Published:Updated:

திரைக்கதை, வசனம்: மு.கருணாநிதி

திரைக்கதை, வசனம்: மு.கருணாநிதி

காலத்தின் குரல்ராஜன்குறை

திரைக்கதை, வசனம்: மு.கருணாநிதி

காலத்தின் குரல்ராஜன்குறை

Published:Updated:
திரைக்கதை, வசனம்: மு.கருணாநிதி
திரைக்கதை, வசனம்: மு.கருணாநிதி

‘திரைப்பட வரலாறு, அரசியல் வரலாறு ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்கள் நன்கறிந்த செய்தி,  இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்திய சுதந்திரம் ஆகியவற்றுக்குப் பின், தமிழ் சினிமா புதியதொரு வடிவெடுத்தது என்பதும் அதில் திராவிட இயக்கம், குறிப்பாக 1949-ல் தொடங்கப்பெற்ற தி.மு.க சார்ந்தவர்கள் குறிப்பிடத்தக்கப் பங்குவகித்தார்கள் என்பதும். இதன் பொருட்டே அந்தக் கட்சி, ‘கூத்தாடிகள் கட்சி’ என்று இகழப்பட்டது. தமிழ் சினிமாவும்கூட வசனத்தையே நம்பி வாழ்வதாக இழித்துரைக்கப்பட்டது.

இப்போது பரவலாக தி.மு.க என்ற அரசியல் கட்சிக்கு, அதன் ஆட்சியின் சிறப்பம்சங்கள் சார்ந்து மரியாதை கிடைத்துள்ளது. ஆனால், இன்னமும் அந்தக்கால சினிமாவின், அதில் ஏற்பட்ட மாற்றத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டதாகத் தெரியவில்லை. அதைப் புரிந்துகொள்ள நாம் ‘திரைக்கதை, வசனம்: மு.கருணாநிதி’ என்பதன் முழு அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘பராசக்தி’ (1952) திரைப்படம் தொடங்கும்போது, முதல் தலைப்புக் காட்சி, ஆங்கிலத்தில் ‘National Pictures Presents’ என்கிறது. பின்னணியில் தாமரை இலைகள். அடுத்த காட்சி, Parasakthi என்ற படத்தலைப்பு. மூன்றாவது, ‘Produced at AVM Studios: Recorded on RCA Sound System’ நான்காவது, ‘Screenplay and Dialogues: M.Karunanidhi’ தொடர்ந்து, ‘Direction: Krishnan Panju’ அடுத்து, இதே வரிசையில் தமிழில் வரும்போது, ஏ.வி.எம் ஸ்டூடியோ-வுக்குப் பதிலாக மூன்றாவது காட்சியாக, ‘மூலக்கதை: M.S.பாலசுந்தரம்’ என்றும் தொடர்ந்து ‘திரைக்கதை, வசனம் மு.கருணாநிதி’ என்றும் வருகிறது. அதற்குப் பிறகு, பத்துக் காட்சிகள் கடந்துதான் நடிகர்கள் பட்டியல் ஒரே காட்சியாகவும் நடிகைகள் பட்டியல் அடுத்த காட்சியாகவும் வருகிறது.

இரண்டாண்டுகள் கழித்து வெளிவந்த  ‘மனோகரா’ படத்தில், முதல் காட்சி அரண்மனை சபா மண்டபம் பின்புலத்தில் ஆங்கிலத்தில் ‘Manohar Pictures presents MANOHARA’ என்றும் அடுத்த காட்சியில்  ‘With Sivaji Ganesan as Manoharan’ என்றும் வருகிறது. தொடர்ந்து தமிழில் தயாரிப்பு நிறுவனம், படத்தலைப்பு, முதல் இரு காட்சிகளாகவும், மூன்றாவதாக ‘கதை: நாடகப் பேராசிரியர் ராவ்பகதூர் P.சம்பந்த முதலியார்’ என்றும் நான்காவதாக  ‘திரைக்கதை வசனம்: கலைஞர் மு.கருணாநிதி’ என்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழில் சிவாஜி கணேசன் பெயர், நடிகர் பட்டியலில் ஒன்றாகத்தான் வருகிறது.

