வெளியிடப்பட்ட நேரம்: 09:22 (28/11/2018)

கடைசி தொடர்பு:09:22 (28/11/2018)

விஜய் 63 படத்தில் தெலுங்கு நடிகை? - விளக்கமளித்த ராஷ்மிகா!

விஜய் 63 படத்தில் தான் நடிப்பதாக எழுந்த தகவல்களுக்கு ரசிகை ராஷ்மிகா விளக்கமளித்துள்ளார். 

ராஷ்மிகா

சர்கார் படத்தைத்தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் அட்லியின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களைக் குஷியில் ஆழ்த்தியது.  விஜய்யின் 63-வது படமான இதை கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக மூன்று தினங்களுக்கு முன்பு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.  மேலும், இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மெர்சல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை மேற்கொண்ட ரூபன் என அதே மெர்சல் கூட்டணி மறுபடியும் இணைந்திருக்கிறது.

இதற்கிடையே, சில மாதங்கள் முன்பு தெலுங்கில் வெளியான  ‘கீதா கோவிந்தம்’ படத்தில் ஹீரோயினாக நடித்து தன் கியூட் ஆன ரியாக்‌ஷன் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அந்தப் படத்துக்குப் பிறகு தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மனதிலும் இவர் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.  விஜய் 63 படத்தில் நடிகை ராஷ்மிகாவும் நடிக்கவுள்ளதாக சில செய்திகள் சமூகவலைதளங்களில்  மிக வேகமாகப் பகிரப்பட்டன.  விஜய் புகைப்படத்துடன் ராஷ்மிகா படத்தை எடிட் செய்தும், பெயரிடப்படாத விஜய் 63 படத்துக்குப் புதிய பெயர் வைத்து போஸ்டர்களையும் வெளியிட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

Photo : Twitter/@ThalapathyTk

இந்த நிலையில், விஜய் 63 படத்தில் தான் நடிப்பதாக கூறப்பட்ட தகவலுக்கு விளக்கமளித்துள்ளார் நடிகை ராஷ்மிகா.  தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், `` விஜய், அட்லி படக்கூட்டணியில் நான் நடிக்கிறேனா எனப் பலரும் என்னைக் கேட்டு வருகின்றனர். அதற்கான வாய்ப்பு தற்போது கிடைக்கவில்லை. இருந்தும் நான் விரைவில் அவர்களுடன் இணைந்து பணிபுரிவேன் என நம்புகிறேன். உங்களிடமிருந்து எனக்கு இவ்வளவு ஆதரவு வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் நான் தமிழ் படத்தில் நடிப்பேன். அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.