வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (29/11/2018)

கடைசி தொடர்பு:14:40 (29/11/2018)

காயத்ரி ரகுராமுடன் காரில் பயணித்தபோது, நடந்தது என்ன? - `பிக்பாஸ்' காஜல்

நடிகை காயத்ரி ரகுராம், வாகனம் ஓட்டியபோது மது அருந்தியிருந்ததாக போலீஸார் அபராதம் விதித்த விவகாரத்தில் முரணான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிற சூழலில், அவருடன் காரில் பயணித்த 'பிக்பாஸ்' காஜலிடம் பேசினோம்.

``அன்னைக்கு கார்ல நான், காயத்ரி, அவங்க அம்மா மூணு பேர்தான் இருந்தோம். வழக்கமா நான் வாடகை கார்ல போயிடுவேன். அன்னைக்கு ரொம்ப நேரம் ஆகிட்டதாலதான் அவங்களே என்னை வீட்டுல இறக்கி விடறதாச் சொல்லி வந்தாங்க. இருமல் பிரச்னை இருக்கிறதால அவங்க தொடர்ந்து அதுக்கான 'சிரப்' எடுத்துட்டு வர்றாங்க. அதுல ஆல்கஹால் கலந்திருக்குமான்னு எனக்குத் தெரியலை, போலீஸ் நிறுத்தி காயத்ரியை, சோதனைக் கருவியில் ஊதச் சொன்னப்ப, அதுல பாசிடிவா காட்டுச்சுன்னு சொல்லி, 'நீங்க குடிச்சிருக்கீங்க'னு சொன்னாங்க.

காஜல்

'இல்ல, நான் குடிக்கலை'னு காயத்ரி சொன்னதை நம்ப மறுத்தது போலீஸ். இதனால நேரம்தான் ஆச்சே தவிர நாங்க அங்க இருந்து கிளம்ப முடியலை. அதனால கடுப்பாகித்தான் `பணம் கட்டிட்டா, கிளம்பலாமா'ன்னு கேட்டோம். 3,500 கட்டிட்டா போகலாம்'னாங்க. கையில கார்டுதான் இருந்தது. கிண்டியில ஒரு ஃப்ரண்ட்கிட்ட வாங்கித் தர்றேன்னு காயத்ரி சொன்னதும், 'சரி'ன்னு ஒரு போலீஸ்காரரும் எங்ககூட கார்ல ஏறி பின்னாடி உட்கார்ந்துக்கிட்டார். சொன்ன மாதிரியே அங்க போய் அவங்க ஃப்ரண்ட் கிட்ட இருந்து பணம் வாங்கித் தந்த பிறகே எங்களை அனுப்பினாங்க. இதுதான் நடந்தது.

போலீஸ்காரங்க கிட்ட காயத்ரி வாக்குவாதம் பண்ணினாங்க, அவங்களை வீட்டுல போய் இறக்கி விட்டது போலீஸ்தான்னெல்லாம் எப்படி செய்தி பரவுச்சுனு தெரியலை.

நான் போலீஸைப் பார்த்து ஒரேயொரு கேள்வியை மட்டும் கேக்க விரும்பறேன். `காயத்ரி குடிச்சிட்டு கார் ஓட்டறதா அபராதம் விதிக்கிறீங்களே, பிறகு ஏன் மறுபடி அவங்களை கார் ஓட்ட அனுமதிச்சு, அந்தக் கார்ல நீங்களும் பின் சீட்ல உட்கார்றீங்க. இந்த ஒரு கேள்விக்குப் பதில் சொல்லட்டும் போலீஸ்’’ என்கிறார் காஜல்.