வெளியிடப்பட்ட நேரம்: 21:39 (09/11/2018)

கடைசி தொடர்பு:21:43 (09/11/2018)

`ரசிகர்களின் பாதுகாப்புக்காகவே காட்சிகள் நீக்கப்பட்டன!’ - சர்கார் படக்குழு விளக்கம் #Sarkar

சர்கார் படத்தில் இருந்து சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து படக்குழு விளக்கமளித்திருக்கிறது. 

சர்கார் காட்சிகள்

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் தீபாவளியன்று வெளியான படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்தில் அரசை அவமதிப்பது போலவும், மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தும் விதத்திலும் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறிய அவர்கள், சர்கார் படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் முன்னால் வைக்கப்பட்டிருந்த விஜய் பேனர்களைக் கிழித்தெறிந்தனர். மேலும், சில இடங்களில் வன்முறையிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, சர்கார் படத்தை இரண்டாவது முறையாகத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பிய படக்குழு, குறிப்பிட்ட அந்தக் காட்சிகளை நீக்கியது. இதனால், சர்கார் சர்ச்சை ஓரளவு ஓய்ந்தது. 

இந்தநிலையில், சர்கார் படக் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து படக்குழு தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், ``சர்கார் திரைப்படத்தில் வரும் சில காட்சிகளுக்கு எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல திரையரங்குகள் முன் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அதனால் திரையரங்க உடமைகளுக்குச் சேதம் விளைவித்தனர். அதைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களின் வேண்டுகோளை ஏற்றுத் திரையரங்குகளுக்கும் திரைப்படம் காணவரும் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது, பாதுகாக்கும் ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.