`முதலில் அக்‌ஷய் குமார் எங்கள் சாய்ஸ் இல்லை!’ - ரகசியம் உடைத்த இயக்குநர் ஷங்கர் | Arnold Was Director shankar's First Choice For Villain in 2.0

வெளியிடப்பட்ட நேரம்: 09:44 (26/11/2018)

கடைசி தொடர்பு:09:55 (26/11/2018)

`முதலில் அக்‌ஷய் குமார் எங்கள் சாய்ஸ் இல்லை!’ - ரகசியம் உடைத்த இயக்குநர் ஷங்கர்

2.0 படத்தின் வில்லனாக இரண்டாவதாகத் தேர்வு செய்யப்பட்டவர்தான் அக்‌ஷய் குமார் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். 

அக்‌ஷய் குமார்

2010-ம் ஆண்டில் வெளியான 'எந்திரன்' படம் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டிருந்தார், இயக்குநர் ஷங்கர். இதன் பின்னர் நடிகர் ரஜினி, அக்‌ஷய் குமார், ஷங்கர் கூட்டணியில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 2.0. முழுக்கவே 3டி தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்துக்கான கிராஃபிக்ஸ் வேலைகள், உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் நடைபெற்று வந்தது. சில நாள்களுக்கு முன்பு இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரஜினி ரசிகர்கள், சினிமா பிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 2.0 படம் வரும் 29-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதற்கிடையில், மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் ஷங்கர் 2.0 படம் தொடர்பாக பல சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, `` முதலில் 2.0 படம் தொடங்கும்போது அதில் நடிப்பவர்களின் தேர்வு நடைபெற்றது. இதில் வில்லனாக நடிக்க எங்கள் முதல் தேர்வு அர்னால்டுதான். அவரை வைத்தே கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது. பிறகு அவரிடம் கால்ஷீட் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றது. இறுதியில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் இருக்கும் சில காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் இருக்கும் சிறந்த நடிகரை வில்லனாகத் தேர்வு செய்யும் ஆலோசனை நடைபெற்றது. அதில் பலரும் அக்‌ஷய் குமார் இந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பார் எனக் கூறினர் எனக்கும் அவரே சரியான தேர்வாக இருப்பார் எனத் தோன்றியது. பின்னர்தான் இந்தக் கூட்டணி உருவானது”  எனத் தெரிவித்துள்ளார்.