வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (29/11/2018)

கடைசி தொடர்பு:18:35 (29/11/2018)

ரஜினியின் 2.0 படம் பார்க்க விடுமுறை அறிவித்த கோவை நிறுவனம்! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 2.0 திரைப்படம் இன்று வெளியான நிலையில், அப்படத்தைக் காண்பதற்காக கோவையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, தன் ஊழியர்களுக்கு அப்படத்தின் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுடன் விடுமுறையும் அறிவித்து ஊழியர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. 

ரஜினி

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 10,500 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 7,850 திரையரங்குகளில் அப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதில் 5,000 திரையரங்குகள் வட மாநிலங்களைச் சேர்ந்தவை. தமிழகம் உட்பட ஐந்து தென் மாநிலங்களில் 2,850 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 850 - 900 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், முதல் நாளிலேயே இப்படத்தைக் காண ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுவான திரை ஆர்வலர்களிடமும் ஆர்வம் காணப்பட்டது. 

இதனால், இன்று வேலை வைத்தாலும் ஊழியர்கள் மட்டம் அடித்துவிடுவார்கள் என்று எண்ணியதாலோ என்னவோ, ஐ.டி நிறுவன ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, இன்று தன் ஊழியர்களுக்கு 2.0 திரைப்படத்தைக் காண்பதற்காக விடுமுறை அளித்துள்ளது. 

இது தொடர்பாக அந்த நிறுவனம் தன் ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ``இந்திய சினிமாவின் பெருமையான 2.0 திரைப்படத்தின் வெளியீட்டையும் நமது தலைவர் பத்ம விபூஷண் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரையும் கொண்டாடும் விதமாக 29.11.2018 வியாழக்கிழமையன்று நமது நிறுவனத்துக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. தொழில் ரஜினிகாந்த் காட்டும் கடின உழைப்பும் அக்கறையும், அர்ப்பணிப்பும் நமக்கு கற்றுக்கொடுப்பவை ஏராளம். இந்தப் படம் இதுவரையான உலகச் சாதனைகளை முறியடிக்க வாழ்த்துகிறோம். மேலும், இப்படத்தின் இயக்குநர் ஷங்கர் சார், அக்ஷய் குமார், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களையும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனத்தையும் வாழ்த்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது. 

ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதம்

'Excused Absence from Work' என்ற பெயரில் இந்த விடுமுறையை அந்த நிறுவனம் அளித்துள்ளது. அத்துடன் முதல்நாள் காட்சியைப் பார்ப்பதற்காக இலவச டிக்கெட்டுகளையும் அவர்களுக்கு வழங்கி குஷிப்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க