வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (03/12/2018)

கடைசி தொடர்பு:14:50 (03/12/2018)

 ‘அடுத்து கமல் சாருடன் நடிக்கிறேன்’ - கன்ஃபார்ம் செய்த காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால், அடுத்தாக கமல் ஹாசனுடன் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் தற்போது தெலுங்குப் படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். தெலுங்கு இயக்குநர் ஸ்ரீனிவாஸ் மாமில்லா தற்போது இயக்கிவரும் படம்,  ‘கவசம்’. இதில், நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய காஜல் அகர்வால், “நான் மீண்டும் சாய் உடன் ஒரு படம் நடிக்க உள்ளேன். அது மட்டுமல்லாது, கமல் சாருடனும் ஒரு படம் நடிக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், அடுத்ததாக 'இந்தியன் -2' மற்றும் 'தேவர் மகன் -2' ஆகிய படங்களில் நடிக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். சங்கர் இயக்கத்தில், லைகா புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில், இந்தியன் - 2 படத்தில் கமல் நடிக்க உள்ளதாக, அவரது பிறந்தநாள் அன்று அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகின. கமல் முன்னதாக அறிவித்த  இரண்டு படங்களில், இந்தியன் - 2 படமே முதலில் படமாக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலின் அறிவிப்பின்படி, அவர் கமலின் 'இந்தியன் - 2' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.