`விசில் மூலம் கொடுத்த ட்யூன் அது!’ - `காதலின் தீபம் ஒன்று...’ பாடலின் சுவாரஸ்ய பின்னணி பகிர்ந்த இளையராஜா | Chennai college celebrated Ilayaraja's birthday

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (30/11/2018)

கடைசி தொடர்பு:19:00 (30/11/2018)

`விசில் மூலம் கொடுத்த ட்யூன் அது!’ - `காதலின் தீபம் ஒன்று...’ பாடலின் சுவாரஸ்ய பின்னணி பகிர்ந்த இளையராஜா

சென்னையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில், மாணவர் இயக்கம் சார்பில் இசைஞானி இளையராஜாவின் 75 -வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்தார் இளையராஜா. பின்னர், இசைஞானியின் பாடல்களுக்கு கல்லூரி மாணவிகள் நடனமாடினார். அடுத்து, மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இளையராஜா மிகவும் உற்சாகமாக பதிலளித்தார். மாணவர்கள் எழுப்பிய கேள்விகளும், அதற்கு இளையராஜா அளித்த பதில்களும்... 

இளையராஜா

உங்களுக்கு இளையராஜா என்ற பெயர் வரக் காரணம் என்ன? 

என்னுடைய அப்பா, ராஜையா மற்றும் ஞானதேசிகன் என இரு பெயர்களை வைத்தார். பின்னர் ஜாதகம் பார்த்து, ஞான தேசிகன் என்ற பெயரை வைத்தார். பள்ளியில், ராஜையா என்றே இருந்தது. பின்னர், புகழ்பெற்ற தன்ராஜ் மாஸ்டரிடம் இசை கற்க  சென்னைக்கு வந்த போது , உன்னுடைய பெயரை ராஜா என மாற்றிக்கொள் என்றார். நான் பாடிய அன்னக்கிளி பாடலுக்காக 'அன்னக்கிளி' படம் எடுத்தவர் அவர். அதற்கு முன்னர் கோவர்த்தனன் என்ற இசையமைப்பாளரிடம் பணியாற்றியபோது, 'வரப்பிரசாதம்' என்ற படத்தில் கோவர்த்தன ராஜா என வைத்துக்கொள்ளலாம் என்றபோது, வேண்டாம் என்றார். பின்னர், ராஜா என வைத்துக்கொள்ளலாம் என்றதற்கு, வேண்டாம் என்றார். பாவலர் பிரதர்ஸ் பெயரும் வேண்டாம் என்றார். `A.M. ராஜா ஏற்கெனவே உள்ளார். எனவே, உனது பெயரை இளையராஜா என வைத்துக்கொள்’ என்றார். அதிலிருந்து இளையராஜா என்றானது. 

100 படங்கள் முடித்த பிறகு மனநிலை எப்படி இருந்தது ? 

100 படங்கள் முடித்த பிறகு மிகவும் சாதாரண மனநிலையில்தான் இருந்தேன், சாதித்த மனநிலையெல்லாம் இல்லை. மிகவும் வேகமாகக் கடந்தது ஒவ்வொரு படமும். முதலில் 'அன்னக்கிளி' படம் பண்ணும்போது பாலுமகேந்திரா கேட்டார், அடுத்த படம் பண்ணலாம் என்று. ஆனால், வேகமாக ஒவ்வொரு படமும் முடிந்ததால், 100-வது படம் முடிந்த பிறகே அவர் தொடர்பு கொண்டார். அப்போது, `2-வது படம் பண்ணலாம்னு சொன்னவர் இப்போ, 100 படம் முடிச்சிட்டயே’ என்றார் ஆச்சர்யத்துடன் .

நீங்கள் இசை அமைக்கும்போது எந்தப் பாடகி குரலுக்கு மெய் மறந்தீர்கள்? 

