`கதாநாயகனின் நிறம்தான் கொஞ்சம் இடிச்சிருச்சு!’' - பரியேறும் பெருமாள் குறித்து இயக்குநர் பாரதிராஜா | Bharathiraja speech in a movie event

வெளியிடப்பட்ட நேரம்: 20:51 (10/11/2018)

கடைசி தொடர்பு:10:22 (12/11/2018)

`கதாநாயகனின் நிறம்தான் கொஞ்சம் இடிச்சிருச்சு!’' - பரியேறும் பெருமாள் குறித்து இயக்குநர் பாரதிராஜா

பரியேறும் பெருமாள்

 

``ரயில் தேடி வந்து கொல்லும் நான் யார்
பூக்கும் மரமெங்கும் தூக்கில் தொங்கும் நான் யார் 
நதியில் செத்த மீனாய் மிதக்கும் நான் யார்
குடிசைக்குள் கதறி எரிந்த நான் யார்
தேர் ஏறாத சாமி இங்கு நான் யார்
உன் கை படாமல் தண்ணீர் பருகும் நான் யார்
ஊர் சுவர்கட்டி தூரம் வைக்க நான் யார்
மலக்குழிக்குள் மூச்சையடக்கும் நான் யார்"

மேற்குறிப்பிட்டவை சமீபத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் `நீ ஒளி நான் யார்' என்ற பாடலில் இடம்பெற்ற வரிகள்தாம். கதைக்களத்திலும் காட்சிரீதியிலும் திரைத்துரையில் மிகுந்த கவனம் பெற்ற திரைப்படம். சாதிய ஒடுக்குமுறைகளை, ஆணவக் கொலைகளை மட்டுமல்லாமல் சமூகப் பிளவுகளை இருதரப்பும் கொஞ்சம் தேநீர் குடித்தபடி பேசித் தீர்ப்போம் என்ற உரையாடலுக்கு அழைத்த முதல் தமிழ் சினிமா என்று இதைச் சொல்லலாம். இன்று பிரசாத் லேப்பில் பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கௌதமன், ராம் போன்றோர் பங்கு பெற்று தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இறுதியாக ஏற்புரை வழங்கிய இப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதை தொகுப்பின் மூலமாகவும் `மறக்கவே நினைக்கிறேன்' என்ற ஆனந்த விகடன் தொடர்கதை மூலமும் மிகுந்த கவனத்தைப் பெற்றவராவார். இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசியதிலிருந்து...

``நாம் எதை விமர்சிக்கிறோமோ, அதைத் தாண்டி ஒரு படி மேலே போயிருக்க வேண்டும். மாரிசெல்வராஜை விட ஒரு படி மேலே போயிருந்தால் இதை விமர்சிக்கலாம். அப்படித் தாண்டி இன்னும் நான் போகவில்லை. இப்படம் பார்த்த பிறகு மீண்டும் மீண்டும் மாரி செல்வராஜ் முகம்தான் வந்து வந்து போனது. நான் ரொம்ப பிரமிச்சுப்போனேன். இப்போது வரும் இயக்குநர்கள் தொழில்நுட்பத்திலும் சிந்தனையிலும் ஒருபடி மேலே இருக்கிறார்கள். இவர்கள் ஒத்தையடிப் பாதையைச் சாலையாக்குபவர்கள். 

மாரி செல்வராஜின் கதையில் அவன் வாழ்ந்த வாழ்க்கையின் வலி தெரிகிறது. தலித் சினிமா, தலித் இலக்கியம் என்பதையெல்லாம் ஒத்துக்கவே மாட்டேன். மறுபடியும் மறுபடியும் தலித் தலித் என்று எதற்காகச் சொல்லவேண்டும். ஒரே இலக்கியம்தான். இலக்கியவாதிகள் கூட ரொம்ப நாளாக தலித் இலக்கியம் என்று சொல்கிறார்கள். இதனால், ரொம்ப நாளாக அவர்களுடன் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கிறேன். என் தாயின் கருவறைக்குள் புகும் விந்துக்கு ஏதாவது நிறம் இருக்கா. அதில் நிறம் இருந்தால் சாதி இருக்கு. கருவறைக்குள் போராட்டம் இருக்கும். ஆனால், நிறமும் சாதியும் அணுவுக்குக் கிடையாது. நாம் எல்லோரும் ஒரே சமூகம், ஒரே சாதி. 

பாரதிராஜா

மாரி செல்வராஜுக்குள் பெரிய கலைஞன் ஒளிந்திருக்கான். பிரச்னையை மையமாகச் சொல்லியிருக்கிறான். தன் கருத்தைச் சொல்லும்போது ஒரு எழுத்தாளன் என்ற வலிமையோடு சொல்லியிருக்கிறான். ஆனால், காட்சிகள் இருக்கே, அது அசாத்தியமாக இருக்கிறது. காட்சிகளில் மண்ணும் பேசுகிறது மனிதர்களும் பேசிக்கொண்டு போகிறார்கள். சண்டாளன் ஒருத்தன் பொறந்துட்டானடா என்று அங்கேயே நான் விழுந்துட்டேன். ஆனால், கதாநாயகனின் நிறம்தான் கொஞ்சம் இடிச்சிருச்சு. ரொம்ப அழகா நடித்திருப்பான். நிறம் மட்டும் கொஞ்சம் கறுப்பு தடவி இருக்கலாம். கருப்பி மீது அவன் எவ்வளவு நேசம் வைத்திருந்தானோ அதைவிட அந்தக் கருப்பி அவன்மீது நேசம் வைச்சிருந்துச்சு. 

கனவு என்ன வருகிறதோ அந்தக் கனவை படமாக்க வேண்டும் என்று `நிழல்கள்' எடுத்த காலத்தில் நினைத்தேன். அப்ஸ்ட்ராக்டைக் கொஞ்சம் கொஞ்சம் செய்திருப்பேன். ஆனால், `நான் யார் பாடலில் அதைச்  சிறப்பாகச் செய்திருக்கிறான். இப்பாடலைப் போன்று ஒரு பாடல், இதற்கு முன் தமிழ் சினிமாவில் இல்லை. இவன் அற்புதமான கலைஞன் அறிவாளி என்று சொல்வதற்கு இந்தப் பாடல் ஒன்றே போதும். அதைக்காட்டிலும் யார் மனதும் புண்படாமல், தான் எந்தச் சமூகம் என்று சொல்லாமல் ஒரு கீறலும் இல்லாம் எடுத்திருப்பதை நினைத்து மிகவும் பாராட்டுகிறேன்."