வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (30/11/2018)

கடைசி தொடர்பு:20:02 (30/11/2018)

`நம் சகோதர சகோதரிகளுக்கு இணைந்து உதவுவோம்' - கஜா புயல் பாதிப்பு குறித்து அமீர்கான் ட்வீட்!

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு அனைவரும் இணைந்து உதவுவோம் என அமீர்கான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமீர்கான்


கஜா புயலின் கோரப்பசிக்கு டெல்டா மாவட்டங்கள் பலியாகியுள்ளன. மீளமுடியாத பாதிப்பில் அப்பகுதி மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். தமிழகத்துக்கே உணவளித்த டெல்டாவாசிகள், ஒருவேளை உணவுக்காக கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விரைவில் டெல்டாவை மீட்போம் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. மாணவர்கள், இளைஞர்கள், இயக்கங்கள், என்.ஜி.ஓ-க்கள், அரசியல் கட்சிகள், திரையுலகத்தினர் எனத் தமிழகம் முழுவதிலுமிருந்தும் உதவிக்கரங்கள் நீண்டுகொண்டிருக்கின்றன. அண்டை மாநிலமான கேரளாவும் கஜா பாதிப்பிலிருந்து மக்களை மீட்க நிவாரண உதவி வழங்கியுள்ளது.

இதற்கு நடிகர் விஜய் சேதுபதி நன்றிதெரிவித்து தனது ட்விட்டரில், ``புயல் தாக்கிய அடுத்த நாளே நிவாரணப் பொருள்களை அனுப்பியதோடு இன்று தமிழர்களின் துயரைத் துடைக்கும் விதத்தில் தற்போது 10 கோடி ரூபாய் நிதியையும் அறிவித்த கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களின் சகோதரத்துவ மனிதம் கண்டு மகிழ்ச்சியோடும் நன்றிகளோடும் வணங்குகிறேன்...'' என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமீர்கான், தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களை மீட்க அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர், ``தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்டுள்ள பேரழிவை அறிந்து வேதனையடைந்தேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட நம் சகோதர, சகோதரிகளுக்கு உதவ வேண்டும். நம்மால் முடிந்த முயற்சிகளையும் பங்களிப்பையும் அளிக்க வேண்டும்'' எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.