திரைக்கதை, வசனம்: மு.கருணாநிதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘மனோகரா’ வெளிவந்த அதே 1954-ம் ஆண்டில் வெளிவந்த ‘மலைக்கள்ளன்’ படத்தில், ‘பக்‌ஷிராஜா ஸ்டூடியோஸ்’ வழங்கும் நாமக்கல் கவிஞரின் ‘மலைக்கள்ளன்’ என்று கதாசிரியருடன் சேர்த்தே படத்தலைப்பு வருகிறது. அதற்கடுத்த காட்சிப்படுத்தல், ‘வசனம்: மு.கருணாநிதி’. இந்தப் படத்தில்  ‘திரைக்கதை’ என்ற வார்த்தை, தலைப்புக் காட்சிகளில் இடம்பெறவில்லை.

‘பராசக்தி’ வெளிவந்த 1952-ம் ஆண்டு, கலைஞர் கருணாநிதிக்கு 28 வயது. அவருடைய பெயரை ‘திரைக்கதை, வசனம்’ என்று முதன்மையாகப் படத்தின் பெயருக்கு அடுத்து காட்சிப்படுத்திய விதம் சிந்தனைக்குரியது. கலைஞரை வசனகர்த்தா என்று குறிப்பிடும்போது, திரைக்கதை என்ற அம்சத்தை மறந்துவிடுகிறோம். அதையும் கடந்து ஏன் திரைக்கதையும் வசனமும் ஒருவராலே எழுதப்படுகிறது என்பதையும் சிந்திக்க வேண்டும். அதற்கு முன்னால், அவருடைய இந்தப் பங்கேற்பின் காலகட்டம் குறித்துச் சில செய்திகளை நினைவுகூர வேண்டும்.

ஒரு ஒப்பீட்டுக்கு நாம் 1944-ம் ஆண்டு வெளியாகி மூன்று தீபாவளிகள் கண்ட  ‘ஹரிதாஸ்’ திரைப்படத்தை எடுத்துக்கொண்டால், அந்தப் படம் பாடல்களின் தொகுதி என்று சொல்லிவிடலாம். கிட்டத்தட்ட  ‘இசைநாடகம்’ அல்லது ‘ஓபரா’போல எல்லா நிகழ்வுகளுமே பாடல்களாலேயே நிரம்பியுள்ளதைக் காண முடியும். கதாபாத்திரங்கள் தங்களின் முக்கியமான மனஉணர்வுகள் அனைத்தையும் பேசுவதைக் காட்டிலும் பாடியே வெளிப்படுத்தும்.

இந்தப் பாடல்களின் ஆதிக்கத்திற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஒரு முக்கியக் காரணம், எவ்வகையான தமிழில் உரையாடல்களை அமைப்பது என்ற சிக்கல். பேச்சுமொழியில் உரையாடல்களை அமைத்தால், அது உணர்வுகளைத் தாங்க முடியாமல் கொச்சையாக அமைந்து விடுவதோடு, ஏதோவொரு சமூகம், அல்லது வட்டாரம் சார்ந்த பேச்சு வழக்காகவும் இருந்துவிடுவதும் ஒரு பிரச்னை. முக்கியமாக ராஜா ராணி படங்களில் இந்தப் பேச்சு
மொழியும் சமூக வட்டார உச்சரிப்புகளும் பொருந்தாமல் நிற்பது ரசக்குறைவானது.

உதாரணத்திற்குச் சொன்னால், ஜெமினியின் புகழ்பெற்ற ‘சந்திரலேகா’ படத்தில், கதாநாயகி தப்பியோடும் காட்சியில் வெளியில் உள்ள காவலர்களையும் குதிரை வீரர்களையும் சுட்டிக்காட்டி “இவா ஊதினா, அவா வருவா” என்று கூறுவது, அசந்தர்ப்பமான கொச்சை வழக்காகவும் சரியான உணர்வுகளை வெளிப்படுத்தாமலும் அமைவதைக் காண முடியும்.

