வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (05/12/2018)

கடைசி தொடர்பு:08:56 (05/12/2018)

சீனாவில் களமிறங்கும் சிட்டி - '2.0' ரிலீஸுக்கு தேதி குறித்தது லைகா

சீனாவில் '2.0' திரைப்படத்தை வெளியிட, லைகா நிறுவனம் ஏற்பாடுசெய்துள்ளது.

 2.0

கடந்த 29-ம் தேதி வெளிவந்த '2.0' திரைப்படம், சிட்டி முதல் பட்டிதொட்டி வரை வெற்றிகரமாக ஓடிவருகிறது. ஷங்கரின் அக்யூரேட் இயக்கமும், ரஜினி, அக்‌ஷயின் நடிப்பும், VFX விஸ்வரூபமும், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. 2.0 திரைப்படம், நான்கு நாள்களில் 400 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருப்பதாக, படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. "இது, சாதாரண பிளாக்பஸ்டர் அல்ல, மெகாபிளாக் பஸ்டர்” என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சீனாவிலும் 2.0 திரைப்படத்தை வெளியிட, லைகா நிறுவனம் ஏற்பாடுசெய்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவின் மிகப்பெரிய படமான 2.0 திரைப்படத்தை, சீனாவிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறோம். அதற்காக, டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களின் திரைப்படங்களை விநியோகிக்கும் HY மீடியாவுடன் கைகோர்த்துள்ளோம். அடுத்த ஆண்டு மே மாதம், சீனாவெங்கும் 10,000 திரையரங்குகளில் இருக்கும் 56,000 திரைகளில், 2.0 திரையிடப்படும். இதுவரை எந்த வெளிநாட்டு 3டி படத்திற்கும் கிடைக்காத பெருமை இது” என்று தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே, 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் சீனாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்புப் பெற்றன. அதேபோல, 2.0 திரைப்படமும் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.