`இனி இந்த கிராமம் என்னுடையது' - மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறும் விஷால்! | actor vishal adopts karagavayal village in thanjavur affected by gaja cyclone

வெளியிடப்பட்ட நேரம்: 11:34 (25/11/2018)

கடைசி தொடர்பு:12:23 (25/11/2018)

`இனி இந்த கிராமம் என்னுடையது' - மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறும் விஷால்!

கஜா புயல் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில் புதிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளார் நடிகர் விஷால்.

விஷால்

கஜா புயல் முடிந்து ஏழு நாட்களுக்கு மேலாகியும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அதிலிருந்து மீளவில்லை. நிறைய இடங்களில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் அவர்கள் உணவுக்காக அலைந்து வருகின்றனர். புயல் பாதிப்பதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, அதன்பின் நடக்கவேண்டிய மீட்பு நடவடிக்கைளில் தோல்வி அடைந்துவிட்டது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனினும் நிவாரணப் பணிகள் துரித கதியில் இரவுபகலாக நடந்து வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக அரசு ஒருபுறம் நிவாரணம் வழங்கிவந்தாலும், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகச் சென்று உதவிகள் வழங்கிவருகின்றனர். இதேபோல் திரைப் பிரபலங்களும் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். சிலர் நேரடியாகவும், சிலர் அரசாங்கத்தின் மூலமாகவும் உதவி வருகின்றனர். 

அந்தவகையில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, விஜய் சேதுபதி, விஜய், சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் குமார், ரஜினிகாந்த், அஜித்குமார் உள்ளிட்டோர் உதவினர். ஆனால் இவர்களைப் அல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நடிகர் விஷால் புதிய நடவடிக்கை ஒன்றை  முன்னெடுத்துள்ளார். அதாவது, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், கார்க்வயல் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார் விஷால். இது தற்காலிகமாக இல்லாமல், முழுமையாக மறுசீரமைப்பு செய்து இந்தியாவிலேயே ‘சிறந்த கிராமமாக‘ மாற்றுவேன் என்றும் அந்த கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ``இனி இந்த கிராமம் என்னுடையது. இந்தக் கிராமத்தை பழைய நிலைமைக்குக் கொண்டு வருவேன். அதற்கு நான் உறுதியளிக்கிறேன். இது தற்காலிகமாக இல்லாமல், முழுமையாக மறுசீரமைப்பு செய்து முன்மாதிரி கிராமமாக மாற்றுவேன்" எனக் கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த கார்காவயல் கிராம மக்கள், எங்கள் கிராமத்தை தத்தெடுத்த விஷாலுக்கு எப்பொழுதும் நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று கூறியுள்ளனர். எல்லோரையும் நிதியுதவி என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் விஷால் முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க