வெளியிடப்பட்ட நேரம்: 20:17 (17/11/2018)

கடைசி தொடர்பு:20:23 (17/11/2018)

``இதுதான் என் கடைசி தமிழ்ப் படம்!'' - உருகிய சின்மயி

பிரபல பின்னணிப் பாடகி, பின்னணிக் குரல் ஆர்ட்டிஸ்ட் சின்மயி. சமீபத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த '96 படத்தில் த்ரிஷாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருந்தார். படத்தில் நாயகி பாடும் பாடல்களையும் இவரே பாடியிருந்தார். தமிழ்நாடு டப்பிங் யூனியனில் உறுப்பினராக இருந்த தன்னை தற்போது யூனியனிலிருந்து நீக்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார் சின்மயி.

சின்மயி

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணத்தில் உள்ள சின்மயி, இதுகுறித்து வெளியிட்டுள்ள ட்வீட்டில், ``நான் கடந்த இரண்டு வருடங்களாக டப்பிங் யூனியனுக்காக சந்தா செலுத்தவில்லை எனக் காரணம் கூறப்பட்டு, யூனியனில் எனது உறுப்பினர் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை டப்பிங் யூனியனில் உறுப்பினர் அல்லாத ஒருவர் எந்தப் படத்துக்கும் டப்பிங் செய்ய முடியாது. நான் எனது சந்தாவை செலுத்தவில்லை என இதனால் மெம்பர்ஷிப் ரத்துசெய்யப்படும் என எந்த ஒரு தகவலும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. டப்பிங் யூனியனில் இருந்து என்னைத் தூக்கும் முடிவின் முதல் நடவடிக்கையாகத்தான் இது தெரிகிறது. 

நான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அந்தத் தொகையைக் கட்டினாலும், எனது உறுப்பினர் அந்தஸ்து திரும்பக் கிடைக்குமா எனத் தெரியவில்லை. எனினும், இந்த இரண்டு வருடத்தில் எனது சம்பளத் தொகையிலிருந்து 10 சதவிகிதத் தொகையை யூனியன் எடுக்கத் தவறியதில்லை. தமிழில் '96 தான்  எனது கடைசிப் படமாக இருக்கப்போகிறது. டப்பிங் யூனியனின் இந்த நீக்கம் தொடருமேயானால், ஒரு நல்ல படத்துடன் தமிழில் எனது டப்பிங் பயணத்தை முடிப்பது மகிழ்ச்சியே. பை! பை!" என்று உருக்கமாகக்  கூறியுள்ளார்.

சின்மயி

சமீபகாலமாக தமிழ் சினிமாவைப் பதம்பார்த்துவரும் மீ டூ (#metoo) விவகாரத்தில் குரல் கொடுத்து, சர்ச்சைகளுக்கு ஆளானவர் சின்மயி என்பது குறிப்பிடத்தக்கது.