மெய் மறந்தால் மட்டுமே இசை வரும். இயக்குநர் சொல்லும்போதெல்லாம் இசை கொடுத்தான் என்னுடைய நண்பன் ஆர்மோனியம். இவனே, எனக்கு உலகின் சிறந்த நண்பன். ஒரு குருவி கத்துவதைப் போல, அருவி கொட்டுவதைப் போல இசை வர வேண்டுமே தவிர, தூண்டுதல் ஒருபோதும் வராது. தனித்துவமான குரல் என்றால் பானுமதி அம்மாவின் குரல் மட்டும்தான். மேலும், சுசீலா, ஜானகி போல நிறையப் பேரால் பாட முடியும். என்னைப் பொறுத்தவரை மிகவும் தனித்துவமாக இருப்பது பானுமதி அம்மா மற்றும் என்னுடைய மகள் பவதாரணியின் குரல்கள் மட்டுமே. அந்தக் குரலை மிகவும் சரியான பாடலில் பாடவைக்க வேண்டும் என்பதே முக்கியம்.

'தம்பிக்கு எந்த ஊரு'படத்தில் பணியாற்றும்போது மருத்துவமனையில் இருந்தீர்கள்... அந்தப் படத்தில் இடம்பெற்ற காதலின் தீபம் பாடல் அனுபவம் பற்றி? 

'தம்பிக்கு எந்த ஊரு' படம் போய்க்கொண்டிருக்கும்போது மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். 'பாடவே கூடாது என்று டாக்டர் சொன்னார். அப்போது ஒரு பாடல் மிக அவசியமாகத் தேவைப்பட்டதால், விசில் மூலமாக ட்யூன் கொடுத்தேன். பின்னர், அதை ட்யூனுக்கு ஏற்றார்ப்போல இசையமைத்தனர். அப்படி கொடுத்ததுதான் `காதலின் தீபம் ஒன்று... ஏற்றினாளே  என் நெஞ்சில்’ பாடல்.

இளையராஜா முன்னிலையில் பாடல் 

 வளர்ந்துவரும் இசையமைப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்? 

இன்னும் வளரவே இல்லை என்பதே எனது பதில். இசையமைப்பாளர்கள் வளர வேண்டும். மக்களைக் கவர வேண்டும் என்பதுதான் எனது கருத்து. நீங்கள் கேட்கும் பாடல்களை நான் கேட்க முடியாது. உங்கள் பார்வை வேற மாதிரி இருக்கிறது. உள்வாங்கும் தன்மையும் வேற மாதிரி இருக்கும். எனக்குத் தெரியாத ஒன்றே இப்போது வரும் பாடல்களில் நடப்பதில்லை என்னும்போது, அந்தப் பாடல்கள் எப்படி என்னைக் கவர முடியும்? முன்பு வந்த பாடல்களில், பல பாடல்கள் சிறந்த பல்லவிகள் என்னைக் கவர்ந்துள்ளன.  அந்தப் பாடல்களைக் கேட்கும்போது, அது விண்ணைத் தாண்டி என்னை எடுத்துச்செல்ல வேண்டும். அதுபோல இப்போது வரும் பாடல்கள் செய்வதில்லை. 

உங்கள் பாடல்களில் பக்தி கலந்து பல பாடல்கள் உள்ளன. உங்களைப் பொறுத்தவரை இசையிலிருந்து ஆன்மிகம் வந்ததா அல்லது ஆன்மிகத்தில் இருந்து இசை வந்ததா? 

இசையும் ஆன்மிகமும் வேறு வேறு அல்ல. இசைதான் ஆன்மிகம். ஆன்மிகம்தான் இசை. 

மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது? 

ஒரு பொருளைத் தேர்வுசெய்யும்போது சரியாகத் தேர்வுசெய்யுங்கள். அதை மிகவும் ஆர்வமாக, சரியான முறையில் குருவிடம் கேட்டு தெளிவாகக் கற்றுக்கொள்ளுங்கள். நான் சென்னை வரும்போது, கையில் ஒரு பைசாகூட கொண்டுவரவில்லை. 'நம்பிக்கை' என்ற ஒன்றை மட்டுமே கொண்டுவந்தேன். எனவே, எதையும் எதிர்பார்க்காதீர்கள். எது அமைகிறதோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள். எதுவாக வேண்டுமானாலும் வரட்டும்.தொடர்ந்து போராடுங்கள், முயற்சி செய்யுங்கள்’’ என்றார். 

இறுதியாக, தனது பிறந்தநாள் விழாவை பண்பாடு விழாவாகக் கொண்டாடும் அந்த தனியார் கல்லூரிக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட இசைஞானி இளையராஜா, கல்லூரி மேலும் வளர வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க