார் செய்யப்பட்டு இன்று பிற்பகல் மீண்டும் படம் திரையிடப்பட்டு வருகிறது.

சென்சார் சான்றிதழ்

இந்த நிலையில், படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சர்கார் படக்குழுவினர் தாமாக முன்வந்து நீக்கிய காட்சிகள், பின்வருமாறு, 1. அரசு வழங்கிய இலவசப் பொருள்களான மிக்ஸி மற்றும் கிரைண்டர் முதலிய பொருள்களை தீயில் தூக்கி வீசுவது போன்ற காட்சி நீக்கப்பட்டுள்ளது. 2. படத்தில் நடித்த வரலட்சுமியின் கதாபாத்திரப் பெயரான கோமளவள்ளியில், `கோமள’ என்ற வார்த்தை மற்றும் மியூட் செய்யப்படுகிறது. 3. மேலும் `பொதுப்பணித்துறை’ மற்றும் `56 வருஷம்’ ஆகிய வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளன. அதே போன்ற குறிப்பிட்ட வார்த்தைகளில் உள்ள சப் டைட்டிலும் மாற்றப்பட்டுள்ளதாக சென்சார் போர்டின் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.