Published:Updated:

இயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டிப்பு

இயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டிப்பு
இயக்குநர் பாலாவுக்கு பிடிவாரன்ட் ரத்து; நடிகர் ஆர்யாவுக்கு நீதிபதி கண்டிப்பு

`அவன்-இவன்' திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறான கருத்து வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் பாலா நெல்லை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன் வழக்கறிஞர்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். 

இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘அவன்-இவன்’ திரைப்படத்தில் நடிகர்கள் ஆர்யா, விஷால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்த இந்தத் திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் உருவத்தையொத்த ஒரு கேரக்டர், இடம் பெற்று இருந்தது. அத்துடன் சிங்கம்பட்டி ஜமீனையும் சொரிமுத்து ஐயனாரை அவமதிக்கும் வகையில் திரைப்படத்தில் வசனங்கள் இடம்பெற்றதாகப் புகார் எழுந்தன.

அதனால் அதிருப்தி அடைந்த சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் மகன் சங்கர் ஆத்மஜன், அவதூறு வழக்கு தொடர்ந்தார். அவர் சார்பாக வழக்கறிஞர் ரமேஷ், அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், `சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் பெயருக்கும் புகழுக்கும் இழுக்கு ஏற்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் திட்டமிட்டு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் வழிபடக்கூடிய சொரி முத்து ஐயனார் கோயிலையும் அவதூறாகச் சித்திரித்து இருக்கிறார்கள். திட்டமிட்டு இந்தச் செயலில் ஈடுபட்ட இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டு இருந்தார். 

இந்த வழக்கு அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, தயாரிப்பாளரான தனக்கும் படத்தின் கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் தெரிவித்ததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு கடந்த ஜூன் 29-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் ஆஜராகவில்லை. அதனால் அவர்களுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இயக்குநர் பாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். அதனால் அவர் மீதான பிடிவாரன்ட் ரத்து செய்யப்பட்டது. ஆனால், நடிகர் ஆர்யா ஆஜராகவில்லை. அதனால் அவர் வரும் 16-ம் தேதி நடக்கும் அடுத்த விசாரணைக்கு கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார். இயக்குநர் பாலா நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்தபோது வழக்கறிஞர்கள் பலரும் போட்டிப்போட்டுக்கொண்டு இயக்குநர் பாலாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.