திரைக்கதை, வசனம்: மு.கருணாநிதி

இந்தச் சூழலில்தான் பாடல்களின்றி வசனத்திலேயே உணர்வுகளை வெளிப்படுத்தும் வண்ணம் வசனம் எழுதத் திறனாளர்கள் தேவைப்பட்டார்கள். அந்த வசனங்கள் தமிழ் உரைநடையாகவும், அதே சமயம் மக்களுக்குப் புரியும்படியும் ரசிக்கும்படியும் அமைய வேண்டியதும் அவசியம்.

இத்துடன் நாம் சினிமா என்ற ஊடகத்தின் தனித்துவத்தையும் கவனிக்க வேண்டும். நாடக வசனங்களைக்கூட ஊருக்குத் தகுந்தபடியும் நடிகர்களுக்கு ஏற்றபடியும் சற்றே கூட்டிக்குறைத்து உச்சரிப்புகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஆனால், சினிமாத் திரை என்பது அனைத்துப் பார்வையாளர்களுக்கும் சேர்த்து ஒரே ஒருமுறை பதிவாகும் பிம்பங்கள், ஒலிகளை நம்பி இயங்குவது. வேறு வார்த்தைகளில் சொன்னால், சினிமாத் திரை, சமூக ஒருங்கிணைப்பின் வெளி.
சினிமாவின் இந்தப் பண்பு எல்லா மொழிப் பிரதேசங்களுக்கும் நாடுகளுக்கும் உரியதுதான். ஆனால், தமிழகத்தில் ஓர் அபூர்வ இணைப்பு நிகழ்ந்தது. மக்களாட்சி அரசியல் என்பதும் சமூக ஒருங்கிணைப்பை நோக்கமாகக்கொண்டது. அரசியல்ரீதியாகச் சமூக ஒருங்கிணைப்பை நிகழ்த்த விரும்பிய இயக்கத்தினர், சினிமாத் திரையின், திரைப்படத்தின் சமூக ஒருங்கிணைப்பு வெளியிலும் இயங்கியதால், திரைப்படம் அளப்பரிய சமூக ஆற்றலைப் பெற்றது.

கதாபாத்திரங்களின் உணர்வுகளை, அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவான உச்சரிப்புகளைக்கொண்ட ஆற்றல் மிகு வசனங்களில் ஒருவர் தர முடியும் என்றால், திரைக்கதையும் அதற்கேற்றாற்போல வடிவமைக்கப்பட வேண்டும். பாடல் தோரணமான திரைக்கதைக்கும் வசனத்தை அச்சாகக்கொண்ட திரைக்கதைக்கும் சில முக்கிய வேறுபாடுகள் உண்டு. உரைநடை வசனங்கள் அன்றாட வாழ்வுத் தருணங்களுக்கு அணுக்கமானவை. ராஜா, ராணி படமோ, சமூகப் படமோ, கதாபாத்திரங்களைப் பாடல்களின் நாடகீய உணர்வுகளிலிருந்து விடுவித்து, சற்றே இயல்பாகப் பேசக்கூடிய சாத்தியங்கள் அதிகரிக்கச் செய்பவை. இத்தகைய வசனங்களிலும் மிகையானவை, வசனங்களைத் தவிர்த்த முகபாவங்கள். அசைவுகள், பிம்பங்களே மேலும் அன்றாடத்தன்மைகொண்டவை என்ற விமர்சனமும் மாற்றமும் 70-களில் ஏற்பட்டாலும், பாடல்களிலிருந்து வசனத்திற்கு நகர்ந்த 50-களின் முக்கியத்துவத்தை நாம் ஆராய்ந்து அறிய வேண்டும்.

திரைக்கதை என்பது, செயல்வெளியாகிய திரைபிம்பங்களையும் வசனங்களாகிய பாத்திரங்களின் உணர்ச்சிகளையும் ஒருங்கிணைப்பது. உணர்ச்சிகளின் வெளிப்பாட்டுமுறை மாறுவதைப் பொறுத்து, செயல்வெளியாகிய திரைப்பிம்பங்களும் அவற்றை வரிசைப்படுத்தும். திரைக்கதையும் மாற்றமடைவது இன்றியமையாதது. ஒரு சுருக்கமான சூத்திரமாகச் சொன்னால்,  ‘புதிய உணர்ச்சி வெளிப்பாடு – புதிய செயல்வெளி’ எனலாம்.

