வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (30/11/2018)

கடைசி தொடர்பு:16:05 (30/11/2018)

``அவர் மறைந்த பிறகு ரொம்ப தவிச்சுட்டோம்!’’ - ரகுராம் மாஸ்டர் நினைவுகள் பற்றி கிரிஜா ரகுராம்

ரகுராம் மாஸ்டர்

பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் நினைவு தினம் இன்று (நவம்பர் 30). நடன இயக்குநராகப் புகழ்பெற்றவர், பல மொழி சூப்பர் ஸ்டார்களின் நண்பராகவும் இருந்தார். கணவரின் நினைவுகளைப் பகிர்கிறார், கிரிஜா ரகுராம்.

ரகுராம் மாஸ்டர்

"தங்கப்பன் மாஸ்டர்கிட்ட என் கணவரும் நானும் அசிஸ்டென்ட்டா இருந்தோம். அப்போதுதான் எங்க காதல் மலர்ந்தது. பிறகு மாஸ்டரான அவரிடம், நான் கொஞ்சகாலம் அசிஸ்டென்டா இருந்தேன். எங்க கல்யாணத்துக்குப் பிறகு, 'திறமையான டான்ஸரான நீ, இனி மாஸ்டரா வொர்க் பண்ணு'னு என்னை ஊக்கப்படுத்தினார். டான்ஸ் மாஸ்டர்களாக இருவரும் பல மொழிகள்லயும் பரபரப்பாக வொர்க் பண்ணினோம். ஒருபோதும் எங்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் வந்ததில்லை. அவரைவிட நான் ஜூனியர்தான். ஏதாவது சந்தேகம்னு அவர்கிட்ட கேட்டா, சூப்பரா சொல்லிக்கொடுப்பார். நான் அவருக்கு கரெக்‌ஷன் சொன்னாலும் ஏத்துப்பார். 2002-ம் ஆண்டு, என் மூத்த பொண்ணுக்கு குழந்தை பிறந்ததும் சினிமாவுல வொர்க் பண்றதைக் குறைச்சுகிட்டேன். 

ரகுராம் மாஸ்டர்

பிஸியா இருந்தாலும் குடும்பம்னு வந்துட்டா எங்களுக்காகத் தன் நேரத்தை மிகச் சரியா ஒதுக்குவார். ஒவ்வொரு வருஷமும் எங்களோட கல்யாண நாளுக்கும் தீபாவளிக்கும் பட்டுப்புடவைகள் பரிசளிக்கிறதை வழக்கமா  வெச்சிருந்தார். இப்ப அந்தப் புடவைகள்தான் அவரோட நினைவா எனக்கு இருக்குது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல மொழி சூப்பர் ஸ்டார்களுடன் நட்புடன் இருந்தார். குறைந்த நேரத்தில், குறைந்த பட்ஜெட்டில், குவாலிட்டியான பாடல் காட்சிகளை முடிச்சுக்கொடுப்பார். ஷூட்டிங்னா அன்னைக்கு 3 மணிக்கெல்லாம் எழுந்திடுவார். குளிச்சு ரெடியாகி, எங்க வீட்டில் 4 - 6 மணி வரைக்கும் தன்னோட அசிஸ்டென்ட் டான்ஸர்களுக்கு ரிகர்சல் சொல்லிக்கொடுத்திடுவார்.

'தசாவதாரம்' உள்பட, ஒரு சில படங்கள்ல நடிச்சார். சில படங்களை இயக்கினார். நல்லா இருந்தவர், ஒரு பட ஷூட்டிங்ல கால்ல அடிபட்டதால் சிரமப்பட்டார். சிகிச்சை எடுத்து, நல்லாதான் வொர்க் பண்ணிட்டு இருந்தார். 2013-ம் ஆண்டு, இதே நாளில் திடீர்னு கார்டியாக் அரெஸ்ட்னால எங்களை விட்டுப் பிரிஞ்சுட்டார். அதுவரைக்கும் அவர் பாதுகாப்பில் இருக்கிறோம் என்ற நம்பிக்கையில, சினிமா உலகம் தவிர, எந்த வெளியுலக விஷயங்களையும் தெரிஞ்சுக்காம இருந்துட்டோம். அதனால, அவர் மறைந்த பிறகு ரொம்ப தவிச்சுட்டோம். இப்போ வெளியுலக விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு, அவர் நினைவிலேயே வாழப் பழகிட்டோம்" என்கிறார் கிரிஜா ரகுராம் கலக்கத்துடன்.