`உங்களை மகிழ்விக்கத் தவறிவிட்டேன்!’ - மன்னிப்பு கோரும் நடிகர் அமீர்கான் | Actor amir khan feels sad that he failed to entertain the audience

வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (27/11/2018)

கடைசி தொடர்பு:08:10 (27/11/2018)

`உங்களை மகிழ்விக்கத் தவறிவிட்டேன்!’ - மன்னிப்பு கோரும் நடிகர் அமீர்கான்

இந்திய சினிமாவின் ஐக்கானாக விளங்கும் அமிதாப் பச்சனும் அமீர்கானும் இணைந்து நடித்த  `தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படம், கடந்த தீபாவளி அன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இவர்கள் தவிர கத்ரீனா கைஃப்,  'டங்கல்' படத்தில் அமீர் கானின் மகளாக நடித்த பாத்திமா சனா எனப் பலர் நடித்திருந்தனர். விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இப்படத்தை இயக்கினார். தொடர் வெற்றி படங்களைக் கொடுத்து வந்த அமீர்கான், இந்தப் படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்ததால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. 

தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்

தீபாவளி அன்று வெளியான இப்படத்தின் முதல்நாள் காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல்தான். முதல் நாளிலே 50 கோடி வரை வசூல் செய்தது. ஆனால், படத்துக்கு எதிர்பார்த்ததுபோல் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரவில்லை. இதனால் அடுத்தடுத்த நாள்களில் வசூல் கடுமையாகப் பாதித்து. இந்த நிலையில், படம் வெளியாகி இரண்டரை வாரங்களுக்குப் பின்னர் படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து அமீர் கான் மனம் திறந்து பேசியுள்ளார். 

அமிர்கான்

விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமீர்கான்,  ``படத்துக்குக் கிடைத்த ரெஸ்பான்ஸுக்கு நானே முழுப் பொறுப்பு. நாங்கள் நல்ல படத்தை தர வேண்டும் என எங்களால் முடிந்தவரை உழைத்தோம். இப்படத்தை ரசித்தவர்களும் உள்ளனர். அவர்களுக்கு எனது நன்றி. படம் பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், அவர் எண்ணிக்கையில் குறைவானவர்கள் என்பதை அறிவேன். பெரும்பாலானோருக்குப் படம் பிடிக்கவில்லை என்ற உண்மையை அறிவேன். அதனால், நாங்கள் செய்ததில் தவறு உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. 
திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஏமாற்றம் அடைந்தவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த முறை என்னால் அவர்களை மகிழ்விக்க முடியவில்லை. எதிர்பார்ப்புகளுடன் படம் பார்க்க வந்தவர்களால் அதைக் கொண்டாட முடியவில்லை என்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது” என்றார். 

படத்துக்குக் கிடைத்த நெகட்டிவ் ரெஸ்பான்ஸுக்கான காரணம் பற்றி தெரியுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமீர்கான்,  `அது தொடர்பாக பொது இடத்தில் பேச எனக்கு விருப்பமில்லை. எனது படங்கள், எனது குழந்தை போன்றது. அதன் தோல்வியும் எனதே. ரசிகர்களுக்கு படத்தைக் பற்றியோ அல்லது என்னைப் பற்றியோ பேச முழு உரிமை உள்ளது. படம் பார்க்க வந்தவர்களை ரசிக்க வைக்க முடியாமல் போனதுக்காக வருந்துகிறேன். அடுத்த முறை நாங்கள் இன்னும் கடினமாக உழைப்போம்’ என்றார். 

இந்தப் படம் அடுத்த மாதம் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.