இந்தப் புதிய உணர்ச்சி வெளிப்பாடு என்பது, தமிழ் மொழியின் புதிய நடையாகவும் சொல்லணியாகவும் பேசுகின்ற பாணியாகவும் மாறும்போது, அது திரைவெளியின் செயலை மட்டும் தீர்மானிக்காமல், சமூகத்தையும் புதிய செயல்வெளியாகவும் தமிழ் பேசுபவர்களின் ஆளுமையை மாற்றியமைப்பதாகவும் ஆற்றல்பெற்றது. இதுவே, தமிழில் சினிமா என்ற திரைப்படக்கலை மிக வித்தியாசமான ஆகிருதியை அடைவதற்குக் காரணமாகும்.

திரைக்கதை, வசனம்: மு.கருணாநிதி

வசனங்களின் ஆற்றல் கட்டமைக்கும் அகவெளியை, உணர்ச்சிகளைத் தன் முகத்தில் வெளிப்படுத்த முடிந்ததால்  ‘பராசக்தி’ என்ற ஒரே படத்தில் நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்து, இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே ‘with Sivaji
Ganesan as Manoharan’ என்று தலைப்புக் காட்சியை உருவாக்கிக்கொண்டார் சிவாஜி.

வசனங்களின் ஆற்றல் கட்டமைக்கும் புறவெளியைச் செயல்வெளியாகக்கொண்ட எம்.ஜி.ஆர், சாகசக் காட்சிகளின்மூலம் பெரியதொரு நட்சத்திர நடிகராக மாறினார்.

அகவெளி வெளிப்பாடுகள், புறவெளிச் செயல்பாடுகள் இரண்டிற்குமான ஊற்றுக்கண் மொழியின் பயன்பாடாகவே அமைந்தது. அந்த மொழியினைத் தன் வசனங்கள் மூலமும் அதையொட்டிய திரைக்கதையின் மூலமும் உருவாக்கிய கருணாநிதியே சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவரையும் உருவாக்கினார் என்பது இன்று பலரும் ஏற்றுக்கொள்ளும் கருத்தாகவே இருக்கிறது.

இந்த மொழியாற்றலைக் கலைஞர் தன் நாடகங்களில் பயன்படுத்தினார்; மேடைப்பேச்சில் பயன்படுத்தினார்; எழுத்தில் பயன்படுத்தினார். அவருடைய நாடகங்கள் கட்சிக்குத் தேர்தல் நிதி திரட்டவென்றே எழுதி, நிகழ்த்தப்பட்டன. அவையெல்லாம் முக்கியம் என்றாலும்கூட, திரைவெளியில் அகவெளியையும் செயல்வெளியையும் இணைத்தது; புதியதொரு சமூகவெளியை, அரசியல் களத்தைக் கட்டமைப்பதில் சிறப்பாகச் செயலாற்றியது.

சுருங்கச் சொன்னால், மொழியாற்றல்-அகவெளி உணர்வுகள், புறவெளிச்செயல்பாடுகள் இரண்டையும் கட்டமைப்பது என்பதையும், அந்த இரண்டும் இணைந்ததே திரைவெளி என்பதையும் உணரும்போது, திரைக்கதை அமைப்பது என்பது வரலாற்று உணர்வை, வரலாற்றைக் கட்டமைப்பது என்பதற்கு நெருக்கமானது என்று புரிந்துகொள்ளலாம். ஏனெனில், திரைநிகழ்வு என்பது இத்தகைய உணர்வு-செயல் இணைப்பை ஒரு சிறிய இயந்திரமாக மாற்றிச் சமூகவெளியில் செயல்படவைக்கிறது. அந்தச் செயல்பாட்டில் மெள்ள சமூகமாற்றம் என்பது விகசிக்கிறது. எனவே, நவீனத் தமிழக வரலாற்றை ஒரு திரைப்படமாகக்கொண்டால், பல்வேறு தலைப்புக் காட்சிகளில் ஒன்றாக ‘திரைக்கதை, வசனம்: மு.கருணாநிதி’ என்பதையும் சேர்க்கலாம்.